விஜய் ஆட்சி சட்டசபையில் ‘இத்தனை கூத்துகள்’.. லிஸ்ட் போட்டு சிபிஎம் கண்டனம்!

Published On:

| By Mathi

TN CPM Slams Tamil Nadu Assembly Chaos

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் சட்டசபையில், “லாவணி கச்சேரி”தான் நடக்கிறது; தெரு சண்டை போல.. குழாயடி சண்டை போல சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட் 26) முதல் ஆகஸ்ட் 31-ந் தேதி வரை ”மக்கள் சந்திப்பு இயக்கம்” நடத்துகிறது சிபிஎம்.

ADVERTISEMENT

சிபிஎம் கட்சியின் மத்திய சென்னை மாவட்டம் அண்ணா நகர் எம்.எம்.டி.ஏ. காலனி மார்க்கெட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தை இன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பெ.சண்முகம் பேசியதாவது: தமிழக சட்டசபையில் சபாநாயகர் நடுநிலைமையுடன் நடந்து கொள்கிறார் என்று பலரும் பாராட்டுகிறார்கள். அப்படி நடந்து கொள்கிறார் என்பது நல்ல விஷயம் தான். இந்த பக்கம் பேசுவதையும் சபைக் குறிப்பில் இருந்து நீக்குகிறார்.. அந்த பக்கம் பேசுவதையும் சபைக் குறிப்பில் இருந்து நீக்குகிறார்..அதனால் நடுநிலையாக சபாநாயகர் நடந்து கொள்கிறார் என சொல்கின்றனர்.

ADVERTISEMENT

சட்டசபை நிகழ்ச்சிகளை இப்போது நேரடியாக ஒளிபரப்பு செய்வதனால் அப்படி பேசுவதை நீக்கினாலும் ஒன்றுதான், நீக்கவில்லை என்றாலும் ஒன்றுதான். ஏனென்றால் எல்லாவற்றையும் நாம் காதில் கேட்டு விடுகிறோம், கண்ணால் பார்த்து விடுகிறோம்; இதன் பிறகு சபைக் குறிப்பில் இருந்து நீக்கி என்ன பயன்?

இதுவரை சட்டசபைக்குள் என்ன நடந்தது என நமக்கு தெரியாது. சபைக் குறிப்பில் இருந்து நீக்கியதும் என்ன என்பதும் நமக்கு தெரியாது.

ADVERTISEMENT

இப்பொழுது சட்டமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால் நம்ம எம்.எல்.ஏ உள்ளே இருக்கிறாரா? இல்லையா? எம்.எல்.ஏ சும்மா உட்கார்ந்து இருக்கிறாரா? தூங்கிக் கொண்டிருக்கிறாரா? நம்ம தொகுதி பிரச்சனையை பேசினாரா? இல்லையா? என தெரிந்து கொள்ளலாம். ஆகையால் சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

ஆனால் சட்டசபையில் ”லாவணி கச்சேரி” நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தினுடைய நேரத்தை இப்படி வீணடிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கக்கூடிய ஒரு விஷயம் இது. இதற்கு சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது.

சட்டசபையில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைப்பது என்பதற்கு பதிலாக தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பி கூச்சலை ஏற்படுத்துவது, சவால் விடுவது, ஏதோ குழாய் அடி சண்டையைப் போல, தெரு சண்டையைப் போல அங்கே ஒரு சூழ்நிலையை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை தமிழ்நாட்டு மக்கள் ரசிக்க மாட்டார்கள். உங்களை தமிழ்நாட்டு மக்கள் மொத்த பேரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share