அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மாணவருக்கு நிதி ஒதுக்கப்பட்டதா? அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) திமுக எம்எல்ஏ கோவி.செழியன், மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி (Ph.D) இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் தனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை எனப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறதா என்ற கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “இரண்டு நாட்களாக இந்த வீடியோ அரசியல் உள்நோக்கத்தோடு பரப்பப்பட்டு வருகிறது. மலேசியாவில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என ஊடகங்களில் வெளிவரும் செய்தி தவறானது. இது உள்நோக்கத்தோடும் அரசியல் நோக்கத்தோடும் பரப்பப்படுகின்ற செய்தி என்பதை சமூக நீதித்துறையின் சார்பாகச் சொல்ல விரும்புகிறேன்.

ADVERTISEMENT

மலேசியப் பல்கலைக்கழகத்தில் ‘Tissue Engineering and Regenerative Medicine’ பிரிவில் உயர்கல்வி பயில, மாணவர் பாரதிதாசனுக்கு மூன்றாண்டுகளுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரால் 09.01.2025 அன்று பரிந்துரைக் கடிதம் (Sponsorship Letter) அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ், ஒரு மாணவர் கல்வி நிறுவனத்திற்குச் செலுத்தும் கட்டணம், அவர் வெளிநாட்டில் தங்கிப் படிப்பதற்கான வாழ்க்கைச் செலவினம் மற்றும் இதர செலவினங்கள் (Living & other Expenses) ஆகியவற்றைச் சேர்த்து அதிகபட்சமாக ரூ.36.00 லட்சம் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

National University of Malaysia-வில் மாணவர் பாரதிதாசன் பயிலும் Ph.D. படிப்புக்கு, ஆண்டொன்றுக்கு கல்விக் கட்டணமாக ரூ.5.00 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர் 2025-2026-ஆம் ஆண்டு தனது முதலாமாண்டு Ph.D. படிப்புக்குக் கல்விக் கட்டணம் போக மீதமுள்ள ரூ.31.00 இலட்சத்தையும் வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினமாகக் கோரியிருந்தார். அரசால் மீதமுள்ள ரூ.31.00 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையைப் பெற்ற பின், உரிய செலவினங்களுக்கான ஆவணங்களை உடனே சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், 10 மாதங்கள் கடந்த பின்னரும் அவர் ஆவணங்களைச் சரிவரச் சமர்ப்பிக்காமல், 2-ஆம் ஆண்டிற்கான உதவித்தொகையாக ரூ.36.00 இலட்சத்தைக் கோரி வருகிறார்.

இருந்தபோதிலும், மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, அவரது 2-ஆம் ஆண்டு Ph.D. கல்விக்காக அவர் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்த வேண்டிய முழு கல்விக் கட்டணம் ரூ.5.57 இலட்சம் மற்றும் வாழ்க்கைச் செலவினமாக ரூ.6.65 இலட்சம் என ஆக மொத்தம் ரூ.12.00 இலட்சம் அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுவரை மாணவருக்கு வழங்கப்பட்ட தொகை குறித்த விபரங்கள்

இதுவரை ரூ.48,22,097/- மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு அவருக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதற்குரிய சரியான பயனீட்டு விவரங்கள் மற்றும் ஆவணங்களை அவர் சமர்ப்பிக்காமல் உள்ளார். மேலும், உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காமலேயே கூடுதல் தொகையைப் பெற, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் மாணவர் தவறான தகவல்களைக் கொடுத்து வருகிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் எந்தவிதமான தாமதமோ, தடங்கலோ இல்லை.

மாணவர் பரப்பிய தவறான செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல், அரசியல் உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் 84 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை 131 கோடி ரூபாய் என இதுவரை இல்லாத வரலாற்றுச் சாதனையாக வழங்கப்பட்டுள்ளது. இதைப் பொறுக்காமல், இன்று அந்த மாணவரின் தவறான செய்தியை வைத்து அரசியல் உள்நோக்கத்தோடு பரப்புவது தவறானது,” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ கோவி. செழியன், “சமூக நீதித்துறை அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் மற்றும் மாணவர் பாரதிதாசன் பெற்ற நிதி குறித்த விவரங்களை முழுமையாகச் சொன்னார். நாங்களும் கேட்டோம். ஆனால், வானத்தில் பறக்கும் விமானத்தைப் பார்த்து அதில் ஏறுவோமா என்று ஏங்கியிருந்த ஆதிதிராவிட மக்களுக்கு, குறிப்பாக நீலகிரி மாவட்டம் தேயிலை தோட்டத்தில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகள் கூட கனடா சென்று பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படிக்கக்கூடிய திட்டத்தை அறிவித்தவர் அப்போதைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அந்தத் திட்டத்தின் கீழ்தான் மாணவர் பாரதிதாசன் பயில்கிறார்.

அமைச்சர் இரண்டு மூன்று தினங்களுக்கு முன், இத்திட்டத்தின்கீழ் எல்லா மாணவர்களுக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டுவிட்டது என்று செய்தி வெளியிட்டார். அந்தச் செய்தி பரவிய பின்னர்தான், ‘தனக்கு நிலுவைத்தொகை வரவில்லையே’ என்ற ஆதங்கத்தில் மாணவர் பாரதிதாசன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சொன்ன அனைத்து நிதியுதவிகளும் திராவிட மாடல் நாயகர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில்தான் பாரதிதாசனுக்கு வழங்கப்பட்டது என்பது உண்மை. மாறாக, மாணவர் கருத்து தெரிவித்த பிறகு புதிய நிதி ஒதுக்கீட்டைத் தற்போதைய அரசு செய்திருக்கிறதா என்பதை அமைச்சர் சொன்னால், ஆதிதிராவிட மாணவர்கள் மத்தியில் உள்ள ஐயத்தைப் போக்கும்,” என்றார்.

அமைச்சர் வன்னி அரசு அளித்த விளக்கம்

தொடர்ந்து பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “நாங்கள் யாரும் கடந்த ஆண்டில்தான் அவருக்கு உதவித்தொகை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கவில்லை. கடந்த 07.05.2026 அன்று கடைசியாக வழங்கப்பட்ட தொகையையும் நாங்கள் சொல்லியுள்ளோம்.

கடந்த முறை 500 பேர் விண்ணப்பம் செய்தார்கள்; ஆனால் முந்தைய அரசு நிதி வழங்கியது மிகவும் குறைவு என்ற அடிப்படையில்தான் நாங்கள் சொன்னோம். கடந்த முறையை விட இந்த முறை மூன்று மடங்கு அதிகமாகக் கொடுத்துள்ளோம். நான் இத்துறைக்கு வந்த பிறகு, விண்ணப்பம் செய்த அத்தனை மாணவர்களுக்கும் அவர்களின் தகுதிக்கு ஏற்ப வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

முதல்வர், ‘அயலகத்தில் படிக்கக்கூடிய இந்த மாணவர்களின் கல்வி எந்தச் சூழலிலும் தடைப்படக் கூடாது; அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும்’ என்று வழிகாட்டியுள்ளார். அந்த வகையில்தான் தற்போது கூடுதலாகத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், யு.கே (UK) செல்லும் மாணவர்களுக்கு விசா பிரச்சனை உள்ளது என்பது குறித்தும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆகவே, இதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை, பதற்றமும் இல்லை. இந்த ஆண்டு 362 மாணவர்களும் அயலகம் சென்று படிப்பார்கள். தவறான செய்தியைப் பரப்பக் கூடாது என்பதற்காகவே இதை விளக்கினேன்,” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share