சிபிஐ, சிபிஎம் உறுப்பினர்கள் விவரத்தை சேகரிக்க வட்டாட்சியர் திடீர் உத்தரவு! பின்னணி என்ன?

Published On:

| By Mathi

Tahsildar Transferred

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இருக்கும் சிபிஐ, சிபிஎம் கட்சியின் உறுப்பினர்கள் விவரங்களை வட்டாட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜிலியம்பாறை வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு விவரம்:

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின்

ADVERTISEMENT
  • பெயர்
  • முகவரி

ஆகியவற்றை சேகரித்து வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியரிடம் 18.08.2026 மாலைக்குள் நேரடியாக சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து கிராம உதவியாளர்களும் வருவாய் ஆய்வாளர்களுக்கு உதவிட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

அறிக்கை அளிக்க தவறும் கிராம உதவியாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு வட்டாட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த பகிரங்க சுற்றறிக்கையானது,

  1. கோட்டாநத்தம், பாளையம், கோவிலூர் வருவாய் ஆய்வாளர்கள்
  2. தலைமையிடத்து துணை வட்டாட்சியர்- மண்டல துணை வட்டாட்சியர்
  3. பழனி வருவாய் கோட்டாட்சியர்
  4. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிபிஎம் அதிர்ச்சி- சச்சிதானந்தன் எம்.பி. கண்டனம்

இது தொடர்பாக திண்டுக்கல் மக்களவை தொகுதி எம்.பி. சச்சிதானந்தன் தமது சமூக வலைதளப் பக்கத்தில், “ கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்திலும், அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்திலும் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை.

ஒரு தேசிய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் பற்றிய விவரம் சேகரிக்க சொல்லி பகிரங்க சுற்றறிக்கை அனுப்பும் வானளாவிய அதிகாரம் குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளதா?

மணல் கடத்துவோர் பட்டியலையோ, ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியலையோ, குற்றவாளிகள் பட்டியலையோ இதுபோன்று சுற்றறிக்கை போட்டு சேகரித்து வைத்துள்ளாரா?

பொதுமக்கள் வட்டாட்சியரை சந்திப்பதற்கு வாரத்தில் நான்கு நாட்கள் பகல் 12 to 1 மணி வரை மட்டுமே எனவும் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது எனவும் அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்தும் அய்யாசாமி என்ற வட்டாட்சியரை வருவாய்த்துறை திரும்பப் பெற்றுக் கொண்டு மக்களுக்கு உதவ வேண்டுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

பின்னணி இதுதானா?

திண்டுக்கல் மாவட்ட சிபிஎம் கட்சியின் குஜிலியம்பாறை மற்றும் வேடசந்தூர் ஒன்றிய குழுக்கள் சார்பாக வரும் 20-ந் தேதி வட்டாட்சியர் அய்யாசாமியைக் கண்டித்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சிபிஎம் வெளியிட்ட துண்டறிக்கையில், பொது மக்களிடமும், அரசியல் கட்சி CPI(M) தலைவர்களிடமும் அதிகார ஆணவ திமிரோடு மனு வாங்க மாட்டேன் என சர்வாதிகாரி போல செயல்படும் குஜிலியாம்பாறை வட்டாட்சியர் ஐயாச்சாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி…

வட்டாட்சியர் அலுவலகம் என்பது சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்கள் குறைகள் மற்றும் தேவைகளுக்காக வந்து செல்லும் மக்கள் அலுவலகம். ஆனால், இந்த அலுவலகத்தில், நான்கு நாட்கள் மட்டும் 12 மணி முதல் 1 மணி வரை அனுமதி, னு கொண்டு வரும் பொதுமக்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என இவரே ஒரு நோட்டீஸ் அடித்து அதை வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் ஒட்டியுள்ளார்.

மேலும், தலித் மக்களை வீட்டு மனைப்பட்டா ஆக்கிரமிப்பு முயற்சியைத் தடுக்க மனுகொடுக்க வந்த CPI(M) தலைவர்களை ஒருமையில் பேசி, அரசியல் கட்சிக்கு என் அலுவலகத்தில் அனுமதி இல்லை எனவும் நானே ஒரு அரசியல்வாதி; நானே ஒரு கட்சிக்காரன்” என மிரட்டி ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் குறைகளை அளித்து வரும் நிலையில், தனக்குத் தானே சட்டம் போட்டுக்கொண்டு 12 மணி முதல் 1 வரை மட்டும் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் மனு வாங்குவேன் என்ற அவரது உத்தரவினை ரத்து செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெறும் இந்த கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் வாரீர் என கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சிபிஐ, சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் விவரங்களை சேகரிக்க வட்டாட்சியர் சுற்றறிக்கை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share