மாணவர் போராட்டங்களுக்கு தடை- விஜய் அரசை ’மென்மையாக’ எதிர்ப்பதா? சிபிஐ-சிபிஎம் மீது திருமுருகன் காந்தி பாய்ச்சல்!

Published On:

| By Mathi

Thirumurugan Gandhi slams CPI, CPM on Student Protests Ban

தமிழக கல்லூரி மாணவர் போராட்டங்களுக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் சட்டசபையில் இடதுசாரி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மென்மையாக முதல்வர் விஜய் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமுருகன் காந்தி வெளியிட்ட அறிக்கை: மாணவர் குறித்த சுற்றறிக்கை குறித்த காங்கிரஸ் கட்சியின் உயர்கல்வித் துறை அமைச்சரின் விளக்கம் ஏற்புடையதல்ல. பிழைதிருத்தம் செய்வதைப் போல அறிக்கை மாற்றம் செய்யப்பட்டது என்கிறார். ‘..இடதுசாரி மாணவர் அமைப்புகள் மீதான கண்காணிப்பு..’ என்பது ஏதோ மேலோட்டமான தவறு நடந்துவிட்டதாக அவர் தெரிவித்திருப்பது ‘குற்றத்தை மூடி மறைப்பதாகும்’.

ADVERTISEMENT

இவ்வாறான அடிப்படை உரிமை குறித்து அறிவற்ற அதிகாரிகளை வைத்து கல்வி இயக்ககம் செயல்படுகிறதெனில், அந்த அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அதிகாரிகள் மட்டுமல்ல, அமைச்சரும் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். ஏற்கனவே தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பிற்குள்ளாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த உத்தமர் அவர்.

ADVERTISEMENT

கல்வித்துறையின் உயர் அதிகாரி பீகார் மாநிலத்தை சார்ந்தவர். வழக்கம் போல சங்கித்தனமான அதிகாரியாக அவர் செயல்பட்டிருக்கிறார். மாணவர்களிடத்தில் சாதிய-மதவாத அமைப்புகள் குறித்தெல்லாம் தகவலை திரட்ட விரும்பாத கல்விச் செயலாளர், இடதுசாரி அமைப்புகள் குறித்து மட்டுமே கவனிப்பாரென்றால், அவரது கயமையையும், சங்கித்தனத்தையும் சகித்துக்கொண்டா செல்ல வேண்டும் நாம்?

இடதுசாரி கட்சிகள் மிகத்தீவிரமாக எதிர்ப்பை பதிவு செய்தாக வேண்டும். இந்த அமைச்சரும், கல்விச்செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் நீக்கம் செய்யப்பட வேண்டும். அறிக்கை திரும்பப்பெற்றுவிட்டாலும், இந்த மனநிலை அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறதென்பது அம்பலமாகி இருக்கிறது. அறிக்கை திரும்பப் பெறுதல் என்பது சம்பிரதாயமானது. இதனால் பயன் விளையப்போவதில்லை.

ADVERTISEMENT

கல்வி, மாணவர் குறித்த எவ்வித அடிப்படை அறிவுமற்ற கும்பல் இந்தத்துறையை நடத்திக்கொண்டிருக்கிறது. இவர்கள் சமூகவிரோதிகள். மாணவர் எதிர்காலத்தை நாசம் செய்யவே இவர்கள் பயன்படுவார்கள்.

சட்டமன்றத்தில் கல்வி அமைச்சரை இடைமறித்திருக்க வேண்டும். ஆனால் மிகமென்மையாகவே எதிர்ப்பை இடதுசாரிகள் பதிவு செய்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. பிற சனநாயக கட்சி உறுப்பினர்களும் இதுகுறித்து அமைதி காப்பது முறையல்ல. மாணவர்களின் அரசியல் உரிமை குறித்து அதிகாரிகள் , ஆட்சியாளர்கள் தலையிட எவ்வித அதிகாரமோ, யோக்கியதையோ கிடையாது எனும் செய்தி உயர்மட்ட அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டவேண்டும். மக்கள் விரோதிகளாக மாறிப்போய் ,ஊழலில் திளைக்கும் இந்த அதிகாரிகள் மீதான மக்கள் விசாரணை அதிகரித்தாக வேண்டும். இந்த அதிகாரிகளை கையாளும் திறமையோ, நேர்மையோ ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இருந்ததில்லை எனும் நிலையில் Public Accountability நம்மிடம் இருந்து எழவேண்டும். இவ்வாறு திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share