தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா (Karnataka) பாஜகவினர் ”மண்” சாப்பிடும் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீரை திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா மதித்து நடக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போதைய நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரி அணைகளில் இருந்து வினாடிக்கு 18,000 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 4,400 கன அடிநீர்; கபினி அணையில் இருந்து வினாடிக்கு 13,600 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த இரு அணைகளின் நீரும் திருமாகூடலுவில் காவிரியில் கலந்து தமிழ்நாட்டுக்கு வருகிறது.
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளதற்கு எதிராக மண்டியாவில் கர்நாடகா பாஜகவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மண்டியா விஸ்வேஸ்ரய்யா சிலை அருகே நேற்று (ஆகஸ்ட் 18) பாஜகவினரும் விவசாயிகளும் ஒன்று திரண்டு தமிழ்நாட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். காவிரி நீரை திறந்துவிட்ட கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட்டதால் கர்நாடகா விவசாயிகள் இனி ‘மண்’தான் சாப்பிட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி ‘மண்’ சாப்பிடும் போராட்டத்தையும் கர்நாடகா பாஜகவினர் நடத்தினர். இந்த போராட்டத்தால் மண்டியாவில் பதற்றம் ஏற்பட்டது.
