ஊழல் பேர்வழிகள் கூடாரமாக மாறுகிறதா தவெக? – விஜய்யின் அரசியல் நகர்வை விமர்சித்த விசிக ரஜினிகாந்த்!

Published On:

| By Pandeeswari Gurusamy

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் விசிக பங்கு வகிக்கும் நிலையில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ரஜினிகாந்த், மைச்சர் செங்கோடையன் அவர்கள் அதிமுகவைச் சேர்ந்த இன்னும் 10 பேர் விரைவில் தவெக-வில் இணைய உள்ளனர் என பேசியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “புதிய மொந்தையில் பழைய கள்ளாய் மாறும் தமிழக வெற்றிக் கழகம்! ஜென்சி எனப்படும் புதிய தலைமுறை நிரம்பிய ஒரு பேரியக்கம் என்று நம்பப்பட்ட முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஊழலை ஒழித்து தூயமையான ஆட்சி நிர்வாகத்தை கொடுப்பதுதான் தமது முதன்மையான நோக்கம் என்று கூறி வருகிறது. அதனை தமிழக மக்களும் பெரிதாக நம்பி வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக அமைந்துள்ளது .

ADVERTISEMENT

ஏற்கனவே ஊழலில் திளைத்து வழக்குகளை சந்தித்து வரும் முன்னாள் அமைச்சர்களையும், ஊழல் சக்தி என்று முதலமைச்சர் விஜய் அவர்களால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்களையும் தங்கள் கட்சியில் பெருமளவில் சேர்த்து வருவதும், அதனை அமைச்சர் செங்கோட்டையன் போன்றவர்கள் பெருமையாக பேசிவருவதும் தமிழக வெற்றிக் கழகம் ஊழல் பேர்வழிகள் நிரம்பிய கூடாரமாக மாறி வருகிறதோ என்ற ஐயத்தை மக்களுக்கு ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அதிமுகவைச் சேர்ந்த இன்னும் 10 பேர் விரைவில் தவெக-வில் இணைய உள்ளனர், அந்த எண்ணிக்கை 25-ஐ தாண்டும் என்று சொல்லியிருப்பது இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எத்தகைய மக்கள் சிந்தனையும் இல்லாமல் பதவியும், பணமும் மட்டுமே தங்களது குறிக்கோள் என்று செயல்பட்டுவரும் ஊழல் பெருச்சாளிகள் தவெக-வில் இணைந்ததும் வாஷிங் மெஷினில் துவைக்கப்பட்டு தூய்மையானவர்களாக மாறிவிடுகிறார்களா? என்ற எதிக்கட்சிகளின் கேள்விக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

ADVERTISEMENT

அதே போன்று தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டும் உண்மையே என்ற எண்ணத்தையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆகவே, தமிழக வெற்றிக் கழகம் இத்தகைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இவை தொடருமேயானால் தமிழக வெற்றிக் கழகம் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share