கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசிய மாநாட்டில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் முன் கூட்டியே மாநாட்டை முடிக்கும் சூழல் உருவானது. இந்த மாநாட்டில் விசிக தலைவர் தொல் திருமாவளன் தனது உரையை மிக சுருக்கமாக முடித்தார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோவில் “கரூரில் நடந்தது போல் இங்கு நடந்துவிடக் கூடாது, மக்களைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும், நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் நிலை உருவாகிவிடக் கூடாது என்கிற பதற்றமும் எனக்குள் இருந்தது.
எனவே ஓரிரு நிமிடங்களில் நான் உரையை நிறைவு செய்து, ‘அனைவரும் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன்.
இன்னும் சில நிமிடங்கள் நான் பேசிக்கொண்டே இருந்திருந்தால், அந்த நெரிசல் எந்த அளவுக்குப் போயிருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அளவுக்குக் கடல் அலை வீசுவது போல், தோழர்கள் ஒருவரை ஒருவர் தாங்கிப் பிடித்துத் தற்காத்துக் கொள்ளும் போராட்டத்தில் தான் இருந்தார்கள் என்பதை நேரில் பார்த்தவர்கள் உணர முடியும்.
இதுவரையில் நாம் நடத்திய எந்த மாநாட்டிலும் இல்லாத அளவுக்கு, புதிய இளைஞர்கள் லட்சக்கணக்கிலே திரண்டிருந்தார்கள் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று. 20 வயதிலிருந்து 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், ‘Gen Z’ என்று சொல்லப்படக்கூடிய அந்த இளைஞர்கள் வழக்கத்திற்கு மாறாகப் பெருமளவில் இந்த மாநாட்டிற்குத் திரண்டு வந்திருந்தார்கள் என்பதும் ஒரு காரணம்.
அவர்கள் அத்தனை பேரும் என்னோடு அந்த நெரிசலிலும் கூட, மரண பயம் மேலோங்கியிருந்த நெரிசலிலும் கூட, என்னோடு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் காட்டிய ஆர்வம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
‘பாதுகாப்பாகத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று ஒவ்வொருவரையும் நான் அந்த நெரிசலிலும் கேட்டுக்கொண்டேன்.
வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர்கள் என மாநாட்டிற்கு வந்தவர்கள் இந்த நெரிசலில் சிக்கிக் கொள்ளக் கூடாது, மாற்றுத் திறனாளிகள் இந்த நெரிசலில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்ற கவலை எனக்கு மேலோங்கியதால், மூன்று நிமிடங்களுக்குள்ளாக எனது உரையை நான் நிறைவு செய்துவிட்டேன்.” என தெரிவித்துள்ளார்.
