தமிழக சட்டமன்றத்தில் இன்று நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து அத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது.
திமுக எம்.எல்.ஏ ஐ. பெரியசாமி பேசுகையில், “திமுக ஆட்சியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. என்றர். தவெக ஆட்சியில் நிதியை உயர்த்தி, வீடுகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டனர்” என்று குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆனந்த், “திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. மேலும், வீடு கட்ட திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட ரூ. 3.5 லட்சம் போதுமானதாக இல்லை. வீடுகள் தரமாகக் கட்டப்பட வேண்டும் என்ற நோக்கில், தவெக அரசு தற்போது ரூ. 5 லட்சம் வழங்குகிறது” என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக எம்.எல்.ஏ ஐ. பெரியசாமி, “எம்-சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர்; ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், அரசு ரூ. 5 லட்சம் நிதி தந்தாலும் நிதிப் பற்றாக்குறைதான் ஏற்படும். வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மட்டும் மாற்றிவிட்டு, வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டது” என தெரிவித்தார்.
மேலும், “ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கும் இத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் ஆனந்த் கூறியதற்கு, அலுவலர்கள்தான் பயனாளிகளைத் தேர்வு செய்தனர் என்றும், தவறு நடந்திருக்கிறது என்பதற்காக திட்டத்தையே நிறுத்தக் கூடாது. ஜாதி, மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள் வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனவே, பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழுதான்” என்றும் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆனந்த், “திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாகக் கட்டப்படவில்லை, மக்கள் இன்னமும் குடிசைகளில்தான் வசிக்கின்றனர்” என்று கூறியதால் அவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆனந்த், “நான் தான் உங்களுக்குச் சொல்லிவிட்டேனே, நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல; மக்களுக்குச் சேவை செய்ய வந்துள்ளோம், நீங்கள் அதைப் புரிந்துகொள்ளுங்கள். அவையில் எப்படிப் பேச வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது உறுப்பினர் தவறாகச் சொன்னார் என்பதற்காகவே நாங்கள் இதைச் சொல்கிறோம்,” என்றார்.
மேலும், “நீங்கள் மக்களிடம் சென்று பாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. நாங்கள் போகும் இடமெல்லாம் ‘என் அண்ணனைப் பார்த்துக்கோ’, ‘என் பிள்ளையைப் பார்த்துக்கோ’, ‘என் தம்பியைப் பார்த்துக்கோ’ என்கிறார்கள். நாங்கள் உண்மையாகச் செயல்படுகிறோம், தவறு செய்ய மாட்டோம் என்பதைத் தெளிவுபடுத்தவே இதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறோம். அதனால் உங்கள் இஷ்டத்திற்கு ஏதேனும் பேச வேண்டும் என்பதற்காகப் பேசாதீர்கள்” என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ கோவி. செழியன், “நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பேசுகையில் ‘நாங்கள் அரசியல்வாதி அல்ல, அரசியல்வாதி அல்ல’ என்ற கருத்தை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறார். அது நேரலை ஒளிபரப்பிலும் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற இயக்கம் ஓர் அரசியல் கட்சியாகத்தான் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, தேர்தல் களத்தில் நின்று வெற்றி பெற்று நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள். மேலும், எந்த மக்களை நம்பி ‘எங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறீர்களோ, அதே மக்கள் உங்கள் பேச்சைக் கேட்டு ‘இப்படிச் சொல்கிறார்களே’ என்ற புரிதலை அடைவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
அப்போது முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குலுங்கி சிரித்தார்.
