“பரந்தூர் திட்டம் ரத்து: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி எங்கே போகும்?” – தங்கம் தென்னரசு ஆதங்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையவிருந்த இரண்டாவது விமானநிலைய திட்டம் கைவிடப்பட்டதாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்தார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக வெளிநடப்பு செய்தது.

இதைத்தொடர்ந்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நம் அனைவருக்கும் தெரியும், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு விமான நிலையம் என்பது எவ்வளவு முக்கியமானது என்று. குறிப்பாக, சென்னையில் புதிய விமான நிலையம் அமைவது தமிழ்நாட்டின் பொருளாதாரச் சூழலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான தேவையாக விமான நிலையம் அமைந்திருக்கிறது. அந்த அடிப்படையில் தான், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சென்னையில் அமைக்கப்பட்ட இந்த சென்னை விமான நிலையம் ஒரு காலத்தில் மிகவும் சிறப்பானதாக இருந்தது.

ADVERTISEMENT

2008-ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள சிறந்த விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் மூன்றாவது இடத்தில் இருந்தது. அப்போது கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையம் ஐந்தாவது இடத்தில் இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

ஏறத்தாழ 4.5 கோடி பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் பெங்களூரு இன்று 3-ஆவது இடத்திற்கு வந்துவிட்டது. ஆனால், வெறும் 2.30 கோடி பயணிகளை மட்டுமே கொண்டு நமது சென்னை விமான நிலையம் 5-ஆவது இடத்திற்குப் பின்தங்கியுள்ளது.

ADVERTISEMENT

பொருளாதார வளர்ச்சியில் சரக்குகளைக் கையாள்வது மிக முக்கியமான ஒன்றாகும். அதில் பெங்களூரு விமான நிலையம் இன்று 5.5 லட்சம் டன் சரக்குகளைக் கையாளும் வகையில் மிக முன்னேறி, ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ரீதியில் மிக வலுவான இணைப்பைப் பெற்றுள்ளது.

இந்தச் சூழலில் தான் தமிழ்நாட்டிற்கு, குறிப்பாகச் சென்னைக்கு ஒரு புதிய ‘கிரீன்ஃபீல்ட்’ (Greenfield) விமான நிலையம் வர வேண்டும் என்ற அவசியம் ஏற்படுகிறது. இந்த விமான நிலையம் வந்தால்தான் சென்னையின் தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள், குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கும் தொழிற்சாலைகள், இன்று எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பெற முக்கியக் காரணமாக இருக்கின்றன. அப்பகுதியில் வருங்காலத்தில் மிகப்பெரிய விமான நிலையம் வரும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் இத்தகைய முதலீடுகள் வந்தன.

ADVERTISEMENT

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-க்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவோம் என்ற இலக்கை நிர்ணயித்தார். அந்த இலக்கின் அடிப்படையில், அதற்கு மிக முக்கியமான ஆதாரமாக விளங்கும் புதிய விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஒரு விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்யும்போது சில முக்கியமான விஷயங்களைப் பார்க்க வேண்டும்:

நிலத்தின் தகுதியையும் அதன் அமைப்பையும் பார்க்க வேண்டும்.

அப்பகுதியில் வாழும் மக்களுக்கு எந்த அளவுக்குக் குறைவான பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பார்க்க வேண்டும்.

நாம் தேர்ந்தெடுக்கும் இடங்களில் விமான நிலையம் அமைக்க முடியாத அளவிற்குத் தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏதும் இருக்கக் கூடாது. சென்னையின் புவியியல் அமைப்பு நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். சென்னையின் கிழக்குப் பகுதி முழுவதும் வங்கக்கடல் என்பதால், கிழக்குப் பகுதியில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது.

வட பகுதியில் வடசென்னை, எண்ணூர் என தொடர்ச்சியான தொழிற்சாலைகள் உள்ளன. தொழிற்சாலைகளைத் தாண்டி பழவேற்காடு ஏரி உள்ளிட்ட சுற்றுச்சூழல் மண்டலம் உள்ளது. அதற்கு அடுத்து உடனடியாக ஆந்திர எல்லை வந்துவிடுகிறது. எனவே, வட பகுதியிலும் நாம் செல்ல இயலாது.

தென் பகுதியில் உள்ள இடங்களை ஆராய்ந்தோம். முதல்வர் அவர்கள் பரந்தூர் விமான நிலைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டார். ஒரு விமான நிலையத்தைத் தேர்ந்தெடுக்கும்போது நமது விருப்பம் மட்டுமல்லாது, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மற்றும் ஒன்றிய அரசின் அனுமதியும் தேவை. சென்னையின் தென் பகுதிக்குச் சென்றால் தாம்பரம் விமானப் படைத் தளம் உள்ளது; அதைத் தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளது; இன்னொரு பக்கத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. எனவே, அப்பகுதியிலும் விமான நிலையம் அமைக்க இயலாது.

ஆக, விமான நிலையம் அமைவதற்கான ஒரே சாத்தியக்கூறு மேற்குப் பகுதியில் மட்டுமே உள்ளது. மேற்குப் பகுதியிலும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல்:

எந்த இடத்தில் நமக்கு போதுமான நிலம் கிடைக்கிறது?

எத்தனை பேரை நாம் வெளியேற்றும் நிலை உருவாகும்?

தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏதும் உள்ளதா?

இவை அனைத்தையும் தொழில்நுட்ப ரீதியில் விரிவாகப் பரிசீலித்த பின்னரே ‘பரந்தூர்’ பகுதியைத் தேர்வு செய்தோம்.

ஆனால், இப்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்புகள் வருகின்றன. ஏற்கனவே ஒன்றிய அரசின் அமைச்சர் கூட மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது, “இதுவரை தமிழக அரசிடம் இருந்து எந்தவித கோரிக்கையும் வரவில்லை” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான், இன்று முதல்வர் இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவிக்கிறார்.

அரசாங்கம் ஒரு கொள்கை முடிவு எடுக்கலாம், ஆனால் இந்தத் திட்டத்தின் வாயிலாக வரக்கூடிய மிகப்பெரிய தொழில் வாய்ப்புகள் இன்று மறுக்கப்பட்டுள்ளன. நான் ஏற்கனவே சொன்னது போல், பரந்தூர் திட்டம் வந்திருந்தால் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரிய அளவில் தொழில் வளர்ச்சியைப் பெற்றிருக்கும்.

பரந்தூர் பகுதியில் 5,746 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தத் திட்டமிட்டு, அதில் 90 சதவீத நிலங்களை நாம் ஏற்கனவே கையகப்படுத்தி விட்டோம். நில உரிமையாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்த அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நான் மற்றும் அப்போதைய அமைச்சர் அன்பரசன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

இப்போது எந்த நோக்கத்திற்காக அந்த நிலத்தை எடுத்தீர்களோ, அதற்குத்தான் பயன்படுத்த முடியும். திட்டத்தைக் கைவிட்டுவிட்டீர்கள் என்றால் அந்த நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள்? ஏற்கனவே இழப்பீடு பெற்ற மக்களுக்கு உங்களின் பதில் என்ன? அந்த இடத்தில் வேறு ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறீர்களா? அந்த திட்டத்தால் அங்குள்ள நீரியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா? விவசாயிகளின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடுமா?

“நாங்கள் வேறு ஒரு இடத்தைப் பார்ப்போம், ஆய்வு நடத்துவோம்” என்று கூறுகிறீர்கள். அது எப்போது நடக்கும்? அங்கு எத்தனை பேரை வெளியேற்றும் சூழல் வரும்? அங்கு என்ன உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன? பரந்தூரில் தான் இந்த விமான நிலையம் வரும் என்ற நோக்கத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் சுங்குவார் சத்திரம் வரை நீட்டித்தோம். எதிர்காலத்தில் இந்த மெட்ரோ திட்டத்தின் நிலை என்னவாகும்?

மேலும், பெங்களூரு – சென்னை புதிய நான்கு வழிச்சாலை அமையும் பகுதியில் இத்திட்டத்தை எந்த வகையில் செயல்படுத்தப் போகிறீர்கள்? சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் ஏற்கனவே பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்கும்போது, பரந்தூரில் விமான நிலையத்தை அமைப்பதுதான் மிகச் சரியான முடிவாக இருக்கும்.

ஆனால், இதை நீங்கள் அரசியல் காரணங்களுக்காக முடக்குகிறீர்கள். ஒரு திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு வரும்போது அதில் அரசியல் செய்யக்கூடாது. அரசியல் காரணங்களுக்காகத் திட்டங்கள் நிறுத்தப்பட்டால், அது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் பாதிக்கும். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் நிறுத்தப்பட்டு, மீண்டும் கழக ஆட்சியில் தான் தொடங்கப்பட்டது.

தேர்தல் அறிக்கையிலோ அல்லது விக்ரவாண்டியிலோ சொல்லிவிட்டோம் என்ற காரணத்திற்காக, 90% நிலமெடுப்பு பணிகள் முடிந்த ஒரு திட்டத்தை நிராகரிப்பது இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் பாதிக்கும். ஸ்ரீபெரும்புதூர் மட்டுமல்லாது, நமது பகுதிக்கு வரவேண்டிய பல தொழிற்சாலைகள் ஆந்திராவை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகும். ஆந்திர அரசு ஏற்கனவே அங்கு ஒரு புதிய விமான நிலையம் அமைக்கும் முயற்சியில் உள்ளது.

ஏற்கனவே நாம் ஓசூர் விமான நிலைய வாய்ப்பை இழந்துவிட்டோம். பெங்களூரில் இப்போது இரண்டாவது விமான நிலையத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆந்திராவில் குப்பம் பகுதியிலும் விமான நிலையம் வரவுள்ளது. ஓசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிற மாநில ஏர்போர்ட்டுகள் வரும்போது, நமக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஓசூரை நாம் இழந்துள்ளோம்.

இப்போது பரந்தூரையும் இழந்தால் இந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சி எங்கே போகும்? பொருளாதார இலக்கு என்னவாகும்? தமிழக அரசு சொல்லியிருக்கும் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை இந்த அரசு எப்படி நிறைவேற்றப் போகிறது? இதற்கான வழிப்பாதை (Roadmap) என்ன?

இத்தகைய முக்கிய திட்டங்களை அரசியல் காரணங்களுக்காகத் தவிர்க்கும் போக்கு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த அரசு துணைநிற்கவில்லை என்பதையே காட்டுகிறது.” என கடும் விமர்ச்சனங்களை முன் வைத்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share