“லீமா ரோஸ் மார்ட்டின், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா, எ.வ.வேலு, செங்கோட்டையன், வன்னியரசு, ரேவந்த் சரண் போன்ற மிகவும் ஏழை உறுப்பினர்களுக்கு ஆடம்பர வசதிகளைச் செய்து தர நம் பொது மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட உள்ளதா என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதிஎண் 110 கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதல்வர் விஜய் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும் வாகன ஓட்டுனர் எரிபொருள் வாகன பராமரிப்புகளுக்கு மாதம் தோறும் 75 ஆயிரம் வாகன படியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ள ரூபாய் 25,000 உதவியாளர் படியாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்
இந்த அறிவிப்புக்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ், “முதல்வர் விஜய் ஓட்டுநருடன் கூடிய கார், ரூ.75000 ஓட்டுநர் படி, ரூ.25000 உதவியாளர் படி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
லீமா ரோஸ் மார்ட்டின், உதயநிதி, ஆதவ் அர்ஜுனா, எ.வ.வேலு, செங்கோட்டையன், வன்னியரசு, ரேவந்த் சரண் போன்ற மிகவும் ஏழை உறுப்பினர்களுக்கு ஆடம்பர வசதிகளைச் செய்து தர நம் பொது மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட உள்ளதா?
ஏற்கனவே எம்.எல்.ஏ-க்களுக்கு மாதம் ரூ.1,05,000 சம்பளமும், சட்டமன்றக் கூட்டத்தொடர் நாட்களில் நாளொன்றுக்கு ரூ.500 படியும் வழங்கப்படுகிறது. இதுதவிர சுங்கக் கட்டண விலக்கு, இலவசத் தங்கும் விடுதி, இலவச ரயில் பயணச் சலுகைகள் எனப் பல்வேறு வசதிகள் அளிக்கப்படுகின்றன.
என்ன அபத்தம் இது? பெரும்பான்மை மக்களைப் போல சட்டமன்ற உறுப்பினர்களும் பேருந்து, மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லது நடந்து செல்ல வேண்டும். இந்த ‘ஃபைவ் ஸ்டார்’ கலாச்சார நிர்வாகத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மேயர்களுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் ஏற்கனவே கார்கள் வழங்கப்படுகின்றன; அவர்களுடன் போட்டியிடாமல் தேவையற்ற ‘தண்டச் செலவுகளை’ வெட்டிச் சுருக்க வேண்டும்.
தற்போது ஒவ்வொரு தமிழகக் குடிமகனின் தலையிலும் சுமார் ரூ.2 லட்சம் கடன் சுமை உள்ளது.
பலர் என்னிடம் கேட்கலாம். ஆனால் இதை தெரிந்து கொள்ளுங்கள். என்னிடம் கார் இல்லை; என்னிடம் உள்ளவற்றில் ஒரு பைசாகூட பொது மக்களின் பணம் கிடையாது.
உண்மையான சமூக சேவகர்களும் நேர்மையான பத்திரிகையாளர்களும் எந்த சலுகையுமின்றிச் சுயநலமன்றி உழைக்கிறார்கள். ஆனால் எம்எல்ஏக்களுக்கு மட்டும் ஆடம்பரம் வேண்டுமா?
தொழிலதிபர்கள் அம்பானி அல்லது அதானியின் ஓட்டுநருக்குக் கூட அதிகபட்சமாக ரூ.30,000 தான் சம்பளம் இருக்கும். அப்படி இருக்கையில், எம்.எல்.ஏ-க்களுக்கு ஒரு லட்சம் சம்பளம் , காருடன் கூடிய ஒரு லட்சம் படி கூடுதல் ஊக்கத்தொகை போன்றவை பெறுவது ஏன்?’
எனவே, முதல்வர் விஜய் இந்த அதிர்ச்சியளிக்கும் செலவுத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
