”தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் என்பது ஏமாற்றமாக மாறிவிட்டது; லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது” என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) கலைஞரின் சகோதரி மகன் இயக்குநர் அமிர்தம் இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய பெருமதிப்பிற்குரிய அண்ணன்… நான் அவரை அத்தான் என்றுதான் அழைக்க வேண்டும். ஆனால் நான் மட்டுமல்ல, என்னுடைய அண்ணன், தம்பி யாராக இருந்தாலும், முரசொலி மாறனாக இருந்தாலும், முரசொலி செல்வமாக இருந்தாலும், நம்முடைய இயக்குநர் அமிர்தமாக இருந்தாலும் அவர்களை எல்லாம் நாங்கள் அண்ணன், அண்ணன் என்று அழைத்து பழக்கப்பட்டவர்கள்.

அப்படிப்பட்ட உரிமையோடு, உறவோடு இருக்கக்கூடியவர்கள் அவர்கள். இன்று அண்ணன் அமிர்தம், அதேபோல அக்கா திருமதி வசந்தா அவருடைய பேத்தி- டாக்டர் சதீஷ்குமார், டாக்டர் கலைச்செல்வி ஆகியோருடைய மகள் டாக்டர் இலக்கியா அவர்களுக்கும், நினைவில் வாழக்கூடிய கோபாலன், ரஞ்சம்மாளுடைய பேரன் கும்மி- திருமதி ரூபா அவர்களுடைய மகன், மணமகன் டாக்டர் கிரிதரன் அவர்களுக்கும் மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று, மணவிழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
கோபாலபுர குடும்பம்
இது கலைஞருடைய குடும்பம் மட்டுமல்ல, ஒரு கோபாலபுரத்தினுடைய குடும்பம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நாங்கள் உறவோடு இருக்கக்கூடியவர்கள். அந்த அடிப்படையில் தான் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறோம்.
இயக்குநர் அமிர்தம், தலைவர் கலைஞருடைய சகோதரியினுடைய மகன், அதாவது என்னுடைய அத்தை மகன் அமிர்தம்.
கலைஞரின் இன்னொரு சகோதரியின் மகன்கள் தான் முரசொலி மாறன், முரசொலி செல்வம்.
நான், அழகிரி, மு.க. முத்து, தமிழரசு, செல்வி எங்களை எல்லாம் இந்த 3 பேரும்தான் வளர்த்தார்கள். பெற்றவர்கள் தலைவர் கலைஞராக இருந்தாலும், தயாளு அம்மாளாக இருந்தாலும், வளர்த்தவர்கள் இந்த மூன்று பேரும்தான்.
இந்த மூன்று பேரும்தான் நாங்கள் என்ன படிக்கிறோம், எந்தக் கல்லூரிக்குச் செல்கிறோம், எந்தப் பள்ளிக்குச் செல்கிறோம், என்ன தொழில் செய்ய வேண்டும் என்றெல்லாம் எங்களுக்கு அறிவுரைகளை, ஆலோசனைகளை வழங்கியவர்கள்.
முரசொலி மாறனும் முரசொலி செல்வமும்
முரசொலி மாறனைப் பொறுத்தவரையில் பட்டும் படாமல் இருப்பார். முரசொலி செல்வத்தைப் பொறுத்தவரையில் ரொம்ப சாந்தமாக, எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஏதாவது எங்களுக்குப் பிரச்சனை ஏற்பட்டால் அதை உடனடியாக நிவர்த்தி செய்துவிடுவார்; அவ்வளவு சாதகமாக எங்களுக்கெல்லாம் இருப்பார்.

அடித்து வளர்த்தவர் அமிர்தம்
ஆனால், அமிர்தம் அப்படி இல்லை.. ரொம்ப கண்டிப்பானவர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அடித்திருக்கிறார், கன்னத்தில் அடித்திருக்கிறார்.. நான் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அப்படி, கண்டிப்பான முறையில் அடித்து வளர்த்தவர் அமிர்தம். அவருடைய பேத்திக்கு நடைபெறக்கூடிய மணவிழாவில் கலந்து கொள்ளும்போது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.
இங்கே சகோதரர் ஆ.ராசா, ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னார். இன்றைக்கு நாடு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். நான் அதிகமாக இந்தப் பிரச்சனைக்குப் போக விரும்பல, அரசியலாக்க விரும்பல. இது ஒரு குடும்ப விழாவாக இருக்கிற காரணத்தால் நான் அதிகம் அரசியலுக்கு செல்லவில்லை.
திராவிட இயக்கம்
ஆனால் ஒன்றை எண்ணிப்பாருங்கள்… இன்றைக்கு அமிர்தத்துடைய மகளாக இருந்தாலும், மாப்பிள்ளையாக இருந்தாலும் ரெண்டு பேரும் டாக்டர்கள்; அதேபோல இன்றைக்கு பேத்தி இலக்கியா, அவருக்கு திருமணம், அவரும் டாக்டர்; அவர் மணமகனாக கரம் பிடித்திருக்கக்கூடியவர் கிரிதரன், அவரும் டாக்டர். ஆகவே, ஒரு டாக்டர் குடும்பத்தில் நடைபெறக்கூடிய திருமணம் இது. டாக்டர்கள் சேர்ந்து ஒன்றாக இருக்கக்கூடிய குடும்பத்தில் நடைபெறக்கூடிய திருமணமாக இந்தத் திருமணம் அமைந்திருக்கிறது.
இது போன்ற படித்தவர்கள், பட்டதாரிகள் ஏதாவது அத்திபூத்தது போல ஒரு குடும்பத்தில் இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், வீட்டுக்கு வீடு பட்டதாரிகள், டாக்டர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்கு காரணம் திராவிட இயக்கம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
மாற்றம்- ஏமாற்றம்
இந்த நிலை வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குப் புரியவில்லை, தெரியவில்லை. அதனால்தான் ஆ.ராசா சொன்ன மாதிரி ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, ஏமாற்றமாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலை மாற வேண்டும். எனவே, இந்த நிலை மாறுவதற்கு இந்த மணவிழாவில் கலந்து கொண்டிருக்கக்கூடிய நீங்கள், வரக்கூடிய காலகட்டங்களில் சிறப்பான முறையில் சிந்தித்துச் பார்த்து செயல்பட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
அழகிரி, செல்வி ஆப்சென்ட்
“இயக்குநர் அமிர்தம், தலைவர் கலைஞருடைய சகோதரியினுடைய மகன், அதாவது என்னுடைய அத்தை மகன் அமிர்தம். கலைஞரின் இன்னொரு சகோதரியின் மகன்கள் தான் முரசொலி மாறன், முரசொலி செல்வம். நான், அழகிரி, மு.க. முத்து, தமிழரசு, செல்வி எங்களை எல்லாம் இந்த 3 பேரும்தான் வளர்த்தார்கள். பெற்றவர்கள் தலைவர் கலைஞராக இருந்தாலும், தயாளு அம்மாளாக இருந்தாலும், வளர்த்தவர்கள் இந்த மூன்று பேரும்தான்” என்று மு.க.ஸ்டாலின் பேசியிருந்தாலும் இந்த திருமண விழாவுக்கு மு.க. அழகிரியோ, செல்வியோ வரவில்லை.
