காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக ஒரு கல்லை கூட கர்நாடகா அரசு வைக்க விடமாட்டோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் (Anand) திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 19-ந் தேதி) திமுக எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் பேசுகையில், “கத்தி படத்துல நம்முடைய முதலமைச்சர் ஒரு வசனம் சொன்னார். எந்த சூழ்நிலை வந்தாலும் விவசாயத்தைக் கைவிட்டுறாதீங்க, அப்படின்னு சொல்லி இருக்கிறார். ஆனா, இப்ப டெல்டா பகுதியில் குறுவை விவசாயத்தை விட்டு இருக்கோம். இதற்கு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன?
மேகதாது அணையை கட்டுவோம்னு கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார் வெளிப்படையாக தொடர்ந்து சொல்லிட்டு வருகிறார். காவிரியில் நமக்கு மாதாந்திரமாக தரக் கூடிய நீரை திறந்துவிட முடியாது என பிடிவாதம் பிடிக்கிறார். இதுக்கு நாம் எடுத்த நடவடிக்கை என்ன?
நாம் மென்மையாக போகிறோம்.. முதல்வர், துறை அமைச்சர் எல்லாம் ரொம்ப சாஃப்டா இருக்கிறோம் என்பது என் கருத்து.
நம்முடைய முதலமைச்சருடைய பயணத்தை யார் முடிவு பண்ணனும்? முதலமைச்சர் அலுவலகம் முடிவு பண்ணனும்..
அங்க இருக்கிற கர்நாடக சீப் மினிஸ்டர் சொல்றாரு, மூன்றாம் தேதி தமிழ்நாட்டு சீப் மினிஸ்டர் வராருன்னு சொல்றாரு. அது எந்த அளவுக்கு நியாயம்? எப்படி நீங்க விட்டுக்கொடுக்கிறீங்க? நமக்குன்னு பிரஸ்டீஜ் இருக்கு… காங்கிரஸையும் பகைக்கக் கூடாது; பாஜகவையும் பகைக்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்க.. முதல்வருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது.. எதற்காக பயப்பட வேண்டும்? என்றார்.

இதற்கு பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், “நாங்கள் பயப்படவில்லை. பயம் என்பது எல்லாம் எங்களுக்கு இல்லை. பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். யாரை பார்த்தும் முதல்வர் எந்த காரணத்தை முன்னிட்டும் பயப்படமாட்டார்.
(மேகதாது அணை கட்டுவதற்கு) அங்கே ஒரே ஒரு கல் கூட கர்நாடகா அரசால் வைக்க முடியாது. அதற்கு நாங்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் விட்டுவிடமாட்டோம்” என்றார்.
