வைஃபை ஆன் செய்ததும், கட்ட வண்டி கட்ட வண்டி..கடையாணி கழண்ட வண்டி”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. கமல்ஹாசன் பாட்டு?
வாலி எழுதுன வரிகள் ப்ரோ.. 44 வருஷத்துக்கு முன்னாடி எழுதி இருந்தாலும் இன்னைக்கு ”தவெக ஆட்சி”ங்கிற வண்டியோட நிலவரத்துக்கு பொருத்தமா இருக்குங்க ப்ரோ..
ஆஹா.. பெருசா ஆரம்பிக்கிறீங்க.. தொடங்கட்டும் உங்க கச்சேரி..
ப்ரோ.. இன்னைக்கு சிஎம் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், இடதுசாரிகளின் எம்.எல்.ஏக்கள் ஆதரிக்கிறாங்க.. சொந்த எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையிலும் மதிமுகவும் ஆதரிக்குது..
ஆனா சிஎம் விஜய் ஆட்சி அமைச்சு 100 நாட்களை தாண்டிய நிலையில ஒவ்வொரு ’ஆதரவு’ கட்சியும் ‘ஆட்டத்தை’ ஆரம்பிச்சிருக்காங்க..

கோபிசெட்டி பாளையத்துல நடந்த பொதுக் கூட்டத்துல அமைச்சர் செங்கோட்டையன், “மதிமுகவைப் போல அதிமுகவிலும் எதிர்காலத்தில் தலைவர்கள் மட்டும்தான் இருக்க போறாங்க”ன்னு விமர்சிச்சாரு..
செங்கோட்டையன் பேச்சால மதிமுக ரொம்பவே கோபத்துல இருக்கு.. மதிமுக பொருளாளர் செந்திலதிபன், “அதிமுக கட்சியை மறுமலர்ச்சி திமுகவுடன் ஒப்பிட்டு அமைச்சர் செங்கோட்டையன் பேசி இருப்பது சரியல்ல.. செங்கோட்டையன் போன்றவர்கள் சற்று நிதானித்து , நாவடக்கத்துடன் பேச வேண்டும்”ன்னு காட்டமாகவே பதிலடி கொடுத்தார்.
விசிகவோட தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு திருமாவளவன் பிறந்த நாளான ஆகஸ்ட் 17-ந் தேதி உளுந்தூர்பேட்டையில நடந்துச்சு இல்லையா.. அந்த மாநாட்டுக்கு, “சிஎம் விஜய்யை அழைச்சாங்க.. அவரு மறுத்துட்டாரு.. அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவையும் கூப்பிட்டாங்க.. அவங்களும் கைவிரிச்சாட்டங்க”ன்னு ஒரு தகவல் பரவிகிட்டு இருக்கு..
இதை பத்தி திருமாவளவனுக்கு நெருக்கமானவங்க கிட்ட பேசுனப்ப, “கடந்த காலங்களில் விசிக மாநாடுகளுக்கு நிறைய பேரை அழைச்சிருந்தோம்.. ஆனா இந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு நாங்க யாரையுமே அழைக்கிறது இல்லைன்னுதான் முடிவு எடுத்திருந்தோம்.. ஏன்னா எங்களோட பலம் என்னான்னு தெரிஞ்சக்கவே இந்த மாநாட்டை நாங்க நடத்துனோம்.. அதுக்கு தகுந்த மாதிரி 10 லட்சத்துக்கும் அதிகமானவங்க மாநாட்டுல கலந்துகிட்டாங்க..
அதேநேரத்துல, ”தவெக கூட்டணியில இணைந்து பயணிப்போம்”-ன்னு அதிகாரப்பூர்வமாக திருமாவளவன் இந்த மாநாட்டுல அறிவிச்சாரு. இந்த அறிவிப்புக்கு தவெக தரப்புல இருந்து ஒரு ரியாக்சனும் வரலை. தவெக தலைவரான விஜய்யாவது, ”விசிகவின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்”ன்னு குறைந்தபட்சம் ட்வீட் போட்டிருக்கலாம்.. அல்லது புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மூலமா அறிக்கையாவது வெளியிட வெச்சிருக்கலாம்.. ஆனா நாங்க கூட்டணியில இருப்போம்னு அறிவிச்சதை, ஜஸ்ட் லைக் வேடிக்கை பார்த்துட்டு போகிறாங்கன்னா எங்களால அதை அப்படி ஜீரணிக்க முடியும்? ன்னு அதிருப்தியுடன் கொந்தளிக்கிறாங்க ப்ரோ..
தவெக கூட்டணி ஆட்சி அமைக்க சுழி போட்ட காங்கிரஸ் கட்சி லீடர்ஸ் இப்ப தவெக பத்தி பேசினாலே முகமெல்லாம் சிவந்து போகுது..
சட்டசபையில அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடங்கி அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள் பலரும், “அடுத்த பிரதமர் விஜய்”தான்னு பேசுறாங்க.. இதை காங்கிரஸ் கட்சி கொஞ்சமும் ரசிக்கவே இல்லை.

தவெகவோட இந்த பேச்சுக்கு முதல்ல சாஃப்ட்டா ரிப்ளை செஞ்சாரு மாணிக்கம் தாகூர். போனவாரம் மதுரையில பேசுனப்ப, “ தொண்டர்கள் வரும் போது என்னையும் பிரதமர், மத்திய அமைச்சருன்னு முழக்கம் போடுறாங்க.. அதை பெருசா எடுக்க வேண்டாம். ராகுல் காந்திதான் எதிர்க்கட்சிகளோட முகம்… தவெக ஆட்சிக்கு முதல்ல ஆதரவு தந்தது காங்கிரஸ்தான். தவெக தொண்டர்கள் முழக்கம் போடுறதுக்கு எல்லாம் பதில் தரனும்னா சொல்லிகிட்டே போகனும்.. அமைச்சர்களை கூட தவெக தொண்டர்களாகத்தான் பார்க்கிறேன்”ன்னு சொன்னாரு மாணிக்கம் தாகூர்..
ஆனா கடந்த 2,3 நாட்களாக மாணிக்கம் தாகூர் உட்பட காங்கிரஸ் லீடர்ஸ் பேசுறது எல்லாம் செம்ம கடுப்பில்தான்.. நேற்று முன்தினம் கோவையில பேசுன மாணிக்கம் தாகூர், “ இந்தியா கூட்டணியில இப்ப 23 கட்சி இருக்கிறது. தவெகவுக்கும் எம்.பி.க்கள் வரும் போது நாங்க இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு கூப்பிடுவோம்.. எம்.பி.க்களே இல்லாத கட்சியான தவெகவை போய், ‘இந்தியா கூட்டணி’ கூட்டத்துக்கு வாங்க வாங்கன்னு கூப்பிட்டுகிட்டு இருக்க முடியாது. எம்.பி.ன்னு ஒருத்தர் இருந்தால்தான் இந்தியா கூட்டணியில சேர்ப்போம்.
தவெகவுக்கு 108 சீட் கிடைச்சது. விஜய்கிட்ட ராகுல் காந்திதான் முதல்ல போன்ல பேசுனார். தான் முதல்வர் ஆகிறதுக்கு ராகுல் காந்திகிட்ட விஜய் ஆதரவு கேட்டார். அதுக்கு அப்புறம், விஜய் சிஎம் ஆகிறதுக்கு முதல் கட்சியாக காங்கிரஸ்தான் ஆதரவு கடிதம் கொடுத்துச்சு.
இப்ப பேசுற எல்லா தவெக அமைச்சர்கள் எல்லாருக்குமே இந்த உண்மை தெரியும். அவங்க எல்லாம் அமைச்சர்கள் ஆகிறதுக்கு காங்கிரஸ்தான் முதல் ஆதரவை கொடுத்துச்சு.. இல்லைன்னா தவெகவோட கதையை ‘அமித்ஷா’ முடிச்சுவிட்டிருப்பாரு.. தவெகவை உடைச்சு எடப்பாடியை சிஎம் ஆக்கியிருப்பாரு..”ன்னு ”வேற லெவல்” கோபமான டோனில் மாணிக்கம் தாகூர் வெடிச்சார்.
இதை பத்தி ராகுல் காந்திக்கு நெருக்கமான தமிழக பிரமுகர்கள்கிட்ட பேசுனப்ப, “தமிழ்நாடு அசெம்பிளி எலெக்ஷன் ரிசல்ட் வந்த மே 4-ந் தேதியே ராகுல் காந்தி காய்நகர்த்த ஆரம்பிச்சுட்டாரு.. விஜய் கட்சிக்கு 108 சீட் கிடைச்சது.. விஜய்க்கு ஆதரவு இருக்குன்னு தெரிஞ்சதாலே.. விஜய் தவெகவுடன் இணைந்து பயணிச்சா தென் மாநிலங்களில இந்தியா கூட்டணிக்கு 100 சீட் கிடைக்கும்னு கால்குலேஷன் போட்டாரு.. இதனால் அன்னைக்கே விஜய்கிட்ட போன்ல பேசினார் ராகுல். அப்பதான் ராகுல் காந்திகிட்ட விஜய் ஆதரவு கேட்டாரு.. அடுத்த நாளே காங்கிரஸும் விஜய்க்கு ஆதரவு கொடுத்துச்சு.
ஆனாலும் போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லையேன்னு கிண்டி ஆளுநர் மாளிகைக்கும் பனையூர் பங்களாவுக்கும் விஜய் அல்லாடிகிட்டு இருந்தாரு..
அதனால ராகுல் காந்தி நேரடியா களத்துல இறங்கிட்டாரு.. சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் குஞ்சாலி குட்டி.. இவங்ககிட்ட ராகுல் காந்தியே பேசி விஜய் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வெச்சாரு..
காங்கிரஸ் தலைவர் கார்கேவை விட்டு திருமாவளவன் கிட்ட தொடர்ந்து பேச சொன்னாரு ராகுல் காந்தி.. கார்கேவும் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தர்றதுக்கு 2 முறை திருமாகிட்ட பேசுனாரு.. இதுக்கு அப்புறம்தான் திருமாவும் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தாரு..
ஆனா இன்னைக்கு 3 மாசத்தில விஜய்யும் தவெகவும் வேற முகத்தை எங்ககிட்டேயே காட்டுறாங்களே.. உ.பி.யில அடுத்த வருஷம் அசெம்பிளி எலக்ஷன் வரப் போகுது.. ராகுல் காந்திதான் அடுத்த பிரைம் மினிஸ்டர்னு கோஷத்தை முன்வைச்சு நாங்க உ.பி.யில வேலை செஞ்சுகிட்டு இருக்கோம்.. ஆனால் விஜய் டீம் என்ன பண்ணுது.. அதே உ.பி. உட்பட இந்தி பேசுற மாநிலங்களில்ல, “அடுத்த பிரதமர் விஜய்”ன்னு பொய் பொய்யா இன்ப்ளூயன்சர்ஸை வெச்சு ரீல்ஸ் போட்டு பரப்பிகிட்டு இருக்காங்க.. இதுக்கு காசை வாரி இறைச்சுகிட்டு இருக்காங்க.. இதை நாங்க எப்படி கடந்து போக முடியும்?
விஜய் ஆட்சி அமைக்க ராகுல் காந்தி எவ்வளவு மெனக்கெட்டாருங்கிறதை மாணிக்கம் தாகூர் போன்றவங்க நேரில பார்த்தவங்க.. அப்படி இருக்கும் போது, “விஜய் பிரதமர்”ன்னு கோஷம் போட்டா மாணிக்கம் தாகூர் போன்றவங்களுக்கு கோபம் வராதா? அதைத்தான் அவர் பிரஸ்மீட்ல கொட்டிகிட்டு இருக்கிறாரு”ன்னு விவரிக்கிறாங்க ப்ரோ..
மதிமுக, விசிக, காங்கிரஸ் வரிசையில இடதுசாரிகள் கட்சிகளும் விஜய் அரசு மேல ‘செம்ம காண்டுல’ இருக்கிறாங்க.. சிபிஐ, சிபிஎம் கட்சி உறுப்பினர்களை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் கணக்கெடுக்க சொல்லி சுற்றறிக்கை அனுப்புனது, சிபிஐ, சிபிஎம், சிஜேபி போராட்டங்களில் மாணவர்கள் கலந்துக்க தடை விதிச்ச விவகாரங்கள் இரு கட்சிகளுக்குள்ளேயும் கடுமையான நெருக்கடியை கொடுத்திருக்குன்னு சொல்றாங்க..

இப்ப “தலைமை செயலாளரை” மாற்றனும்னு கோரிக்கையை வெச்சு கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்துறாங்க.. ”நாங்க வேணுமா? அதிகாரிங்க வேணுமா”ன்னு கேள்வி கேட்கிறாங்க.. ஆனாலும் கூட ரெண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும் விஜய் ஆட்சியோட இந்த ஆக்ஷன்ஸ் ‘ஆறாத ரணமா’ ‘பெருங்கோபமா’ இருக்குன்னு சொல்றாங்க ப்ரோ..
இப்ப சிஎம் விஜய் என்ன செய்ய போறாராம் ப்ரோ?
ஆமாம் ப்ரோ.. இதை பத்தி சிஎம் விஜய்க்கு நெருக்கமானவங்க கிட்ட பேசுனப்ப, ”அமைச்சரவையில இணைஞ்சிருக்க காங்கிரஸ், விசிகவும் அதிருப்தியில இருக்கு.. ஆட்சிக்கு எம்.எல்.ஏ.க்களுடன் ஆதரவு தர்ற இடதுசாரிகளும் நெருக்கடி கொடுக்கிறாங்க.. இவங்க எல்லாம் தொடர்ந்து 5 வருஷம் நமக்கு நம்ம ஆட்சி நீடிக்கிறதுக்கு ஆதரவு தருவாங்களா? அப்படிங்கிறது எல்லாம் சந்தேகம்தான்..
அதனால அதிமுகவில இருந்து இன்னும் 10,15 எம்.எல்.ஏக்களை நம்ம பக்கம் தூக்கிட்டு வந்துடனும்.. எல்லா தொகுதிகளுக்கும் சீக்கிரமா இடைத்தேர்தல் நடத்தி நம்ம சொந்த பலத்தை எவ்வளவு சீக்கிரமா அதிகரிக்கனுமோ அதிகரிச்சுடனும்”ன்னு சீனியர் அமைச்சர்கள்கிட்ட சிஎம் விஜய் சொன்னார்..”ன்னு சொல்றாங்க ப்ரோ..
விஜய்யோட இந்த மூவ்வை தெரிஞ்சுகிட்ட காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், ”மற்றக் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, இடைத்தேர்தலுக்காக இவர்கள் கட்சியில் சேர்வதை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கிறேன். அது தேவையே கிடையாது. தேர்தல் நடந்து 3 மாதத்துக்குள் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துவிட்டு, இன்னொரு கட்சியில் சேர்ந்து இடைத்தேர்தலை சந்திப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்களுக்கு சீட் கொடுக்கவும் கூடாது. அதை நான் வன்மையாக நிராகரிக்கிறேன்”ன்னு சீறியிருந்தாரு..
ஆனா இனிவரும் நாட்களில் விஜய் போட்டிருக்கும் ஸ்கெட்ச் படிதான் நடக்கப் போகுது அப்படிங்கிறதை அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவில் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு தாவ ரெடி”ன்னு ஓபனாக உடைச்சு பேசிட்டார்..
தவெக ஆட்சிக்கான ஆதரவை திரும்பப் பெறுவோம்னு எந்த கட்சி முதல்ல சொல்லப் போகுது? அதுக்குள்ள தவெகவுக்கு எத்தனை அதிமுக எம்.எல்.ஏக்கள் தாவுவாங்க? கூட்டணி கட்சிகள் கழன்றுகிட்டு போறதுக்கு முன்னாடியே ‘இடைத்தேர்தல்களை’ ஜரூரா நடத்திடுமா தவெக அரசு?ன்னு நிறைய கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் இருக்குதுங்க ப்ரோ” என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
