சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் கலை பண்பாட்டு துறை, தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியகங்கள் துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை இன்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டார்.
அதன் விவரம்,
கலை பண்பாட்டுத் துறை
மண்ணின் கலைகளை மரபு மாறாமல் மேம்படுத்திட கலை ஆராய்ச்சி மையங்கள் இரண்டு இடங்களில் ரூ.2 கோடி ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்படும். இதன் மூலமாக கோயம்புத்தூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு இடங்களில் இந்த கலை ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்.
நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிதி உதவி மாதம் தோறும் போய்க்கொண்டிருக்கிறது. அதில் புதிய கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு மேலும் 1,500 கலைஞர்களுக்கு நம்முடைய அரசில் விரிவுபடுத்தப்படும்.
கலை பண்பாட்டு துறையின் பல்வேறு கல்வியகங்களின் கட்டட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் துறையினுடைய கட்டட பராமரிப்பிற்காக வழங்கப்பட்டு வரும் நிதி உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலமாக திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, தஞ்சாவூர், கடலூர், தூத்துக்குடி, சீர்காழி, புதுக்கோட்டை,மயிலாப்பூரில் இருக்கக்கூடிய ஜவகர் சிறுவர் மன்றம் இப்படி பல்வேறு இடங்கள் இதன் மூலமாக பயன்பெறும்.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் வாங்குவதற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூ.10,000 நிதி உதவி, அது அதிகபட்சமாக இனி ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும் புதிதாக இந்த திட்டத்தில் 500 இளம் கலைஞர்களுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும்.
கலை பண்பாட்டு துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவன வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் இத்துறையினுடைய இணையதளம் மேம்படுத்தப்படும்; ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு இதற்காக செய்யப்படுகிறது.
கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நம்முடைய ஆசிரியர், அதாவது ரூ.20,000 ஊதியத்தில் பணிபுரியக்கூடிய தொகுப்பூதிய ஆசிரியர்களினுடைய ஊதியம் இனி ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 50 கலை ஆசிரியர்கள் மூலமாக கலை பயிற்சிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையோடு இணைந்து வழங்கப்படும். அவர்கள் இருக்கக்கூடிய காப்பகங்கள், விடுதிகள், பள்ளிக்கூடங்கள் அங்கேயே சென்று இதன் மூலமாக 50 கலை ஆசிரியர்கள் மூலமாக கலைப்பயிற்சி வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் மாணக்கர்கள் பயன்பாட்டில் உள்ள இசைக்கருவிகள் பழுது நீக்கம் செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தொல்லியல் துறை
தமிழர்களினுடைய பண்பாட்டு தளங்களை பாதுகாத்திடும் நோக்கில் முதற்கட்டமாக 5 ஆண்டுகளில் 76 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் ‘தமிழ் பாரம்பரிய பாதுகாப்பு பணிகள்’ (Tamil Heritage Conservation Mission) கீழ் புனரமைக்கப்படும். இதற்கு இவ்வாண்டு முதற்கட்டமாக 76 இடங்களுக்கு ரூ.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பண்டைய தமிழர் கல்வெட்டுகளை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவினை (Artificial Intelligence – AI) பயன்படுத்தி ஒரு தரவுத்தளத்தினை உருவாக்கும் பணி ரூ.1.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்
பட்டறைப்பெரும்புதூர் தொல்பழங்கால அகழ்வைப்பகம், குற்றாலம் நாட்டுப்புற அகழ்வைப்பகம் மற்றும் தர்மபுரி நடுகல் அகழ்வைப்பகங்களில் விளக்கவுரை மற்றும் காட்சிப்படுத்தும் பணிகள் ரூ.12 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்பதை அறிவிக்கிறேன்.
தொல்லியல் அகழாய்வுகளில் வெளிக்கொணரப்படும் தொல்பொருட்கள் மற்றும் மாதிரிகளை அறிவியல் பகுப்பாய்வுகள் மேற்கொள்ள நவீன தொல்லியல் ஆய்வகம் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இது மாதிரி பொருட்கள் கிடைக்கும்போது வெறும் இலக்கிய சான்று சொல்வது நமக்கு பெருமையை சேர்க்கும், ஆனால் அது அறிவியல் சான்று மூலமாக, ஆய்வக சான்று மூலமாக நிரூபித்தால்தான் அது பெருமை, அது உண்மை என்பது உலகத்திலிருந்து நமக்கு பதிலாக கிடைக்கும். அதற்காக இந்த அறிவிப்பு.
தமிழரின் கடல்வழி வணிகம், துறைமுகம் மற்றும் ஆற்றங்கரை பண்பாட்டினை வெளிக்கொணர ரூ.3 கோடி மதிப்பில் கள ஆய்வு பணிகள் மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும்.
தொல்லியல் கள ஆய்வு, அகழாய்வு மற்றும் ஆழ்கடல் அகழாய்வுகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தொடரும் நிதியான ரூ.7 கோடி, இனி ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தொடர் நிதியான ரூ.3 கோடி இனி ரூ.4 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் உள்கட்டமைப்பு மற்றும் நவீன மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நிதி ஆதாரமான ரூ.30 லட்சம் இனி ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயன்படும் வகையில் கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த துறை வெளியீடுகளை ஆண்டுதோறும் வெளிக்கொண்டு வர ஏதுவாக தொடரும் நிதி ஆதாரம் ரூ.30 லட்சம் இனி ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
உலகத்தரம் வாய்ந்த தொல்லியல் கண்காட்சிகள், உலக மரபு நாள், உலக மரபு வாரம் சிறப்பாக கொண்டாடுவதற்கு தொல்லியல் சார்பான சொற்பொழிவுகள், பயிற்சி பட்டறைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் தொடரும் நிதி ரூ.15 லட்சம் இனி ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
தொல்லியல் சார்ந்த பன்னாட்டு கருத்தரங்கு உலகத்தரம் வாய்ந்த அளவில் நடத்திட வழங்கப்பட்டு வரும் தொடரும் நிதி ரூ.30 லட்சம் இனி ரூ.80 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சின்னங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக புதிதாக 26 நினைவுச் சின்ன பாதுகாவலர் பணியிடங்கள் வெளிமுகமை மூலமாக நிரப்பிடும் வகையில் தோற்றுவிக்கப்படும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும். இதில் பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில் உள்ள தீர்த்தங்கர சிற்பம், பெண்ணாகரத்தில் இருக்கக்கூடிய தீர்த்தங்கர சிற்பம், மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடியது, சைதாப்பேட்டையில் தொடங்கி நம்முடைய தென்மதுரை வரைக்கும் பல்வேறு இடங்கள் இதன் மூலமாக பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்.
அருங்காட்சியக துறை
சென்னை அரசு அருங்காட்சியக காட்சி கூடங்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இணையதள அருங்காட்சியகம் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயார் செய்யப்படும். மேலும் அருங்காட்சியக நுழைவுச் சீட்டுகள் அனைத்துமே இனி முழுமையாக கணினி மயமாக்கப்படும்.
சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தை மேம்படுத்தவும், பார்வையாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் ஒருங்கிணைந்த திட்டம் (Comprehensive Plan) செயல்படுத்தப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மொத்தம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
மதுரையில் ‘தமிழர் நாகரிக அருங்காட்சியகம்’ அமைப்பதற்கு தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு, இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) ரூ.2 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும். இந்த தமிழர் நாகரிக அருங்காட்சியகம் ஒரு பொக்கிஷமான இடமாக உருமாறும்.
சென்னை உமாயுன் மகால் கட்டடத்தில் அமைக்கப்பட்டு வரும் சுதந்திர தின அருங்காட்சியகத்தில் குளிர்சாதன வசதி, மின்விளக்குகள், மின்தூக்கி, தீத்தடுப்பு உபகரணங்கள், கழிப்பிடம் மற்றும் இதர வசதிகள் ரூ.15 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
நம்முடைய சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படும்; இதற்கென ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அருங்காட்சியகங்களுக்கு வருகை தருவதை ஊக்கும் வகையில் ‘Visit Museum Year 2026–27’ என அறிவிக்கப்படும்; இதற்கென ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். எனவே சட்டமன்ற உறுப்பினர்களே, நீங்களும் Please visit our museum. உங்களுடைய தொகுதியில் இருக்கக்கூடிய மக்களோடு வந்து எங்களுடைய அருங்காட்சியகத்தைப் பார்க்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
23 மாவட்டங்களில் தற்போது செயல்பட்டு வரக்கூடிய அருங்காட்சியகங்கள் மேலும் 15 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதன் முதற்கட்டமாக 4 மாவட்டங்களுக்கு (நாமக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி, அரியலூர்) விரிவுபடுத்த ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை (DPR) ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
