தமிழக சட்டசபையில், “கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் கட்டாயப்படுத்தி பணம் பெற்றனர்” என தாம் பேசியது “லஞ்சம் வாங்கினார்கள் என்கிற அர்த்தம் அல்ல” என நிதி அமைச்சர் மரிய வில்சன் (Marie Wilson) விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களின் போது ஆகஸ்ட் 24-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: எகேஷன் டிபார்ட்மெண்ட் வந்து எனக்கும் அதுல கொஞ்சம் கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. ஓரளவுக்கு வேலு சார் (திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு) எல்லாம் இருக்காங்க, பெரிய எஜுகேஷனிஸ்ட் அவங்க எல்லாம்.
எஜுகேஷன் டிபார்ட்மெண்ட்ல பள்ளி கல்வித்துறை அமைச்சர் இருக்காங்க. அவங்கள்ட்ட அந்த ரிவ்யூ மீட்டிங்ல கூட நிறைய டிஸ்கஷன் போயிட்டு இருந்துச்சு.
நிறைய இப்போ முறைகேடுகள் எல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. நிறைய பேர் மேல் வழக்குகள் எல்லாம் போட்டு இருந்தாங்க.
சில இடத்துல பார்த்தீங்கன்னா, கட்டாயப்படுத்திதான் காசு வாங்கி இருக்காங்க. அதுல ஒரு மிகப்பெரிய ஒரு பாதிப்புக்கு உட்பட்ட ஆள் நான்.
கட்டாயப்படுத்தி… இது வந்து நிறைய இடத்துல வந்து நான் பதிவு பண்ண விரும்புறேன்.
அதுக்கு முழுக்க காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா, இங்க சாட்சி சாட்சின்னு கேக்குறாங்க. எவிடன்ஸ் எவிடன்ஸ் கேக்குறாங்க.
அது டாக்குமெண்ட் எவிடன்ஸ் வந்துட்டு போகுது. இங்க நானே ஒரு எவிடன்ஸ் தான். நானே ஒரு சாட்சி தான்.
பார்மர் எஜுகேஷன் மினிஸ்டர் அவர் சபையில் இல்ல. அப்படி இருந்தா சொல்லி இருக்கணும். பட் வேற வழி கிடையாது. நான் டிஸ்க்ளோஸ் பண்ணக்கூடாதுன்னு சொல்லி பண்ணக்கூடாதுன்னு நினைச்சேன், வழி இல்லை. கடந்த மூன்று நாட்களா இந்த சப்ஜெக்ட் இப்படி சுத்திக்கிட்டே இருக்கு.
இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சு ஆகணும். நாளைக்கு வேணா கேஸ் போட்டுக்கட்டும். டிஃபமேஷன் கேஸ் போட்டுக்கட்டும் இல்ல என்கொயரி போட்டுக்கட்டும், நானே வரேன்.
டைரக்டா வந்து அவரை பேஸ் பண்ணலாம். எந்த இடத்துல, எந்த டி நகர்ல, எந்த இடத்துல, குளோபல் அப்படின்னு ஒரு இடத்துல, எவ்வளவு அமௌன்ட் கொடுத்தோம், எல்லாம் நானே சொல்ல முடியும். எல்லாராலும் சொல்ல முடியும். கிளியரா அமௌன்ட் சொல்ல முடியும்.
இது இது இதுதான் சாட்சி. நான் சொல்லக்கூடாதுன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன் சார். நான் சொல்லக்கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். வேற வழியே கிடையாது.
ஒரு கட்டத்துக்கு அப்புறம் மைனாரிட்டி இன்ஸ்டிடியூஷனுக்கு எவ்வளவு அமௌன்ட் வாங்குனீங்க? இது எல்லாம் நானும் சொல்ல முடியும். இவ்வாறு சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசினார்.

அன்பில் மகேஷ் எச்சரிக்கை
நிதி அமைச்சர் மரிய வில்சனின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஒரு அமைச்சராகப் பொறுப்பு வகித்துக்கொண்டு நானே லஞ்சம் கொடுத்தேன் என்று கூறுவது முற்றிலும் தவறானது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புகூட என் மீது இதேபோன்றதொரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதற்காக ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்பியவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில் இவர் பேசுகிறாரா எனத் தெரியவில்லை.
தான் லஞ்சம் கொடுத்ததாகக் கூறும் அமைச்சர் மீதுதான் முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து நிச்சயமாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் புகார் அளிப்போம். உடனடியாக அந்த அமைச்சரை அழைத்து விசாரணை நடத்த வேண்டும். ‘அன்புமொழி, கருணைமொழி’ மட்டுமே தெரியும் என்று பேசியவர் என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார். அரசு செய்யும் தவறுகளை மறைக்கவே இதுபோன்ற மடைமாற்ற அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

லஞ்சம் கொடுத்ததாக சொல்லவில்லையே..
இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்துக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருக்கும் நிதி அமைச்சர் மரிய வில்சன், கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சட்டசபையில் லஞ்சம் கொடுத்ததாக பேசினீர்களே?” என செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், “சீ.. ஐ வாஸ் நான் வந்து ஒரு விட்னஸ்ஸாதான் இருந்துருக்கேன். சீ, நான் விட்னஸ், அது வந்து லஞ்சம் கிடையாது. லஞ்சம்ன்றது இன் சென்ஸ், அவங்க கட்டாயப்படுத்தி இருக்காங்க. அதாவது ஒரு ப்ராப்பரா டாக்குமெண்ட்ஸ் இருக்கப் பார்த்து டிலே பண்றாங்க இல்லையா? ப்ராப்பர் டாக்குமெண்ட்ஸ்லாம் கொடுப்போம் இல்லையா? அது டிலே பண்ணதனால அந்த கன்சார்ட்டியம் ஆஃப் ஸ்கூல்ஸ், கன்சார்ட்டியம் ஆஃப் காலேஜஸ் ஃபீல் பண்ணதை நான் ரெப்ரசென்ட் பண்ணிருக்கேன். அவ்வளவுதான்” என விளக்கம் கொடுத்துள்ளார்.
