பினாமி நிறுவனங்களை உருவாக்கி கனிமங்களை கொள்ளையடிப்பவர்களை மக்கள் தேர்தல் அரசியலில் தூக்கி எறிவார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் பேசியதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் பேரவையில் சலசலப்பான சூழல் நிலவியது.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நிதித்துறையில் ஒரு புதிய கொள்கையைக் கொண்டு வந்துள்ளோம். நம்மிடம் இருக்கும் வளங்களை எப்படி அரசு கஜானாவிற்கு கொண்டு வர வேண்டும், ஒவ்வொரு துறையிலும் உள்ள லீகேஜ்களை எப்படிக் குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அரசின் உண்மையான நிலைமை என்பது அரசியல்வாதிகளின் கையில் உள்ளது. அது எந்தக் கட்சி என்று நான் சொல்ல விரும்பவில்லை, அது மக்களுக்குத் தெரியும். முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் கட்டுப்பாட்டில்தான் குவாரிகள் உள்ளன. நாங்கள் புதியவர்கள், ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள்தாம் ஆகிறது; நாங்கள் யாரும் குவாரிகளோ, மணல் தொழிலோ செய்யவில்லை, செய்யவும் போவதில்லை.
பாமக மதுவிலக்கு குறித்துப் பேசுகிறது, டாஸ்மாக் குறித்துப் பேசுகிறது. ஆனால், அந்த டாஸ்மாக்கிற்கு பின்னால் இருக்கும் பினாமிகள் யார், அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், அவர்களை எந்தக் கட்சியினர் பாதுகாக்கிறார்கள் என்பதையும் பேச வேண்டும். பெரியார் கொள்கை, அண்ணா கொள்கை என்று பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் 35 சதவீத மக்கள் குடிசைகளில் வசிக்கின்றனர்; இன்னும் எல்லா வீடுகளுக்கும் குடிநீர் கொடுக்க முடியவில்லை. சாலை வசதிகள், பள்ளிகளில் உட்கட்டமைப்புகள் இல்லை. பொருளாதாரத்தை உருவாக்க வேண்டுமானால், நம்மிடம் இருக்கும் வளங்களை அரசு கருவூலத்திற்கு கொண்டு வர வேண்டும்.
மணல் குவாரிகளாக இருக்கட்டும், மலைகளாக இருக்கட்டும் – அவற்றை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது மக்களுக்கும் தெரியும். ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள்; அவர்கள் பெயரிலா சொத்துகளை வைத்துக் கொள்வார்கள்? அரசியலுக்கு வரும்போது சைக்கிளில் வந்தவர்கள், இன்று மெடிக்கல் கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பெரிய பங்களாக்களைக் கட்டியுள்ளனர். அங்குதான் உண்மையான ஆதாரம் உள்ளது. பினாமி நிறுவனங்களை உருவாக்கி கனிமங்களைச் கொள்ளையடிப்பவர்களை மக்கள் தேர்தல் அரசியலில் தூக்கி எறிவார்கள். அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் திமுக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை; இதுதான் மக்கள் கொடுத்த தீர்ப்பு” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு அவையில் இருந்த திமுக தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “ஏன் திமுக பதற்றம் அடைகிறது? ஜி ஸ்கொயர் குறித்தோ அல்லது மலைகளைப் பற்றியோ பேசினால் ஏன் கோபப்படுகிறீர்கள்? நாங்கள் எங்கள் பொருளாதாரக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறோம். எனக்கு ஒன்றும் பயமில்லை; நான் தைரியமாகப் பேசுகிறேன்” என்றார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “அமைச்சர் ஆதவ் அர்ஜுனா யாருடைய பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. அப்படி இருக்கையில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எழுந்து நின்று கூச்சலிடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்றார். இதனால் அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து பேசிய நீர்வளத்து துறை அமைச்சர் என். ஆனந்த், “பொதுப்பணித்துறை அமைச்சர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவர் பொதுவான கருத்தைத் தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு உரிய முறையில் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாமே தவிர, தேவையில்லாமல் சபாநாயகருக்குச் சங்கடத்தை உண்டாக்கக் கூடாது” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, ஒரு பொருள் குறித்து சந்தேகத்தைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் உறுப்பினர் கேட்டார்; அதற்கு அவர் ஒரு விளக்கம் கொடுத்தார். அந்த விளக்கம் போதவில்லை என்றால், வேறு ஒரு அமைச்சர் பதில் சொல்லலாம், அதில் ஒன்றும் தவறில்லை. “பொதுப்பணித்துறை அமைச்சர், மதுரையில் முன்னாள் அமைச்சர் அங்கிருக்கும் குவாரிகளை எல்லாம் கட்டுப்படுத்தி வைத்திருந்த காரணத்தால் தான் இன்று அவர் உள்ளே வர முடியவில்லை” என்று யாரைக் குறிப்பிடுகிறார்? அப்படிச் சொல்லிவிட்டுப் பின்னர், “நான் பெயரைச் சொல்லவில்லை, பெயரைச் சொல்லவில்லை என்றால் எப்படி” என்கிறார்
அப்போது தவெக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து பேசிய எ.வ. வேலு, “இப்பகுதியில் இருக்கும் நபர்கள் குறிப்பிட்ட அமைச்சர் மீது ஏதாவது குற்றச்சாட்டுச் சொன்னால் அவர்கள் பதில் சொல்லலாம்; நாங்கள் யாரும் அவர்கள் மீது நேரடியாகக் குற்றச்சாட்டுகளைச் சொல்லவில்லை. நான் யார் பெயரையும் சொல்லவில்லை, நான் யார் பேரையும் சொல்லவில்லை என்று சொல்லிவிட்டு, அவர் பங்களா கட்டியிருக்கிறார், பொறியியல் கல்லூரி வைத்திருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்? யார் வைத்திருந்தார்கள் என்று சொல்ல வேண்டுமா இல்லையா?
எப்போது பார்த்தாலும் பொதுப்பணித்துறை அமைச்சர், ‘பொதுக்கூட்டம் போல் பேசுகிறீர்கள்’ என்று சொல்கிறீர்கள்; நாங்கள் பொதுக்கூட்டம் பேசவில்லை. பொதுக்கூட்டத்தைப் போல நீங்கள்தான் பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சொல்லும்போது, ‘ஆதாரத்தைக் காட்டுங்கள்’ என்று சொல்வதில் என்ன தவறு? ‘ஆதாரம் கொடு, ஆதாரம் கொடு’ என்று சொல்கிற காரணத்தால் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு, பொத்தாம் பொதுவாகப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? சட்டப்பேரவையில் ஆதாரம் இருந்தால் உங்களிடம் காட்டிவிட்டுப் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். ஆனால், பொதுப்பணித்துறை அமைச்சர் பொத்தாம் பொதுவாக, எப்போது பார்த்தாலும் ஆதாரமில்லாமல் அரசியல் ரீதியாக உள்நோக்கத்தோடு பேசுகிறீர்கள். நாங்கள் என்ன உள்நோக்கத்தோடு பேசுகிறோம்? சம்பந்தப்பட்ட துறை குறித்துத்தானே பேசுகிறோம்? பிரச்சனை என்று வரும்போது அங்கு எல்லோரும் எழுந்துகொள்ளும்போது நாங்கள் என்ன மரக்கட்டை போல் உட்கார்ந்திருக்க முடியுமா? உணர்வு வரத்தானே செய்யும்?
இந்தச் சபையை நடத்துவதற்கு உங்களுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டியது ஆளுங்கட்சிதான். கேள்வி கேட்பதற்காக இல்லாமல், ‘போற்றி, போற்றி’ என்று சொல்வதற்காக நாங்கள் வரவில்லை. எங்களது குற்றச்சாட்டுகள், வேண்டுகோள்கள், கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை ஆளுங்கட்சிக்கும் அமைச்சர்களுக்கும் உள்ளது. அவர்களுக்கு மிகவும் அதிக கட்டுப்பாடு தேவை. அதைவிட்டுவிட்டு, கட்டுப்பாடு இல்லாமல் நீங்கள்தான் பொத்தாம் பொதுவாகப் பேசுகிறீர்கள் என்று எங்கள் மீது குற்றச்சாட்டு வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று நான் கேட்கிறேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், “நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே இதைத்தான் சொல்கிறோம்; கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள், அவர்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களைச் சொல்லட்டும் என்கிறோம். ஆனால், இங்கு கொஞ்சம் கூட சபை மரபு இல்லாமல், சபாநாயகர் இருக்கும்போது இங்கு நடக்கும் காட்சிகள் எல்லோருக்கும் தெரியும். நான் இது ஒரு ‘செட்டப்’ என்று நினைக்கிறேன்; பின்னாடி இருப்பவர்கள் ‘ஏய்’, ‘அவன்’, ‘இவன்’ என்று சொல்வது, அடிக்க வருவது… ஆனால் இவர் எழுந்து எங்களுக்குக் கட்டுப்பாடு சொல்லித் தருகிறாராம்! கொஞ்சம் திரும்பி அவர்களுக்குச் சொல்லித் தரச் சொல்லுங்கள்.
நான் மீண்டும் இதைத்தான் சொல்கிறேன்; இது வெற்றித் தலைவரின் அரசு. இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படும் அரசு கிடையாது. நாகரிகமாகப் பேசுகிறோம், சபாநாயகர் உட்கார்ந்திருக்கிறார், எவ்வளவு பேர் எழுந்து நின்று கத்துகிறார்கள்? நீங்கள் மைக்கை வாங்கி ஆக்கபூர்வமாகப் பேசுங்கள். ஆனால் உண்மைக்குப் புறம்பாக, மூத்த உறுப்பினர் எழுந்து ‘நாங்கள் பொத்தாம் பொதுவாகப் பேசுகிறோம், கட்டுப்பாடு இல்லாமல் பேசுகிறோம்’ என்கின்றார். முதலாவதாக, நாகரிகமாக எப்படிப் பேச வேண்டும் என்று அவர்களது உறுப்பினர்களுக்குச் சொல்லித் கொடுக்கச் சொல்லுங்கள். இதற்கு முன்னர் சட்டமன்றத்தில் இத்தனை இழிவாக ‘வா’, ‘போ’, ‘வாடா’, ‘போடா’, ‘அவனை’ என்று பேசுவதற்கு நீங்கள் ஏன் அனுமதிக்கிறீர்கள்? மைக்கில் பேசினால் மட்டும்தான் பேச்சா? மைக் இல்லாமல் அவ்வளவு கமெண்ட்ஸும் பேசும்போது, இளம் ரத்தம் வெற்றித் தலைவரின் தலைமையில் புதிய தலைமுறை அரசியலுக்கு வந்துள்ளது. எப்படி நன்றாகப் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள்.
அதைவிட்டுவிட்டு வம்புக்கு இழுப்பது அவர்கள்தான். ஒரு அமைச்சர் ஆதாரம் கேட்கிறாரா? சபாநாயகரிடம் அவர் சமர்ப்பிப்பார். குறிப்பிட்ட பெயரைச் சொன்னாரா? கட்சியைச் சொன்னாரா? எதையும் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட காட்சியில் சூனா பானா ஆட்டைப்பற்றிச் கேட்டால் அவர் பதறுவார், ஐயோ ஐயோ என்று! அவர் யார் பெயரையும் சொல்லவில்லை. சட்டத்துறை அமைச்சரோ, பொதுப்பணித்துறை அமைச்சரோ, நீர்வளத்துறை அமைச்சரோ யாருக்கும் சங்கடம் வரக்கூடாது, ஆக்கபூர்வமாக அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று சொல்கிறோம். அதேபோல் அங்கிருக்கும் மூத்த உறுப்பினர்கள், பின்னால் இருப்பவர்களுக்குச் சொல்லுங்கள்; நாகரிகமாகப் பேச வேண்டும், சபை நாகரிகம் இல்லாமல் இப்படிப் பேசுவது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
