தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 19) பேசிய அமைச்சர் ஆனந்த், ”சர்க்கார்” படத்தின் பேனர்களை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சிக்கு மீண்டும் வந்திருக்கும் என கூறியிருந்தார்.
2018-ல் என்ன நடந்தது?
விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும்; ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட மிக்சி போன்றவற்றை தூக்கி எறிந்து எரிப்பது போல இடம் பெற்றிருந்ததைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘சர்க்கார்’ திரைப்பட பேனர்களை அதிமுகவினர் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘சர்க்கார்’ திரைப்படம் வெளியிட்ட திரையரங்குகளுக்குள் நுழைந்தும் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

”சர்க்கார்” படத்தை தடை செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனால் சர்க்கார் திரைப்படம் பல திரையரங்குகளில் நிறுத்தப்பட்டது.
சர்க்கார் பட பேனர் கிழிப்பு விவகாரத்தின் போது வேலூரில் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து படத்தை விநியோகம் செய்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் திரையரங்கு உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ‘சர்க்கார்’ படத்தில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த ’காட்சிகள்’ நீக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இந்த காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில் ‘சர்க்கார்’ படம் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டும் வகையில்தான் அமைச்சர் ஆனந்த் இன்று சட்டசபையில், “சர்க்கார் பேனரை மட்டும் நீங்கள் கிழிக்காமல் இருந்திருந்தால் (2021) ஆட்சியில் நீங்கள் அமர்ந்திருந்திருப்பீர்கள்” என அதிமுகவினரை குறிப்பிட்டு பேசினார்.
அதாவது சர்க்கார் படத்துக்கான அன்றைய பிரச்சனைதான் விஜய்யை தீவிர அரசியலுக்குள் இழுத்துவிட்டது; அதனால் அதிமுக இன்று ஆட்சியில் அமர முடியாமல் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி பேசினார் அமைச்சர் ஆனந்த்.
