விஜய் அரசு பரந்தூர் திட்டத்தை ரத்து செய்வதற்கு காங்கிரஸ் ஆதரவு ஏன் – மாணிக்கம் தாகூர் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Congress

தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 24) பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழு ஆண்டுகளாக ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கப் போராடி வந்தனர். இன்று பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இது ஒரு கட்சியின் வெற்றியா, மற்றொரு கட்சியின் தோல்வியா என்பதல்ல கேள்வி. இந்தத் திட்டம் தொடக்கத்திலேயே நியாயப்படுத்தக்கூடியதாக இருந்ததா என்பதே கேள்வி. அரசின் சொந்த ஆய்வுகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த ரத்துக்கு ஆதரவு அளிப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு:

ADVERTISEMENT
  1. அரசின் சொந்த ஆய்வே இதை 2022-ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியது.
    இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மார்ச் 2022-ல் சமர்ப்பித்த சாத்தியக்கூறு அறிக்கையிலேயே, பரந்தூர் நீர்நிலைகளால் சூழப்பட்ட பகுதி என்றும், தேர்வு செய்யப்பட்ட நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான பகுதி பாசனக் குளங்களைக் கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 201 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட செயற்கை ஏரி ஒன்று திட்ட எல்லையிலிருந்து வெறும் 1.4 கி.மீ. தொலைவில் இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2026-ல் TVK அரசு திட்டத்தை ரத்து செய்யக் கூறிய காரணமான தாழ்வான நிலப்பரப்பு மற்றும் நீர் தேங்கும் தன்மை ஆகியவை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அரசின் பதிவில் இருந்தன.
  2. தேர்வு செய்யப்பட்ட இடம், அரசே வகுத்திருந்த அளவுகோல்களில்கூட நிலைத்து நிற்கவில்லை.
    மாற்று இடமான பன்னூருடன் ஒப்பிடும்போது, பரந்தூர் சென்னையிலிருந்து கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு தொலைவில் இருந்தது 62 கி.மீ.க்கு எதிராக 27.6 கி.மீ. மேலும், பன்னூரில் சுமார் 250 குடும்பங்கள் இடம்பெயர வேண்டியிருந்த நிலையில், பரந்தூரில் சுமார் 1,005 குடும்பங்கள் பாதிக்கப்பட வேண்டியிருந்தது. அதேபோல், நிலத்தை நிரப்பி சமன்படுத்துவதற்கான பணியும் பரந்தூரில் சுமார் இருமடங்கு அதிகமாக இருந்தது. அரசு முக்கியமானதாகக் கருதிய பெரும்பாலான அளவுகோல்களிலும் பன்னூரே வலுவான மாற்றாக இருந்தது.
  3. ஏழு ஆண்டுகாலப் போராட்டம் உண்மையான, நியாயமான குறையை வெளிப்படுத்தியது.
    ஏகனாபுரம் மக்கள் 1,000 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடினர். இது வளர்ச்சிக்கு எதிரான போராட்டமல்ல | தங்களது நிலம், நீர், வாழ்வாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க ஒரு சமூகமே நடத்திய நியாயமான போராட்டம். இன்று அரசின் சொந்த ஆவணங்களே அவர்களின் அச்சங்களை உறுதிப்படுத்தியுள்ளன.
  4. ரத்துக்கான காரணங்கள் மூன்று ஆண்டுகளாகவே அரசின் பதிவில் இருந்தன.
    TVK அரசு ரத்துக்கான தொழில்நுட்ப காரணங்களாக முன்வைத்த அம்சங்கள் அனைத்தும் 2022-ஆம் ஆண்டின் ஆய்விலேயே இருந்தன. ஆனால் அவை மூன்று ஆண்டுகளாக நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. இது எந்த ஒரு கட்சி அல்லது ஆட்சியையும் மட்டும் சார்ந்த தோல்வி அல்ல நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல ஆண்டுகளைக் கடந்து செல்லும் ஒரு தவறாகும்.
  5. இது காங்கிரஸ் கட்சியின் நீண்டகால தேசிய நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது.
    பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு முன், பாதிக்கப்படும் மக்களின் உண்மையான ஒப்புதலும், சுயாதீனமான சமூக தாக்க மதிப்பீடும் அவசியம் என்பதே காங்கிரஸின் நீண்டகால நிலைப்பாடு. 2013-ஆம் ஆண்டின் Right to Fair Compensation and Trans-parency in Land Acquisition> Rehabilitation and Resettlement Act # சட்டரீதியாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளன. எனவே, பரந்தூர் ரத்து முடிவுக்கு எங்களது ஆதரவு அந்த அடிப்படைக் கொள்கையிலிருந்தே வருகிறது.
  6. நிலம் கையகப்படுத்தப்பட்ட சட்ட நடைமுறையிலும் தீவிரமான குறைபாடுகள் இருந்தன.
    தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்கள் சட்டம், 2023 (Tamil Nadu Land Consolida-tion for Special Projects Act-2023) மூலமாக, ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட நிலங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சட்டம் சட்டப்பேரவையில் ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பாதிக்கப்படும் குடும்பங்களின் உண்மையான ஒப்புதல் பெறும் நடைமுறை இல்லாத நிலையில், ஐந்து பேர் கொண்ட குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதிகள், முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA), மாநில ஈரநில ஆணையத்தின் தடையின்மைச் சான்று (NOC) ஆகியவை நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் நிலுவையில் இருந்தன.
  7. எங்களது நிலைப்பாடு ஒரு அரசியல் அறிவிப்புக்கான எதிர்வினையல்ல ஆதாரங்களின் அடிப்படையிலானது.
    முந்தைய ஆளும் கட்சியின் அரசியல் முடிவுக்கு பதிலளிக்கும் வகையில் எங்களது நிலைப்பாடு உருவாக்கப்படவில்லை. அரசே நியமித்த ஆய்வு மற்றும் அரசின் ஆவணங்களில் பதிவாகியுள்ள உண்மைகளின் அடிப்படையிலேயே எங்களது ஆதரவு உள்ளது. எனவே, இது கட்சி அரசியலைத் தாண்டிய, கொள்கை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான நிலைப்பாடாகும்.
  8. மாற்றுத் திட்டத்திற்கும் அரசு தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.
    சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை முறையான சமூக தாக்க மதிப்பீடு (Social Impact Assessment) மற்றும் பாதிக்கப்படும் மக்களின் உண்மையான ஒப்புதல் பெறும் நடைமுறை மூலம் கண்டறிந்து, ஆய்வு செய்து, இறுதி அனுமதிகளைப் பெறுவதற்கான தெளிவான காலக்கெடுவை அரசு பொதுவெளியில் அறிவிக்க வேண்டும். ஒரு தவறான முடிவைத் திருத்துவது, சென்னையின் விமான நிலையம் அதன் முழுத் திறனை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மாற்றுத் திட்டத்தை முடிவில்லாமல் தாமதப்படுத்தும் புதிய காரணமாக மாறக்கூடாது.
    ஆனால், எங்களது ஆதரவு திட்டம் ரத்து செய்யப்பட்டதுடன் முடிவடையாது.

நெல்வாய், நாகப்பட்டு, தண்டலம், போடவூர், வாலத்தூர் மற்றும் அக்கம்மாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பக்கமும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதியாக நிற்கிறது.

அவர்களின் நிலம் தொடர்பான நிலைப்பாட்டை மூன்று மாதங்களுக்குள் அரசு தெளிவுபடுத்த வேண்டும். இன்னும் வழங்கப்பட வேண்டியுள்ள சுமார் 30% இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அடிப்படை குடிமை வசதிகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். மேலும், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்காக எதிர்காலத்தில் எந்த இடம் தேர்வு செய்யப்பட்டாலும், பாதிக்கப்படும் மக்களுடன் உண்மையான, வெளிப்படையான ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.

ADVERTISEMENT

சென்னைக்கு கூடுதல் விமானப் போக்குவரத்து திறன் தேவை என்பது உண்மை.

ஆனால், எந்த ஒரு நகரத்தின் வளர்ச்சியும் ஒரு சமூகத்தின் நிலம், நீர், வாழ்வாதாரம் மற்றும் கண்ணியத்தை அவர்களின் உண்மையான ஒப்புதலின்றி – பலிகொடுத்து உருவாகக் கூடாது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share