சட்டப்பேரவையில் மாற்றங்கள் : சபாநாயகர் அறிவிப்பு!

Published On:

| By Kavi

சட்டப்பேரவையில் சில மாற்றங்களைச் செய்யப் போகிறேன் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சில நாட்களில் மாலை 6 மணியை கடந்தும் நடைபெறுகிறது. நேற்று மாலை 6 மணி கடந்தும் அமைச்சர் என்.ஆனந்த் பேசிக்கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அவர் பேசி முடித்ததும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நாளையில் (இன்று ஆகஸ்ட் 20) இருந்து சில மாற்றங்கள் செய்யவிருப்பதாக அறிவித்தார்.

அவர் கூறுகையில், ”இப்போது 6:35 ஆகிவிட்டது. நாளை முதல் சில மாற்றங்களை செய்ய விரும்புகிறோம். அதில் விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் பிரதான கட்சிகளுக்கு மூன்று பேர் என்று சொல்லியிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மூன்று பேர், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மூன்று பேர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மூன்று பேர். இந்த மூன்று பேருக்குமே வாய்ப்பளிப்பது என்ற முடிவு இருக்கிறது.

ADVERTISEMENT

ஆனால், முதலில் பேசுகின்ற உறுப்பினர்கள் 15 நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும் என்கின்ற பொழுது, மற்றவர்களுக்கு 10, 10 நிமிடங்கள் தான் தரப்பட வேண்டும் என்பதும், இந்த நேரக் கட்டுப்பாட்டை உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

முதல் பெல்… நான் ஒற்றை பெல் அடிக்கிற போது, இந்த போக்குவரத்திலே போகிற மஞ்சள் லைட் எரியும். அப்புறம் வந்து, சிவப்பு விளக்கு எரியவது போல இங்கே இரண்டு பெல் அடித்தால் முடித்துவிட வேண்டும், அடுத்த உறுப்பினரை நான் அழைத்து விடுவேன்.

ADVERTISEMENT

ஏனென்று சொன்னால், உறுப்பினர்கள் கவனமாக கேட்கவும், சோர்வில்லாமல், அந்த அணுகுமுறையை வைத்துக்கொள்வதற்கும் இந்த நேரக்கட்டுப்பாடு அவசியம் என்று நான் கருதுகிறேன்.

ஏனோ தானோ என ‘Members present’ என்று சொல்வதற்காக நாங்கள் வரவில்லை. ஆழ்ந்து சிந்தித்து, கவனித்து செயல்படுவதற்குரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று சொன்னால், அதற்குரிய வகையில் நாம் செயல்பட வேண்டும். அந்த வகையில் நேரத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் .

பிரதான கட்சிகளைத் தாண்டி, மற்ற கட்சிகள் எல்லோருக்கும், எல்லா கட்சிகளுக்கும் எல்லா நாளும் வாய்ப்பு தர இயலாத நிலைமைகள் எல்லாம் ஏற்படலாம். அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த புதிய அணுகுமுறை மானியக் கோரிக்கை வருகிற போது, அந்த மானியத்தை ஒட்டி இதுவரை பேசாத உறுப்பினர்கள்… இதுவரைக்கும் அவைக்கு வந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்காத உறுப்பினர்களுக்கும் அல்லது புதிய கருத்தை, புதிய கோணத்தில், புதிய திட்டத்தை வைத்திருக்கிற உறுப்பினர்கள்… அமைச்சர்களுக்கு அந்த மானியக் கோரிக்கை கருத்துக்களை சொல்ல விரும்புகின்றவர்களுக்கு ஒரு மணித்துளிக்குள், ஒரு நிமிடத்திற்குள்ளாக சொல்வதற்குரிய வாய்ப்பை வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஏனென்றால், நிறைய பேருக்கு இந்த மானியக் கோரிக்கையிலே பேசுகிற வாய்ப்பு கிடைக்காது. மூன்று பேர் தான் ஒரு கட்சிக்கு என்றால், பிரதான கட்சிகளிலே சிரமம் இருக்கும். நானும் பேச வேண்டும், ன்று எல்லோரும் கேட்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மானியக் கோரிக்கை நடந்து கொண்டிருக்கிற போதே, ஒருவர் பேசி முடித்தவுடனே தனியாக எழுந்து கரங்களை உயர்த்துகிற போது, மீண்டும் மீண்டும் பேசுகின்றவரே பேசாமல், புதிதாக கருத்துக்களை சொல்வதற்குரிய வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் என்று விரும்பி இருக்கிறோம்.

அதே போன்று, 55 விதியின் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைய கொடுக்கப்பட்டிருக்கிறது. துறையிலிருந்து பதில் வந்த அந்த கவன ஈர்ப்பு தீர்மானங்களை எடுத்துக்கொள்வதைப் பற்றியும், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எதை தீர்மானிக்கலாம் என்பதைப் பற்றியும் நான் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முழுமையான விவாதங்கள் நடப்பதற்கு அரசாங்கத்திலிருந்து பதில் வர வேண்டும், அமைச்சரிடமிருந்து பதில் வர வேண்டும். பதில் வராத நிலையிலும் மென்ஷன் பண்ணுவதற்கு, அதை பதிவு செய்வதற்குரிய வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்.

ஏனென்றால், அவசர அவசியம் கருதித்தான் இந்த 55 விதியின் கீழே கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்படுகிறது. அவசர அவசியம் என்று கருதிய பிறகு நாட்கள் கடந்துவிட்டால் அந்த அவசரமும் போய்விடுகிறது, அவசியமும் போய்விடுகிறது. எனவே மென்ஷன் பண்ணுவதற்கு, பதிவு செய்வதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். எது அவசியம் என்று நான் கருதுகிறேனோ, அவற்றை தகவலுக்காக நான் உங்களுக்கு முன்கூட்டியே சொல்லிவிடுவேன். வருகிற போது நீண்ட நெடிய பேச்சாக இல்லாமல், குறிப்பாக நீங்கள் கொடுத்திருக்கிற தீர்மானத்தை மட்டும் படிப்பதாக இருந்தால், அதை செய்வதற்குரிய வழிவகைகளைக் காண்பதற்கு நான் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.

நம்முடைய மாண்புமிகு உறுப்பினர்கள் பொறுமையாக இருந்து, நீண்ட நேரம் அமர்ந்து இந்த அவையினுடைய சிறப்பை, மாண்பை நீங்கள் தொடர்ந்து காப்பாற்றி வருவதற்காக, நிலைப்படுத்துவதற்காக என் நெஞ்சார்ந்த நன்றியை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share