திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் விவகாரத்தில் முதல்வர் விஜய் அரசின் அணுகுமுறை மிக மிக மோசமானது என்று ஆளும் தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குற்றம் சாட்டி உள்ளார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “கம்யூனிஸ்டுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தச் சட்டவிரோதமாகக் குறிப்பாணை வெளியிட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர் பயிற்சி முடித்து விடுவிக்கப்பட்டு, சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் பணியேற்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல!

வட்டாட்சியரின் செயல் சட்டவிரோதமானதும் கடும் கண்டனத்திற்குரியதும் ஆகும். மாநில அரசின் வழிகாட்டலின் அடிப்படையில் தான் மாவட்ட ஆட்சியரின் இந்நடவடிக்கை என்றால், அரசின் அணுகுமுறை மிக, மிக மோசமானது. எனவே, வட்டாட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை தேவை- சு.வெங்கடேசன் எம்.பி.
சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன், “கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களை அப்பணிக்குப் பயன்படுத்த ஆணையிட்டதும் குற்றச்செயலாகும். இடமாற்றத்தின் மூலம் குற்றவாளி தப்பித்துக் கொள்ள அனுமதிக்க முடியாது.
வட்டாட்சியராகப் பயிற்சி பெறும் காலத்திலேயே இவ்வளவு அதிகாரத் திமிறோடு நடந்து கொள்ளும் ஒருவர், பணிகாலம் முழுவதும் மக்கள் விரோதியாகத்தான் நடந்துகொள்வார். இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதைத் தமிழக அரசு
உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
