திருமாவளவன் மீது தாக்குதல் நடத்த சதி- வீடியோ ஆதாரங்களுடன் விசிக புகார்!

Published On:

| By Pandeeswari Gurusamy

விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் திருமாவளவனைத் தாக்க முயற்சித்ததாக கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளான ஆகஸ்ட் 17-ஆம் தேதி அக்கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டையில் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான விசிக தொண்டர்கள் குவிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

ADVERTISEMENT

மாநாட்டு மேடையில் திருமாவளவனுடன் புகைப்படம் எடுக்க ஏராளமான தொண்டர்கள் முண்டியடித்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேடையில் குவிந்த தொண்டர்களைக் கீழே இறங்குமாறு திருமாவளவன் கடும் கோபத்தோடு எச்சரித்தார். கூட்ட நெரிசலில் மூச்சு விடுவதற்குக் கூட சிரமப்படும் அளவிற்கு அவர் மயக்கமடையும் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிர்வாகிகள் திருமாவளவனுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். இதனை அடுத்து சுதாரித்த திருமாவளவன், கடும் கோபத்துடன் மேடையில் இருந்த தொண்டர்களைக் கீழே இறங்குமாறு மீண்டும் வலியுறுத்தினார். சூழலைக் கருத்தில் கொண்டு, மிகச் சுருக்கமாகத் தனது உரையை முடித்துவிட்டு அவர் புறப்பட்டார்.

ADVERTISEMENT

மாநாட்டு மேடையில் கூட்ட நெரிசலில் திருமாவளவன் சிக்கிய வீடியோக்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து திருமாவளவன் வெளியிட்ட வீடியோவில் ” கரூர் துயர சம்பவம் போல் மற்றொரு சம்பவம் நடக்காமல் இருப்பதற்காகவே எனது உரையைச் சுருக்கமாக முடித்துக் கொண்டேன்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், “உளுந்தூர்பேட்டையில் விசிக மாநாட்டு மேடையில் கூடிய கூட்டம் இயற்கையாக வந்த கூட்டம் போல் தெரியவில்லை. ஏதோ சமூக விரோதிகளால் தூண்டிவிடப்பட்டு கூட்ட நெரிசலை ஏற்படுத்தியது போன்றிருந்தது. மாநாட்டு கூட்ட நெரிசலில் அடையாளம் தெரியாத நபர்கள் திருமாவளவனைத் தாக்க முயற்சித்ததற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன” என விசிக சார்பில் கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமாவளவனுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். விசிகவினரின் இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருமாவளவனைத் தாக்கச் சதித் திட்டம் தீட்டியதாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போதே திருமாவளவனுக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசில் விசிக அங்கம் வகிக்கும் தற்போதைய சூழலில், திருமாவளவனுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share