முதல்வர் விஜய்க்கு கடிதம் – கறார் கம்யூனிஸ்டுகள்

Published On:

| By Pandeeswari Gurusamy

CPM Shanmugam's Fierce Questions to CM Vijay

தலைமைச் செயலாளர் இடதுசாரி இயக்கங்களை ஒடுக்க சுற்றறிக்கை வெளியிட்டது மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் சிபிஎம், மற்றும் சிபிஐ கட்சிகள் குறித்து விபரங்களை சேகரித்தது தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் முதல்வருக்கு எழுதிய கடிதம் : தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாக, இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினரின் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இது உயரிய முன்னுரிமை என்றும் மிக அவசரம் என்றும் வகைப்படுத்தப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை (action taken report) கோரப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டவிரோதமானதும், அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை மறுப்பதும் ஆகும். இது திட்டமிட்டு இடதுசாரி அமைப்புகளைக் குறி வைக்கிற செயல் என்கிற முறையில் எங்களது கடும் கண்டனத்தைத் தெரியப்படுத்துகிறோம். அரசின் அதிகார கட்டமைப்பில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் எடுக்கும் முடிவு அரசின் முடிவாகவே கருதப்படும். எனவே, இதுகுறித்து தாங்கள் விளக்கம் அளிப்பது அவசியம்.

ADVERTISEMENT

இடதுசாரி அமைப்புகள் மட்டுமல்ல, எந்தவொரு அமைப்பும் போராடுவதற்கு உரிமை உண்டு. அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஒடுக்குவதற்கு, பல்துறை ஒருங்கிணைப்பை செயல்படுத்துவது அரசமைப்பு சட்டத்திற்கு முரணானதாகும். காவல்துறை உட்பட சுல்வி வளாகங்களுக்குள் சென்று நடவடிக்கை எடுக்கும் சட்டவிரோத செயலை அங்கீகரிப்பதாகும். எனவேதான், தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவர்களின் முடிவை கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்த இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்டுவிட்டோம் என்று சொல்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல; பொருத்தமானதும் அல்ல.

ADVERTISEMENT

மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் மன்னிப்பு கோரியிருக்கிறார். நாங்கள் யாரிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. மாறாக, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என்பதையே வலியுறுத்தியிருக்கிறோம்; இப்போதும் வலியுறுத்துகிறோம். இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரையிலும் பொறுப்பான பதில் ஏதும் சொல்லப்படவில்லை.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்த வட்டத்திற்குட்பட்ட CPI(M), CPI கட்சிகளின் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இது நேரடியான அச்சுறுத்தல் மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், தனது பதவியை தவறாக பயன்படுத்துவதும் ஆகும். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவரது பயிற்சி காலம் முடிந்ததால் இடமாறுதல் செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். பிறகு அவருக்கு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 17 A-யின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதாவது இது சிறு குற்றமாக மட்டுமே அரசால் கருதப்பட்டு மென்மையாக அணுகப்படுகிறது.

மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு சி.டி.ஆர்.நிர்மல்குமார் அவர்கள், வட்டாட்சியரின் கடிதத்திற்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை; சொந்த விருப்பு, வெறுப்பு அடிப்படையில் அவர் அந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். வட்டாட்சியரின் சட்டவிரோதமான இந்த செயலுக்கு அமைச்சரின் பதிலும், துறையின் நடவடிக்கையும் எந்தவகையிலும் பொருத்தமானதல்ல. அரசுப் பதவியில் உள்ள ஒருவர் தனிப்பட்ட நோக்கத்திற்காக செய்தார் (abuse of power) என்றால் அது கடுமையான குற்றமாகும். ஆனால், இதற்குமேல் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்கிற முறையில் அமைச்சர் பதிலளித்திருப்பதும், 17 A பிரிவின் கீழ் விளக்கம் கேட்டிருப்பதும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை அவருடைய தவறுக்கு தண்டிப்பதற்கு பதிலாக, அவரை பாதுகாப்பதற்கான முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் உட்பட தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தலைமைச் செயலாளர் பங்கேற்ற கூட்டத்தின் முடிவு ரத்து செய்யப்பட்டு, அந்த சுற்றறிக்கை முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share