விஜய் அலுவலக ஊழல் சர்ச்சை- தமிழ்நாடு அரசு விரிவான விளக்கம்

Published On:

| By Mathi

TN Govt. Clarifies Reports on Secretariat Building Works

தமிழக முதல்வர் விஜய் அலுவலகத்தை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றி அமைக்கும் பணிகளுக்கான டெண்டரில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 19) விரிவான விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் விளக்கம்: சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் மேற்கொள்ளப்படும் கட்டட பணிகள் தொடர்பாக ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உண்மை நிலவரம் பின்வருமாறு:

ADVERTISEMENT

10-வது தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கை கலைவாணர் அரங்கம் வளாகத்தில் மாற்றும் பொருட்டு அரங்கில் உள்ள மேஜை, நாற்காலிகள் ஒலிவாங்கி, ஆகிய தளவாடங்களை அகற்றும் பணிகள் மட்டுமே அரசாணை (நிலை) எண்.42, பொதுப்பணித் (ஜி2) துறை, நாள் 23.02.2007 மற்றும் அலுவல் சாரா குறிப்பு, பொதுத்துறை, efile No.5027/கட்டடங்கள்/2026-1, நாள் 23.07.2026-ன் படி மேற்கொள்ளப்பட்டது.

ஒப்பந்தப் புள்ளியில் கோரப்பட்ட நிர்வாக அலுவலகம் அமைக்கும் பணிகளுக்கும், இப்பணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

நிர்வாக அலுவலக வசதிகள் செய்யும் பணிகளானது, ஒப்பந்தப் புள்ளி பெறப்படவுள்ள கடைசி நாளான 01.09.2026 அன்று கூர்ந்தாய்வு செய்து, குறைந்த தொகையினை கோரிய ஒப்பந்ததாரருக்கு (L1-Tenderer), பணிகள் மேற்கொள்ள பணி ஆணை வழங்கிய பின்னரே பணிகள் தொடங்கப்படும்.

ஒப்பந்தப் புள்ளிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து, தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி விதிகள் 2000-இன்படி மற்றும் அரசாணை (நிலை) எண்.19, நிதித் துறை, நாள் 20.01.2023-படி ரூ.10 கோடிக்கு குறைவாக மதிப்புள்ள பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்ட நாளிலிருந்து, ஒப்பந்தப் புள்ளி பெறுவதற்கான கடைசி நாள் வரை குறைந்தபட்சம் 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

மேற்கண்ட அட்டவணையின்படி ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கை செய்தித் தாள் மற்றும் மாநில ஒப்பந்தப் புள்ளி செய்தி மலரில் வெளியான நாளிலிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதற்கான கடைசி நாள் வரை உள்ள கால அவகாசம் – 18 நாட்கள்.

மேற்கண்ட அட்டவணையின்படி ஒப்பந்தப் புள்ளி, படிவங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதற்கான கடைசி நாள் வரை உள்ள கால அவகாசம் – 15 நாட்கள்.

ஒப்பந்தப் புள்ளி கோரும் அலுவலர், மாநில ஒப்பந்தப்புள்ளி மலரில் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கையில், 15.8.2026 மற்றும் 16.8.2026 ஆகிய இரண்டு நாட்களும் அரசு விடுமுறை என்பதால் ஒப்பந்தப்புள்ளி சம்பந்தமான விவரம் 17.8.2026 முதல் tntenders.gov.in இணையதளம் வாயிலாக கிடைக்கப்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

பணிகளின் உத்தேச மதிப்பீடு இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் பிளாக்-1, பிளாக்-2 மற்றும் பிளாக்-3 என நிர்வாக அலுவலக வசதிகள் செய்யும் பணிகளில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி நாளான 01.09.2026 அன்று 3.00 மணி வரை பெறப்பட்டு L1 Tenderer இறுதி செய்யப்பட்டு, அதன் பின்னர் பணிகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, மேற்காண் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதில் எவ்வித விதி மீறலும் இல்லாமல் முறையாக கோரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share