‘ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்கா? லாட்டரி மருமகனுக்கா?’ சரமாரி கேள்விகள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பரந்தூர் விமான நிலையம் மற்றும் விவசாயிகளின் நில உரிமை குறித்து காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பரந்தூர் விமான நிலையமா அல்லது விவசாயிகளின் கண்ணீரா என்றால், எங்கள் தலைவர் முதலமைச்சர் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார். முதலமைச்சர் நேற்று கூறியது போல், விமான நிலையத்திற்கான இடம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். எங்கள் தலைவர் எப்போதும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பார்; டெல்டாவில் பிறந்தவர்கள் நாங்கள் என்று சொல்பவர்கள் இன்று பரந்தூர் விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். பரந்தூர் மட்டுமல்லாமல் திருவண்ணாமலையில் உள்ள மேல்மாவில் விவசாயிகளுக்கு எதிராகக் குண்டர் சட்டம் போட்டது திமுக அரசு.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் உள்ள 381 ஏரிகள் குறித்தும், மக்களின் குரலுக்காகப் பேசியது இல்லை. நேற்றே தெளிவாகச் சொல்லிவிட்டோம், விமான நிலைய திட்டத்தின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து விளக்கிவிட்டோம். ஆனால், இந்த விமான நிலையம் இல்லை என்றால் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி போய்விடும் என்கிறார்கள். தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கியமான காரணமாக ஒற்றைச் சாளர முறை தான் உள்ளது; அதை முதலமைச்சர் உருவாக்குவார். தொழில் முதலீடு வருவதற்கு ஊழல் இல்லாத கட்டமைப்பு தேவை. 381 ஏரிகள் மற்றும் விவசாயிகள் பக்கம் நிற்பதற்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஐந்து வருடம் கழித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் தயார். உங்களை விட 10 மடங்கு இங்கு பொருளாதாரம் வந்திருக்கும். ஊழல் இல்லாத ஆட்சியை எங்கள் முதலமைச்சர் வழங்குவார்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “பரந்தூர் விமான நிலையத்திற்காக 5,740 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகக் கூறி, 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுவதால், திட்டம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது விவசாயிகளுக்கு நிலங்களை மீண்டும் கொடுக்கப் போகிறீர்களா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு மொத்தமாக 5,846 ஏக்கர் தேவைப்பட்டது. இதில் பட்டா நிலங்கள் 3,774 ஏக்கரும், 3 போகம் விளைவிக்கக் கூடிய விவசாய நிலங்கள் 2,681 ஏக்கரும் இருந்தன. 90% நிலம் கையகப்படுத்தப்படவில்லை; மாறாக 48% அதாவது 1,802 ஏக்கர் நிலங்கள் மட்டும்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி வாங்கியதாகத் தவறான தகவல் சொல்லப்படுகிறது. ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்காக பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கிக்குவித்தவர்கள், மற்றும் கருப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டதை எதிர்க்கின்றனர்” என்றார்.

அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்ட கருத்துக்கு திமுக தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு, “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொன்னால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என்று நான் கேட்கட்டுமா?” என்றார். இதனால் அவையில் சலசலப்பான சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு, “நான் நேற்றே சொன்னது போல் பல இடங்களில் ஆய்வு செய்த பிறகே பரந்தூர் விமான நிலையப் பகுதியைத் தேர்வு செய்தோம். எந்த இடத்தில் விமான நிலையம் அமைந்தாலும் அங்கும் விவசாய நிலங்கள் இருக்கும், அப்போதும் பிரச்சினை ஏற்படுவது இயற்கை. மக்களை இடமாற்றம் செய்யாமல் நிலத்தை முழுமையாகக் கையகப்படுத்த இயலாது. சென்னை விமான நிலையத்தில் எப்படி இரண்டாவது ரன்வே வரும்” என அதில் உள்ள சிக்கலை சுட்டிக்காட்டி பேசினார்.

இதைத்தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வைத்து பொதுமக்களைப் பாதிக்காத வகையில் உரிய மாற்று திட்டங்கள் தொடங்கப்படும். மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது. பரந்தூர் விமான நிலையமாக மாற்றப்பட்டால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்த பின்னரும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ஏன் தாமதப்படுத்தப்பட்டன?” என கேள்விகளை எழுப்பினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share