திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவால்தான் இன்று தவெக ஆட்சியில் இருக்கிறது. அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, தனியாக நின்று ஆட்சி நடத்துங்கள் என திமுக எம்எல்ஏ கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, திமுக எம்எல்ஏ கோவி. செழியன் பேசுகையில், “உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேச்சை சுட்டிக் காட்டி மேலூர் போன்ற பொதுத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உங்களை வெற்றி பெற வைத்தனர். அண்ணல் அம்பேத்கரின் இடஒதுக்கீடு, எங்களது தளபதியின் பிரச்சாரம், எதிர்க்கட்சித் தலைவரின் பிரச்சாரம் மற்றும் கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய உண்மையான கட்சி தொண்டர்களின் வாக்குகள் மூலமே எங்கள் அண்ணன் வெற்றி பெற்றார். குறிப்பாக தமிழகத்தில் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதியின் பெயரைப் போட்டுக்கொள்ளும் வழக்கத்தை உடைத்து, பி.ஏ., பி.எஸ்சி., எம்.ஏ., எம்.எஸ்சி. எனப் பட்டங்களைப் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளும் காலத்தை உருவாக்கியது பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் திமுக அடங்கிய திராவிட இயக்கமே” என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “திமுகவினர் பல இடங்களில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளை நாங்கள்தான் வெற்றி பெற வைத்தோம் என திமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் தனித்து நின்று 108 தொகுதிகளில் வென்றுள்ளது. 23 கட்சிகள் அடங்கிய கூட்டணி இல்லை என்றால் திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது; சென்னையில் இரண்டு தொகுதிகளில் கூட ஜெயித்திருக்க முடியாது. திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதற்கு கூட்டணியே காரணம். தைரியம் இருந்தால் அடுத்த தேர்தலில் தனித்து நின்று 50 இடங்களில் வெற்றி பெற்றுக் காட்டுங்கள்” என ஆவேசமாக தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்க திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்து பேசிய திமுக எம்எல்ஏ கோவி. செழியன், “ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. பூஜ்ஜியத்திலிருந்து மீண்டு வந்த இயக்கம் திமுக; எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ளத் தயார்” என்றார்.
தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ கே.என். நேரு, “திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவால்தான் இன்று தவெக ஆட்சியில் இருக்கிறது. அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, தனியாக நின்று ஆட்சி நடத்துங்கள்” என்று பதிலடி கொடுத்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “இங்குள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவமான அடையாளம் உள்ளது. யாரும் யாருக்கும் அடிமை இல்லை. தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்துவிடும்; தேர்தல் முடிவுகளுக்குப் பின் யாருக்கு ஆதரவளிப்பது என்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம்” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட், “காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை நடந்ததால்தான் இத்தனை எம்.பி.க்கள் திமுகவிற்கு கிடைத்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. கூட்டணி காரணமாகவே உங்களுக்கு எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் கிடைத்தனர். மத்தியில் நாங்கள் ஆண்ட போது காங்கிரஸ் ஆட்சி உங்களுக்கான பிரதிநிதித்துவத்தை தந்து அமைச்சர்களை தந்தது எங்கள் ஆட்சி. 22 ஆண்டுகள் நாங்கள் உங்களுடன் பயணித்து, உங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தந்தோம். இன்று எங்களுக்கான ஆட்சி வரும்போது அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்” என்றார்.
இதற்குப் பதிலளித்த திமுக எம்.எல்.ஏ கே.என். நேரு, “இந்தியா முழுவதும் யாத்திரை சென்ற போதிலும், தமிழகத்தில் மட்டும்தான் 40-க்கு 10 இடங்களைக் கொடுத்துள்ளோம்.ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது திமுக தான்”என்றார்.
மேலும் அமைச்ச்ர செங்கோட்டையன் பேசுகையில், 11 அமைச்சரவைப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியை திமுக ஆதரித்தது என்பதை சுட்டிக்காட்டினார்.
சபாநாயகர் தலையீடு
உறுப்பினர்களிடையே விவாதம் தீவிரமடைந்ததையடுத்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் தீர்மானிக்கப்படுவது. எனவே, இதர விவாதங்களைத் தவிர்த்து அவை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு” கேட்டுக்கொண்டார்.
