அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, திரைப்படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போவது போல் இருக்கும் என்று பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், “அரசின் சார்பில் நான் உன்னிப்பாகக் கவனித்த விஷயம் என்னவென்றால், புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடும் போது அமைச்சர்கள் பக்கம் ஒரு பதற்றமும், ‘நேரம் குறைவாக இருக்கிறது, தலைப்பை மட்டும் படித்துவிட்டுப் போகலாம்’ என்ற சங்கடமான நிலையும் இருக்கிறது. அறிவிப்புகளில்தான் அரசின் உயிர்நாடித் திட்டங்கள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், அந்த அறிவிப்புகளைக் கூட முழுமையாக அமைச்சர்களால் வெளியிட முடியாத சூழல் உள்ளதை எண்ணி நேற்று இரவு சிந்தித்துக் கொண்டிருந்தேன். இதை எப்படி மாற்றலாம் என்று யோசித்தபோது, அமைச்சர்கள் பேசும்போது முன்னுரையாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று கேட்கும் போதே, அவர்கள் அறிவிப்புகளை முழுமையாகப் படித்துவிட வேண்டும்; அதன் பிறகு அவர்கள் பதில் உரையை எப்படி வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளலாம் என்ற யோசனை எனக்கு வந்தது” என்றார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ கே.என். நேரு, “அமைச்சர்கள் பேசுவதற்கு முன்பு அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டுப் பேசலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்பதற்கு முன்பு, அமைச்சர்கள் பதில் சொல்லிவிட்டுத்தான் அதைக் கேட்க முடியும். உறுப்பினர்கள் பேசுவதற்கு முன்பே அறிவிப்புகளைச் சொல்லிவிட்டால், அந்த அறிவிப்புகள் மீது மட்டும்தான் விவாதம் நடைபெறும். எனவே, அமைச்சர்களின் பதிலுரைக்கு முன்பு அறிவிப்பைப் படித்துவிட்டுப் பேசுவதுதான் சரியாக இருக்கும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “கொள்கை விளக்கக் குறிப்பு உங்களுக்கு முதல் நாளே வந்துவிடுகிறது. மானியக் கோரிக்கைகளை ஒட்டிய அறிவிப்புகளும், அரசின் புதிய திட்டங்களும் அந்த அறிவிப்பு முன்னுரையாகக் கூறப்படும்போதே உங்கள் கைகளுக்கு வந்துவிடும். அடுத்து பேச வரும் உறுப்பினர்கள், மானியக் கோரிக்கைகள் மீதும் பேசலாம்; கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை ஒட்டிச் சில ஆலோசனைகளையும் சொல்ல வாய்ப்பு உள்ளது. எல்லாரும் பேசி முடித்த பிறகு, அறிவிப்பில் வரும் பிரச்சினைகள் குறித்து எப்படிப் பேச முடியும்?” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பேரவைத் தலைவராகிய, நீங்கள் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராகவும், அவையில் நீண்ட காலமாக இருந்தவராகவும் இருக்கிறீர்கள். எப்போதும் அமைச்சர்களின் பதிலுரைக்குப் பிறகுதான் அறிவிப்புகள் இருக்கும். எல்லா உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகள் சம்பந்தமாகப் பேசிய பிறகு, அந்த அறிவிப்புகளில் தங்கள் தொகுதிக்கு ஏதேனும் அறிவிப்புகள் வருமா என்று எதிர்பார்ப்பார்கள். அதுமட்டுமல்ல, அறிவிப்பை முன்கூட்டியே கொடுத்துவிட்டால் எல்லா தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் அதுவே ஒளிபரப்பாகும்; அமைச்சர்களின் பதில் வராது. ஆகவே, ஏற்கனவே இருப்பது போல் அமைச்சர்களின் பதிலுரைக்குப் பிறகு அறிவிப்புகள் வெளியிட்டால் சரியாக இருக்கும்” என்றார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “புதிய அறிவிப்பின் நோக்கமே அதுதானே? அரசின் முத்தாய்ப்பான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் இந்த அறிவிப்புகள் இருக்கின்றன” என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு, “நான் பொதுவாகச் சொல்கிறேன்; ஒரு திரைப்படத்திற்குப் போகிறோம் என்றால், திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கடைசியில்தான் இருக்கும். எப்படியும் நீங்கள் இரண்டு மணி நேரம் இருக்கத்தானே போகிறீர்கள், அதைப் பார்க்கத்தானே போகிறீர்கள் என போய் உட்கார்ந்த உடனேயே முதலில் கிளைமாக்ஸைப் போட்டுவிட்டு, அதன் பிறகு யார் படத்தை இயக்கினார்கள் என்பதையெல்லாம் பார்த்தால் அது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும்?” என்றார்.
உடனே சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “என்னுடைய கவலை என்னவென்றால், கிளைமாக்சை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்ற கவலையில்தான் சொல்கிறேன்” என்றார்.
அதற்கு திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, “உங்களுடைய கிளைமாக்சை நாங்கள் நிச்சயமாகப் பார்ப்போம். இன்று காலையில் இருந்து எதை முன்னால் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்று இல்லாமல், காலையில் வந்தவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லிவிட்டுப் பிறகு நீங்கள் பேசுங்கள் என்கிறீர்கள். இப்போது அறிவிப்புகளை முன்னால் விட்டுவிட்டு பிறகு பேசுங்கள் என்கிறீர்கள். பேரவைத் தலைவர் படுத்துக்கொண்டு போர்த்திக் கொள்ளலாம், போர்த்திக் கொண்டும் படுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு சொன்னதுபோல், நீங்கள் தியேட்டருக்குப் போனவுடன் கிளைமாக்சைப் போட்டுவிடுகிறீர்கள்; அதன் பிறகு வேண்டும் என்பவர்கள் இருந்து பாருங்கள் என்கிறீர்கள். மக்கள் கிளைமாக்ஸ் என்னவென்று தெரியாமலேயே போய்விடுவார்களா என்ன? படம் நன்றாக இருந்தால் மக்கள் பொறுமையாக இருந்து தியேட்டரில் கிளைமாக்ஸ் வரை பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ‘இந்த படம் எப்படியும் ஓடாது, இந்த படம் நன்றாக இருக்காது, அதனால் முதலிலேயே கிளைமாக்சைப் போட்டுவிடுவோம்’ என்று சொல்வது போல் இருக்கிறது” என்றார். (இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது)
இதனைத் தொடர்ந்து பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, “இப்போதெல்லாம் படங்களில் இரண்டு கிளைமாக்ஸ்கள் இருக்கின்றன; முதலிலும் ஒரு கிளைமாக்ஸ் இருக்கிறது, இரண்டாவது கிளைமாக்ஸும் இருக்கிறது. எப்போதும் ஒரு மாற்றத்தை விரும்ப வேண்டும்; நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்பவில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்பவில்லை என்றால் எப்படி அது சரியாக இருக்கும்? அறிவிப்புகள் மிகவும் முக்கியமானது என்றுதான் நான் பார்க்கிறேன்” என்றார்.
இதன்பிறகு பேசிய திமுக எம்.எல்.ஏ வேலு, “இதில் அமைச்சர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் ஒரு சங்கடம் இருக்கிறது. முதலில் அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டால், அந்தப் பகுதிக்குப் பொருத்தமான அறிவிப்புகள் இருந்தால் பாராட்டிப் பேசியிருப்போம். எதிர்க்கட்சியினர் வரும்போது ஆரம்பத்தில் இருந்தே ‘இந்த ஆட்சி சரியில்லை, அந்த ஆட்சி சரியில்லை’ என்றுதான் பேச ஆரம்பிப்பார்கள்; கோரிக்கைகளைக் கூட வைக்க இயலாது. அதனால் நீங்கள் எடுத்திருக்கும் முடிவு சரிதான். முதலிலேயே சொல்லாமல், பதில் உரையை அமைச்சர்கள் பேசத் தொடங்கும் போது அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டுப் பேசலாம்” என்றார்.
இறுதியாகப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “நான்கைந்து மானியக் கோரிக்கைகளில், அதற்கு அடுத்த நாள் வரும் செய்திகளையும் தொலைக்காட்சிகளில் வரும் விவரங்களையும் பார்த்தேன். அதில் முக்கியமான சில அறிவிப்புகள் விடுபட்டிருந்தன. அமைச்சர்கள் புத்தகங்களாகக் கொடுத்தாலும் கூட, பேசும்போது எடுத்துச் சொல்லும் விஷயங்கள்தான் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வருகிறது. என்னைப் பொறுத்தவரை, அறிவிப்புகளில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இந்தப் புதிய அறிவிப்பில் ‘என் ஊர் விடுபட்டுவிட்டது’ என்றும் கேட்கலாம். எல்லா உறுப்பினர்களும் பேசி முடித்த பிறகு, அமைச்சர் பதில் உரை சொல்லும்போது அறிவிப்புகளில் இருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றி உறுப்பினர்கள் பேசும் வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள். காரணத்தால், அறிவிப்புகளை முதலில் வெளியிட்டுப் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அதன்படி இந்த நடைமுறை தொடரட்டும்” என்றார்.
