தமிழக ஆளுநர் அர்லேகரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (ஆகஸ்ட் 25) திடீரென சந்தித்து மனு கொடுத்தார்.
இந்த சந்திப்பு பற்றி டிடிவி தினகரன் கூறுகையில், “தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து,
- தவெக அரசு மீதான குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள்
- மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் மீது 10-வது அட்டவணையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட தகுதி நீக்க மனுவின் மீது தமிழக சட்டப்பேரவைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை
- கடந்த 08.05.2026 அன்று குதிரை பேரம் தொடர்பாக சென்னை கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளத் தவறியமை
ஆகியவற்றில், மேதகு ஆளுநர் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது என்றார்.

பின்னணி என்ன?
சட்டசபை தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் காமராஜ் வெற்றி பெற்றார். தேர்தலில் அதிக இடங்களில் வென்று ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காமராஜ் ஆதரவு தருவதாக அறிவித்தார். இதனால் அமமுகவில் இருந்து காமராஜ் நீக்கப்பட்டார். இதனையடுத்து காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு கொடுத்தார். மேலும் காமராஜ் எம்.எல்.ஏ. தவெகவுக்கு ஆதரவாக மாறியதன் பின்னணியில் உள்ள “குதிரை பேரம்” தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஆளுநர் அர்லேகரை டிடிவி தினகரன் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
