தமிழகச் சட்டப்பேரவையில் ‘கன்னிப் பேச்சு’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘அறிமுக உரை’ அல்லது ‘முதல் உரை’ எனப் பயன்படுத்த வேண்டும் என்று பா.ம.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண் எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முதல்முறையாகப் பேசும்போது, அதனை ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடுவது நீண்டகால மரபாக இருந்து வருகிறது. தமிழகச் சட்டப்பேரவையிலும் இன்று வரை இந்த சொல் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ‘கன்னிப் பேச்சு’ என்ற வார்த்தைக்குப் பதிலாக, ‘அறிமுக உரை’ அல்லது ‘முதல் உரை’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம், பா.ம.க. எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி கோரிக்கை வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. லதாவும் இந்தக் கோரிக்கையை முன்மொழிந்தார். அவர் பேசுகையில், “‘கன்னிப் பேச்சு’ என்ற வார்த்தை ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்துவதாக உள்ளது; எனவே, அதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “கடந்த கால ஆட்சியிலும் சட்டப்பேரவையிலேயே பா.ஜ.க. எம்.எல்.ஏ. சீனிவாசன் இதுகுறித்து பேசியிருந்தார். அந்த அவையிலும் இதைப் பரிசீலனை செய்வதாக அப்போதைய சபாநாயகர் தெரிவித்திருந்தார். எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி கூறியிருப்பது நல்ல ஆலோசனை. இது ஒரு மரபாக இருந்து வரும் நிலையில், வெற்றித் தலைவரின் ஆட்சியில் இதைப் பரிசீலனை செய்யலாம்” எனத் தெரிவித்தார்.
