”கவிஞரா இருந்தாலும் இப்படியா” என்று அமைச்சர் விஸ்வநாதன் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று உயர்க் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அமைச்சர் விஸ்வநாதன், ”1991-ல் 60 இடங்களைக் காங்கிரஸ் கட்சி பெற்றது. ஆனால் அப்போது கூட, எங்களுக்குக் கூட்டணி மந்திரி சபை வேண்டும், அமைச்சரவையில் ஒரு இடத்தை தாருங்கள் என்று ஒரு நாளும் கேட்கவில்லை.
1996-ல் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இரண்டாகப் பிளவுபட்டது. மக்கள் தலைவர் மூப்பனார் தலைமையிலே காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவானது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உருவாகும்போது திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்தது.
அந்த நேரத்தில் 39 இடங்களைத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பெற்றது. அதுவும் ஒரு வகையிலே காங்கிரஸ் கட்சிதான். அப்பொழுதும் அமைச்சரவையில் இடம் தாருங்கள், ஒரு வாய்ப்பைத் தாருங்கள் என்று காங்கிரஸ் பேரியக்கம் ஒரு நாளும் கேட்டதில்லை,
2006-ல் திராவிட முன்னேற்றக் கழகம் 96 இடங்களை மட்டுமே பெற்றது. காங்கிரஸ் பேரியக்கம் 34 இடங்களைப் பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ‘மைனாரிட்டி சர்க்கார்’ என்று திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்த காலம் அது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோள் கொடுத்து நின்றது காங்கிரஸ் பேரியக்கம் என்பதை யாரும் மறந்துவிட மாட்டோம். அப்போதும் நாங்கள் கேட்கவில்லை.
கிடைக்கவில்லை… கிடைக்கவில்லை… முடியாது என்றார்கள்… நடக்காது என்றார்கள்… ‘சாத்தியமே இல்லை என்றார்கள்” என ஒவ்வொரு வார்த்தையையும் இரு முறை சொல்லி பேசிக்கொண்டிருந்தார்.
உடனே எழுந்து அவருக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ”உயர்கல்வி மானியத்தை விட்டுவிட்டு அமைச்சர் அரசியல் பேசுகிறார்” என்று சொன்னதும், அமைச்சர் விஸ்வநாதன் குறுக்கிட்டார்.
தொடர்ந்து கே.என்.நேரு, ”ஏங்க… இருங்க… நான் பேசினதுக்கு பிறகு சேர்த்து பதில் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு தொடர்ந்து பேசினார்.
”தர முடியாது என்று சொன்னார்கள் என்கிறீர்கள்… தருகிறோம் என்று சொல்லிவிட்டு தராமல் ஏமாற்றினால்தானே தவறு. நாங்கள் தர முடியாது, தனித்து நிற்போம் என்று தானே சொன்னோம். இப்போது தர முடியாது என்றார்கள்… வாய்ப்பில்லை என்று சொன்னார்கள்… என்னங்க இது… அவர் கவிஞரா இருக்கலாம். அதுக்காக ஒவ்வொரு வார்த்தையும் இருமுறை பதிவு செய்வதா? ஒவ்வொரு வார்த்தையும், வரியும் 2 முறை பதிவு செய்தால்… எப்போது இதை முடிப்பது?” என்று கேள்வி எழுப்பினார்.
உடனே சபாநாயகர், மானிய கோரிக்கைக்குள் வாங்க என்று உயர்க்கல்வித் துறை அமைச்சரிடம் கூறினார்.
தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ”பொதுவாக மானியக் கோரிக்கைக்கு முன்பு ஒரு அறிமுக உரையை கொடுப்பார்கள். அப்படி காலை அண்ணன் நேரு பேசும்போது, அவருடைய தலைவரை பற்றி . 4 நிமிடம் 10 செகண்ட் பேசினார். அவருடைய சட்டமன்ற தலைவரை பற்றி மட்டுமே பேசினார். நான் எழுதி வைத்திருக்கிறேன். மானிய கோரிக்கை பற்றி பேசவே இல்லை.
அதாவது ஒரு துணைத் தலைவராக இருக்கிற நீங்கள், ஒரு மானிய கோரிக்கையில் 4.10 நிமிடம் உங்கள் சட்டமன்ற கட்சித் தலைவரை பற்றி பேசுகிறீர்கள். அதுபோன்று ஒரு அமைச்சர் 59 வருஷ கனவை பற்றி பேசுகிறார். திமுகவை பற்றி எதுவும் பேசவும் இல்லை. திட்டவும் இல்லை. அவர் பேசுவது அவருடைய உரிமை. நீங்கள் பேசும் போது நாங்கள் பொறுமையாக கேட்கிறோம் தானே?
59 வருட கனவு… நீங்கள் கொடுக்கவில்லை. எங்கள் தலைவர் அதிகாரத்தை கொடுத்து ஆட்சியை உருவாக்கியிருக்கிறார். அதுதான் தமிழ்நாட்டுடைய வெற்றி. தமிழ்நாட்டுடைய வரலாறு” என்றார்.
இதையடுத்து பேசிய கே.என்.நேரு, ”நீங்கள் கொடுக்கிறேன் என்று சொல்லி கொடுத்தீர்கள். நான் அதையெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. நான் எதிர்க்கட்சியின் துணை தலைவராக இருக்கிறேன். இலாகாவை பற்றியும், அது உருவானதை பற்றியும் பேசுகிறேன்.
அமைச்சர் மானிய கோரிக்கையை பற்றி பேச வேண்டும். அதை சிறிதாகிவிட்டு கட்சியைப் பற்றி பேசிக்கிட்டே இருந்தால் எவ்வளவு நேரம் கேட்டுக்கொண்டிருப்பது” என்று கூறினார்.
இந்த காரசார விவாதத்தை கேட்டுக்கொண்டிருந்த தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் குலுங்கி குலுங்கி சிரித்துக்கொண்டிருந்தார்.
சட்டப்பேரவையில் துறை சார்ந்த விவாதத்தைத் தாண்டி கூட்டணி அரசியல் , தேர்தல் அரசியல் தொடர்பான கருத்துகள் பேசியது இன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
