சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது, தமிழகத்தில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் என்எல்சி நிறுவனம் குறித்த விவாதத்தின் போது பேசிய பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, “தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்றால் அது என்எல்சி தான்; அங்கிருந்த விவசாயிகள் அனைவரையும் ஒரே இரவில் தூக்கிப்போட்டுவிட்டு, தண்ணீரையும் உறிஞ்சி எடுத்து அதன் வளத்தைக் கெடுத்துவிட்டனர். நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளுக்குக் கூட பணி வழங்கவில்லை. நிலம் கொடுத்த விவசாயிகளின் பிள்ளைகளைப் பணியில் சேர்த்துக்கொள்ள எதற்கு என்எல்சி தேர்வு வைக்க வேண்டும்? மண்ணின் மைந்தர்களுக்கு வேலை தர வேண்டும்; இல்லை என்றால் பயிற்சி அளித்து வேலை தர வேண்டும். எக்ஸாம் வைத்து வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வேலை வாங்குகிறார்களே தவிர, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கோ, விவசாயிகளின் பிள்ளைகளுக்கோ வேலை கொடுப்பது இல்லை. அங்கு நுழைவுத் தேர்வு எதற்கு, மெடிக்கல் சீட்டா கொடுக்கிறார்கள்?” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “என்எல்சி கொடுக்கிற தகவல்கள் எல்லாமே உண்மைக்குப் புறம்பான தகவல்கள் தான்; விவசாயிகளுக்காக அவர்கள் எதுவும் செய்ததில்லை. அவர்கள் சி.எஸ்.ஆர் (CSR) நிதி எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்; அதற்கு ஒரு கணக்கு கொடுப்பார்கள், ரோடு போட்டோம், பாலம் கட்டினோம் என்பார்கள். அது அவர்களது வளாகத்திற்குள் தான் செய்திருப்பார்களே தவிர, மக்களுக்கு எதுவும் பண்ணவே இல்லை” என்று தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “என்எல்சி நிறுவனம் குறித்து நிறைய கோரிக்கைகளை வைக்கிறார்கள். இதுவரை சி.எஸ்.ஆர் நிதி ஒதுக்காமல் அவர்கள் நிறைய பிரச்சனை செய்திருக்கலாம், அதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், விவசாயிகளுக்கு எப்போதும் தேவைக்கு அரசு துணை நிற்கும். என்எல்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது; கமிட்டி அமைத்திருக்கிறோம், முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இது தொடர்பான தகவல்கள் விரைவில் வழங்கப்படும். கண்டிப்பாக நாங்கள் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்; விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஆதரவாகவும் கண்டிப்பாக இருப்போம். என்எல்சி நிறுவனம் அப்படி இருப்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
