சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 27) மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், “மக்களுக்காக இங்க எல்லாரையும் பேச வைக்க வேண்டும் இது சட்டமன்றம், சண்டை மன்றம் கிடையாது. என்றார். மேலும் ஆதவ் அர்ஜுனாவை சுட்டிக்காட்டி அவர் பேசாத வரைக்கும்” அமைதியா போகுதுங்க என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ” பிரேமலதா மேடம், எங்களுக்கும் விஜயகாந்த் சாரை ரொம்பப் பிடிக்கும்; இதே சட்டசபையில் அவர் எந்த மாதிரி குரல் கொடுத்தார் என்பது எங்களுக்கும் தெரியும். ‘ரௌத்திரம் பழகு’ என்று பாரதி சொல்லியிருக்கிறார். ஒரு தகவல் தவறோ அல்லது உண்மை இல்லை என்றால் மட்டும்தான் நாங்கள் எழுகிறோம்.
இதே பரமக்குடி எம்.எல்.ஏ தொகுதி சார்ந்து பேசியபோது, ‘ஒலிம்பிக் இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் லெவல் அகாடெமி’ திமுக எம்.எல்.ஏ இருக்கும் பரமக்குடியில் வரும் என்று நாங்கள் இதே இடத்தில் அறிவித்தோம். உண்மைக்கு மாறான தகவல் வரும்போது நாங்கள் எழுந்து பதில் சொல்கிறோம். எதிர்க்கட்சி என்பது தீக்குச்சி போல்; அவை அழகாக கேஸை பற்ற வைத்து பால் வைத்தால் நாங்கள் அமைதியாக இருப்போம். நீங்கள் கேஸ் புடுங்கிவிட்டுப் பற்ற வைத்தால் அது வெடிக்கும்; நாங்கள் வெடிக்கும் இடத்தில்தான் இருக்கிறோம்.
நீங்கள் இன்றிலிருந்து ஒரு நோட்டை எடுத்துக்கொள்ளுங்கள்; திமுக பேசும்போது அரசையோ, முதலமைச்சரையோ அல்லது எங்களது கொள்கையையோ தவறு என்று சொன்னால் மட்டும்தான் நாங்கள் எழுந்திருக்கிறோம்” என்றார்.
அப்போது திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவர், “இப்போது கூட பாருங்கள், திமுகவினர் கத்துகிறார்கள்; என்னை மட்டும் நீங்கள் சொன்னால் அது எனக்கு எதிரான பிரச்சாரம் போல் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் அவர்களுடைய குறைகளையும் பிரச்சனைகளையும் சொல்லட்டும், நாங்கள் பதில் சொல்கிறோம். ஆனால், நூறு நாள் வந்த ஆட்சியில் முதலமைச்சர் குறித்தோ, அமைச்சர்கள் குறித்தோ தவறாகச் சொன்னாலும் அல்லது எங்களது கொள்கைகளைத் தவறாகச் சித்தரித்தாலும் நாங்கள் எழுந்திருக்கிறோம்” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “எல்லா விஷயத்திற்கும் ஒரு தொடக்கப் புள்ளி இருக்கிறது; எந்த விஷயம் ஒருவரைப் பேசத் தூண்டுகிறது என்பதற்கான பின்புலமும் உள்ளது. திமுக உறுப்பினர் பேசும்போது, அறிவாலயத்தை வெள்ளை அடிக்க வேண்டும், வாடகை போன்ற விவரங்களை இங்கு குறிப்பிட்டார். நான் பொது மேடையில் பேசிய ஒரு விஷயத்தை அவர் இங்கு எழுப்பியபோது, அதற்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.
நான் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ‘முரசொலி அறக்கட்டளை என்பது ஒரு தனி நபருக்கு அல்லது ஒரு தனி குடும்பத்திற்குரியது; அந்த அறக்கட்டளையில் இருப்பவர்கள் அதை வாடகைக்கு விட்டுவார்கள்’ என்று பொதுக்கூட்டத்தில் தெரிவித்தேன். அதை அவர் இங்கு குறிப்பிடும்போது, அதற்குரிய பதிலை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுபோன்ற வார்த்தைகளை அவர் தவிர்த்துக் கொண்டால், கண்டிப்பாக இது போன்ற வாக்குவாதங்கள் வருவதைத் தவிர்க்கலாம்.
அவைத் தலைவர் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்; கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எப்போதுமே நிதானமாகவும் அமைதியாகவும் நேர்மையாகவும் இருக்கக்கூடியவர்; அவரை எங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். ஆனால், அவையில் எதைப் பேசினால் அவர் சீண்டப்படுவாரோ, அப்படிப்பட்ட விஷயங்களை எழுப்பும்போதே அவர் கோபப்பட்டார். அன்று அமைதியாக இருந்த கேப்டன் அவர்கள் சீண்டப்பட்டு, எந்திரித்து நின்று கோபப்பட்டுப் பேசியதை உலகமே பார்த்தது. அவர் சாதாரணமான சூழலில் கோபப்படவில்லை; யாரோ வேண்டுமென்றே அவரைச் சீண்டும் வகையில் வார்த்தைகளைக் கையாண்டபோதுதான், அவரையும் மீறி அவர் கோபப்பட்டார்.
எப்பவுமே ஒரு வரம்போடு எதைப் பேச வேண்டும் என்பதை விட்டுவிட்டு, நான் பொதுக்கூட்டத்தில் பேசிய ‘முரசொலி அறக்கட்டளை ஒரு குடும்பத்திற்குரியது’ என்பது போன்ற விவகாரங்களை இங்கு இழுக்கும்போது, நாங்களும் அதற்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறோம். அப்படிப் பதில் சொல்லும்போது விவாதம் வேறு திசை நோக்கிச் செல்கிறது. மானியக் கோரிக்கை சம்பந்தமாக விவாதிப்பதை விட்டுவிட்டு, திசை மாற்றுவதற்காகவே அவர்கள் இவ்வாறு பேசுகின்றனர்.” என்றார்.
