தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) உட்கட்டமைப்பு, தவெகவில் ஒவ்வொருவருக்கும் எப்படி எல்லாம் சீட் கொடுக்கப்பட்டது என தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 19) அமைச்சர் ஆனந்த் (Anand) விரிவாக பேசினார்.
தமிழக சட்டசபையில் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது: உங்களில் பலரும் மாண்புமிகு முதலமைச்சரைத் திரையில்தான் பார்த்திருப்பீர்கள்; கடந்த மூன்று மாதங்களாக அவரை நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் கடந்த 28, 29 ஆண்டுகளாக அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவன். சினிமாவில் மட்டும்தான் அவர் நடிப்பார்; அதைத் தாண்டி வெளியில் வந்து நடி என்று சொன்னால் அவருக்கு நடிக்கத் தெரியாது. அதற்கு அப்பாற்பட்டு அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதை இந்த நேரத்திலே உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கல்ட்’ ‘பெரிய ஸ்டார்’
அவர் ஒரு பெரிய ஸ்டார், ஒரு ‘கல்ட்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறவர். அந்த மாதிரியான எந்தவிதமான பெருமித எண்ணங்களும் ஒரு முதலமைச்சர் ஆன பிறகும் கூட அவருக்குள் எப்போதுமே இருந்ததில்லை. அர்ஜுன் சார் சொன்னது போல, புகழ்ச்சி என்பது அவருக்கு உண்மையில் சுத்தமாகப் பிடிக்காது. நான் அவரிடம் தினமும் பேசும்போது அவரைப் பற்றி ஒரு இரண்டு வார்த்தை பேசினாலே போதும், அப்படியே டக்குனு நாற்காலியைத் திருப்புவார்; அதாவது அது அவருக்குப் பிடிக்கவில்லை என்று அர்த்தம்.
நான் ஒரு சாதாரண ஆள்தான். பாண்டிச்சேரியில் ஒரு சிறிய ஊரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அங்கெல்லாம் ஒரு கவுன்சிலர் அளவுக்குத்தான் வாக்கு வங்கி இருக்கும். அங்கிருந்து வந்து எனக்கு இங்கே ஒரு வாய்ப்புக் கொடுத்து, இன்று நான் ஒரு அமைச்சராக இருக்கிறேன் என்றால், அதை அவரைத் தவிர வேறு யாராலேயும் செய்ய முடியாது.

தேர்தல் சீட் கொடுக்கப்பட்டது எப்படி?
இங்கே நீங்கள் பார்த்தீர்கள் என்றால், எனக்குப் பின்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் இருக்கிறார்கள். துணை சபாநாயகரை தேர்தலின்போது, “நில்லுங்கள்” என்று அவரிடம் சொன்னபோது, “அண்ணா, என்னிடம் வெறும் 75,000 ரூபாய்தானே இருக்கிறது” என்றார். “அது போதும், நீ நில்லு, மத்ததை நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போய் நில்லு” என்று தலைவர் சொன்னார்; அவர் அப்படியே நின்று, இன்றைக்குத் துணை சபாநாயகராக வந்திருக்கிறார்.
இரவு 1:30 மணிக்கு முசிறி தொகுதியில் விக்னேஷுக்கு போன் அடித்தேன்; காலையில் வருமாறு சொன்னேன். தலைவர் அவரை வேட்பாளராக அறிவித்தார்; அவரும் இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் யாரோ யாரோ சீட்டு கேட்டார்கள்; ஒன்றிய நகரத்தில் ரொம்ப நாளாக இருக்கிறவர்களுக்குக் சீட்டு கொடுக்காமல் ஏன் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தலைவர் நினைத்தார். யாருமே பணவசதி இல்லை என்றார்கள்; டெபாசிட்டுக்கு மட்டும் பணம் இருந்தால் போதும், அங்கிருக்கிற ஆளுக்கு ஒன்றியத்துக்கே கொடுங்கள் என்றார். அவர் சென்ட்ரிங் வேலை பார்ப்பவர்; ஒரு நாளைக்கு கூலியே 1,000 ரூபாய், 1,500 ரூபாய்தான் கிடைக்கும். அவர், “அண்ணே, எனக்கு என்னண்ணே, எனக்கு வேணானே” என்றார். இல்லை, தலைவர் உனக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டார் என்று சொன்னோம்; அவரும் இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினராக வந்துவிட்டார்.
சாதி, மதம், பணம் எதுவுமே இந்தத் தேர்தலில் எடுபடவில்லை; அவருடைய முகத்துக்காகத்தான் நாங்கள் எல்லாரும் இன்று வெற்றி பெற்று, ஒரு அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறோம். இந்த இடத்தில் நான் இதைக் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் சொல்கிறேன்.

என் பெயரை சொல்லி…
அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியவை இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இருந்தாலும், நீங்கள் நேரம் குறித்துவிட்டீர்கள்; சுருக்கமாகப் பேச வேண்டும் என்று சொன்னீர்கள். மேலும், மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பேசும்போது, தலைவர் பெயரைச் சொல்லிவிட்டு பொதுச் செயலாளருக்கும் நன்றி என்றார்கள். இதே வேறொரு தலைவரிடம் இருக்கும்போது என் பெயர் எல்லாம் அது மாதிரி சொன்னால், அடுத்த நாளே அந்தப் பதவி இருக்காது.
ஆனால், அப்படி சொல்லும்போதுகூட அந்தப் பெயரைச் சொல்லும்போது என் பெயரைச் சொல்லும்போதெல்லாம் நான் அப்படி ஒரு பயம் பயப்படுவேன். நான் என்னைக்கு 28, 29 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தலைவரைப் பார்த்தேனோ, அந்தப் பதட்டம் இன்னைக்கும் எப்பொழுதும் எனக்கு இருந்துகிட்டே இருக்கும். ஒரு உண்மையான தலைவர் என்றால் எங்கள் தலைவரைத்தான் சொல்ல வேண்டும். நீங்ககூட நாளைக்கு வந்து உங்கள் தொகுதிக்கோ அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகளையோ சொன்னீர்கள் என்றால், நீங்கள் அவரை எப்படி வேண்டுமானாலும் திட்டியிருக்கலாம்; எப்படிப் போனாலும், “வாங்க, உங்களுக்கு என்ன வேணும், என்ன செய்யணும்” என்று செய்யக்கூடியவர்தான் எங்கள் தலைவர்.
யூடியூப் வாடகை வாய்கள்
ஒரு காலத்தில், “ஏன்டா இவர் அரசியலுக்கு வந்தார்?” என்று நான் நினைப்பேன். ஏன்னா, இந்த யூடியூபில் கடந்த இரண்டு, இரண்டரை ஆண்டுகளாக அவரைத் திட்டாத திட்டு இல்லை. ஒரு சீட்டு வாங்குவாரா, இரண்டு சீட்டு வாங்குவாரா, 5%, 3%, 7% என்றெல்லாம் எல்லாரும் இளக்காரமாகப் பேசினார்கள். அதுவும் இந்த யூடியூபிலும் டிவியிலும் வாடகை வாய்கள் எல்லாம் இருக்கின்றன; அந்த வாய் என்னென்ன பேசணுமோ அவ்வளவும் பேசியது.

முதல்வர் சொல்வது என்ன?
நானும் கடந்த 28, 29 ஆண்டுகளாக யாராவது ஏதாவது சொன்னால், படத்தைப் பற்றிச் சொன்னால்கூட, “அதெல்லாம் விட்டுட்டுப் போங்க, 10 பேர் சொல்கிறார்கள் என்றால் அதில் 11-வதாக நினைத்துக் கொள்ளுங்கள், அதை ஏன் கண்டுக்கிறீர்கள்?” என்பார். எங்களோடு புதுசாக அரசியலுக்கு வந்தவர்கள், “விடக்கூடாது, அப்படி இப்படின்னுவாங்க.” அதெல்லாம் விடுங்க, அவர்கள் பாட்டுக்கு எதையாவது பேசட்டும்; நமக்கு எதுக்கு இப்போது? அவர்களை விட்டுவிட்டு நமது வேலையைப் பார்ப்போம் என்று சொல்லக்கூடியவர்தான் எங்கள் தலைவர், தளபதி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்போது நான் நினைப்பேன்; இப்படி எல்லாம் அவரைச் சொல்கிறார்களே, மக்களுக்காகவும் எங்களுக்காகவும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு, பரவாயில்லை யார் எப்படிப் பேசினாலும் பேசட்டும் என்று இருக்கிறார். நானும், “சார், இது மாதிரி பெரிய பெரிய கட்சிகளெல்லாம் கூட்டணி வைத்து இருக்கிறார்கள்; நாமும் கூட்டணியில் தனியாக நிற்கிறோம்” என்று சொன்னேன். தைரியமாக தனியாக, சிங்கிளாக நிற்போம், கண்டிப்பாக நாம்தான் ஜெயிப்போம், அதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை.
“நீ என்ன, உனக்கே பயமாக இருக்கிறதா?” என்று இன்று கேட்டார்; பயப்படல சார், நான் பயப்படல. இருந்தாலும் ஒரு பயம் எனக்குள்ள ஒன்று இருக்கிறது. நீங்கள் எப்படியாவது இந்த முதலமைச்சராக ஆக வேண்டும்; உச்சத்தில் இருக்கும்போதே என்னுடைய மக்கள், தமிழ்நாட்டு மக்கள் என்னை உச்சத்தில் வச்சாங்க. அப்படி வச்சிருக்கும்போது, அந்த உச்சத்தில் இருக்கும்போதே நான் அரசியலைவிட்டு விலக வேண்டும் அல்லது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு இருக்கிறதே ஒழிய, நான் ரிட்டயர்ட் ஆன பிறகு அரசியலுக்கு வருவதற்கு எனக்கு விருப்பமில்லை என்று சொன்னார்.

அதைச் சொல்லும்போது எல்லாம் நான், “சரி சார்” என்று சொன்னேன். எங்கள் ஆட்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு எல்லாம் சீட்டு கொடுக்கும்போது, ” வா, இந்தச் சீட்டுக்கு நீ நில்லு” என்று சொன்னால், “இல்லை இல்லை, எனக்கு வேண்டாம் அண்ணே. நான் அழைத்து வரும் ஒரு நபருக்குச் சீட்டைக் கொடுத்துவிடுங்கள், எங்களுக்கு வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்; டெபாசிட்டுக்கு மட்டும் பணத்தைக் கட்டிவிட்டால் போதும், நீங்கள் விசில் சின்னத்திற்குப் போய் வெறும் ஓட்டை மட்டும் கேளுங்கள், அது ஆட்டோமேட்டிக்காக…” என்று தியாகம் செய்தார்கள். இல்லையென்றால் தலைவருக்கு அது தப்பாகிவிடும் என்று சொல்லி, பலரை அழைத்து வந்து, இன்று 75 முதல் 80% ரசிகர் மன்றமாக, மக்கள் இயக்கமாக, நற்பணி இயக்கத்திலிருந்து வந்தவர்கள்தான் இருக்கிறார்கள்.
அந்த மீதி 20% பேர் எங்களுடைய மாவட்டச் செயலாளர்கள் வந்து இவர்களுக்குச் சீட் கொடுங்கள் என்று சொன்னதால் கொடுத்தோம். அதே மாதிரி மாற்றுக்கட்சிகளில் இருந்தும் சில பேர் வந்தார்கள். யார் தலைவர் தளபதியை நம்பி வருகிறார்களோ, அவர்களை ஒருக்காலும் கைவிடாமல், அவர்களுக்கு உடனடியாக அந்த எம்.எல்.ஏ சீட்டு கொடுக்கப்பட்டது.
சர்க்கார் படத்தில் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால்
ஏன் இதெல்லாம் சொல்கிறோம் என்று பார்த்தால், உண்மையாகவே ஒரு மனிதனை எப்படியெல்லாம் புண்படுத்தணுமோ, எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தணுமோ அப்படியெல்லாம் நிறைய பேர் அதைச் செய்துவிட்டார்கள். சர்க்கார் என்ற ஒரு படத்தில் அந்தப் பேனரை மட்டும் (2018) கிழிக்காமல் இருந்திருந்தால், இவர்கள்தான் ( 2021-ல் அதிமுக) திருப்பி வந்திருப்பார்கள். அந்த ஒரே ஒரு தலைவர் சர்க்கார் பேனரை கிழித்ததால்தான் நீங்கள் (அதிமுக) விட்டுவிட்டு உட்கார்ந்துவிட்டீர்கள். அது நீங்கள் கிழிக்காமல் இருந்திருந்தால் நீங்கள்தானே அடுத்தாப்புல (2021) ஆட்சியில (அதிமுக) இருந்திருப்பீர்கள்? நீங்கள் அந்த ஒரு பேனரை கிழித்ததால்தான் இப்போது இல்லை. எங்கள் அண்ணன் சிரிக்கிறார் பாருங்கள்; “கரெக்ட்தாண்டா” என்று நினைக்கிற மாதிரி சிரிக்கிறார்.

ஏன் இப்படி எல்லாம் சொல்கிறோம் என்றால், எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் எங்கள் தலைவர், தளபதி; எங்கள் உயிர், மூச்சு, நாடி, அனைத்தும் தலைவர் மட்டும்தான். எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. நானும் சட்டமன்ற உறுப்பினராகப் பாண்டிச்சேரியில் இருந்தேன் என்றால், நலத்திட்ட உதவிகள், சுவிச்பாரத் திட்டம், என எல்லாமே நானே தனியாக வண்டிகளைவிட்டுத் தலைவர் பெயரில்தான் அவருடைய போட்டோவைக் காண்பித்து ஜெயித்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன்.
அண்ணன் காலையில் சொன்னார்; “நான் அரசியல்வாதி இல்லை, ஆனால் நீங்கள் ரெஜிஸ்ட்ரேஷன் செய்தது அரசியல்” என்று சொன்னார். அரசியலில் இரண்டு விதங்கள் இருக்கின்றன; ஒன்று தூய்மையான அரசியல், இன்னொன்று இப்படித்தான் இருக்கிறது இந்த அரசியல் என்பது. அந்த மாதிரியான ஒரு தூய்மையான அரசியலை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்; இன்று ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து, இன்று ஒரு அமைச்சராக நான் இருக்கிறேன்.

தி.நகர் தொகுதி
தி.நகர் தொகுதியில் உண்மையைச் சொல்கிறேன்; நானே நாலு நாள்தான் போய் ஓட்டு கேட்டேன். அதுக்கப்புறம் மீதி நாள்கள் எல்லாம் தலைவருடன் பிரச்சாரத்திற்குப் போய்விடுவேன். சாயங்காலம் 7 மணிக்கு விமானத்தில் இறங்குவேன்; 8, 8:15 மணிக்குச் சென்று ஒரு மணி நேரம் பிரச்சாரம் செய்துவிட்டு வந்துவிடுவேன். அப்போ ஜீப்பில் ஏறிப் போகும்போது பார்த்தீர்கள் என்றால் 10 மாடி, 12 மாடி கட்டடங்கள் இருக்கும். அப்படியே செல்போனை எடுத்து, பேரனோ பையனோ யாரோ தெரியாது, காட்டுவாங்க. வயசான பாட்டி ஒரு 70, 75 வயது இருக்கும்; அவர்கள் வாயில் விசிலடித்து, “கண்டிப்பாக உனக்குத்தான் ஓட்டு” என்றார்கள்.
அதனால்தான், இந்த தி.நகர் தொகுதி மக்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் பொறுத்தவரைக்கும் நாங்கள் 107 பேர் இங்கே இருக்கிறோம் என்றால், எங்களுக்காக யாரும் ஓட்டுப் போடவில்லை; எங்கள் தலைவர் தளபதிக்காக மட்டும்தான் ஓட்டு போட்டார்கள்.
அப்படி இருக்கும்போது, இந்த மூன்று மாதத்திலேயே பார்த்தீர்கள் என்றால், இந்த புக், டிவியையெல்லாம் வைத்திருக்கிறார்கள். அங்கே யாரோ ஆன்லைனில் ஒரு உறுப்பினர் கார்டு எடுத்திருந்தால், அதை வைத்துக்கொண்டு, “இதோ பார் ஆன்லைன் கார்டு, தவெக நிர்வாகி” என்று சொல்லி, எல்லாவற்றிலும் தினந்தோறும் ஏதாவது ஒன்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது சிலரின் குறியாக இருக்கிறது. சரி, ஏதாவது ஒன்று செய்யட்டும், எதை வேண்டுமானாலும் போடட்டும்; நாங்கள் மக்களுக்குச் சேவை செய்ய வந்திருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரைக்கும் தலைவருக்கும் மக்களுக்கும் எந்த ஒரு கெட்ட பெயரும் வராத அளவுக்கு அமைச்சர் பெருமக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் நாங்கள் நடந்து கொள்வோம் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே மாதிரி எங்கள் மாவட்டச் செயலாளர் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், ஒன்றியம், நகரம், அணித் தலைவர்கள் எல்லாம், “நாளைக்கு பட்டினி தினம், உலக பட்டினி தினம், சாப்பாடு போடுங்கள்” என்றால், இருக்கோ இல்லையோ, தலைவர் தளபதி அறிவுறுத்தலின்படி என்றுதான் நான் ஒரு மெசேஜ் போடுவேன். அதுக்கப்புறம் பார்த்தீர்கள் என்றால், அடுத்த நாளே 1000 பேர், 750 பேருக்கு சாப்பாடு போடுவர்.
எங்க தலைவர் இங்கே பக்கத்தில் இருந்திருந்தால் நான் பேசவே மாட்டேன்; ஒரே ஒரு வார்த்தையைப் பேசிவிட்டு அடுத்த உரைக்குப் போய்விடுவேன். உண்மையாத்தான் சொல்கிறேன்.

முதல்வர் விஜய்யின் அறிவுரை
முதல்வர் ஒரு நல்ல மனிதர்; பழகுவதற்கு ரொம்ப எளிமையானவர். ஒரு பெரிய தயாரிப்பாளர் வந்தால்கூட ஐந்து நிமிடங்கள்தான் பேசுவார். ஆனால் ஒரு சாதாரண கொத்தனார், சித்தாள் இவர்களிடம் எல்லாம் இரண்டு மணி நேரம் பேசுவார். நான் எப்பவுமே 20 நாள், அதாவது ஒரு மாதத்தில் 20 நாள் ஷூட்டிங் நடக்கும்; 10 நாள் அவருக்குப் பிரேக் இருக்கும். அந்த 10 நாள்ல பார்த்தீர்கள் என்றால், யார் யாரைப் பார்க்க வேண்டும், நிர்வாகிகளைப் பார்க்க வேண்டும் என்று சொல்லுவார். நான் இவர்களை எல்லாம் அடுத்தடுத்த நாளே ஒரு 15 பேர், 20 பேரை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வேன். அவர்கள் 15, 20 பேர் உட்கார்ந்து பேசுவார்கள்; அவர்களிடம் இரண்டு மணி நேரம், இரண்டரை மணி நேரம் பேசி, “வீட்டில் எப்படி இருக்கிறீர்கள்? தொகுதியில் எப்படி இருக்கிறது? மக்கள் எப்படி இருக்கிறார்கள்?” என்று எல்லாவற்றையும் கேட்பார். “எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்கிச் செலவு செய்யாதே; முதல்ல குடும்பத்தைப் பார், அதுக்கு அடுத்து தொழிலை பார். அதுக்குக் கிடைக்கிற வருமானத்தில் ஏதோ ஒரு சதவீதமோ, ரெண்டு சதவீதமோ இருந்தால் முடிஞ்சா நீ செலவு பண்ணு, இல்லைன்னா செய்யாத” என்று சொல்லுவார்.
எங்க ஆளுங்க கடந்த 28, 29 வருஷமா, 30 வருஷமா எல்லாமே அன்னையிலிருந்து இன்று வரைக்கும் பல்வேறு திட்டங்களை எல்லாமே தலைவர் பெயரில்தான் செய்திருக்கிறோம்.
அதுல டக்குனு கூப்பிடுவார்; “அவங்க ரொம்ப செலவு பண்ணியிருக்கிறார்கள், நீ போய் முதல்ல அந்தப் பணம் எவ்வளவு செலவு பண்ணாங்களோ அதைக் கொடு, நான் கொடுக்கிறேன்” என்று சொல்லி அனுப்புவார். எங்கள் ஆட்கள் கிட்ட 1,000 ரூபாய் இருக்காது; “இந்தாடா, நான் 5 லட்சம் கொடுத்தாலும் எனக்கு வேணாவே வேணாம், நான் தலைவர் கிட்ட இருந்து வாங்கவே மாட்டேன், என்னுடைய சொந்தப் பணத்தில்தான் நாங்க எல்லாரும் சேர்ந்து பண்ணுவோம்” என்பார்கள். அப்பேர்ப்பட்டவர்கள்தான் எங்களுடைய மாவட்டச் செயலாளர்கள், அணித் தலைவர்கள், ஒன்றியம், நகரத் தோழர்கள்.
எங்கள் சொத்தே தவெக தோழர்கள்தான்
எங்ககிட்ட எல்லாம் பெரிய சொத்து இல்லை; நான் ஏதோ நடுத்தரமான நிலைமையில் இருக்கிறேன், இங்கே இருக்கிறவர்களிடமும் கொஞ்சம் இருக்கிறது. எங்கள் சொத்தே எங்களுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்கள்தான்.
பல கோடி எங்களுக்குச் சொத்தே அவர்கள்தான். தலைவருக்கு இன்னைக்கும் சொல்வது என்னவென்றால், எக்காரணத்தைக் கொண்டும் யார் வந்தாலும் சரி, எப்பேர்ப்பட்டவர்கள் வந்தாலும் சரி, நம்முடைய ஆளு பழைய ஆட்களை, ஒரு ஆளைக் கூட நீ விட்டுவிடக்கூடாது; அவர்களுக்கு என்ன தேவைகளோ அதை நீ செய்து தர வேண்டும் என்று சொல்லக்கூடிய தலைவர்தான் எங்கள் தளபதி.
இப்படிப்பட்ட ஒரு தலைவர், உண்மையில் நீங்கள் அவரிடம் பழகினீர்கள் என்றால் தெரியும்; ரொம்ப எளிமையானவர். எது ஒரு சின்ன விஷயமாக இருந்தால்கூட உடனுக்குடன் யாராவது ஒன்று சொன்னால் செய்து கொடுப்பவர். இப்போது நீங்கள் கூடப் பார்த்தீர்கள் என்றால், இது அண்ணா திமுக சட்டமன்ற உறுப்பினருடைய தொகுதிதான். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில், அணைக்கட்டு பிளாக், அல்லேரி கிராம மலையில் சுமார் 8 கி.மீ அளவுக்கு 21 கோடி ரூபாய்க்கு இப்போது டெண்டர் விடப் போகிறோம். என்னவென்று பார்த்தீர்கள் என்றால், ஒரு 20, 25 நாட்களுக்கு முன்பு அங்கே ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கட்டிலில் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
அதைப் பார்த்துவிட்டு உடனே, “ஏன் அதை இன்னும் நீ பார்க்கவில்லை?” என்று கேட்டார். “எனக்குத் தெரியாது சார், நீங்கள் அனுப்பி வைத்துதான் இந்த வீடியோவை நான் பார்த்தேன்” என்றார். “நான் கலெக்டரிடம் சொல்லிவிடுகிறேன், உடனடியாக அங்கே சாலை வசதி செய்து தர வேண்டும்” என்று சொன்னார். நேற்றைய நிலவரப்படி அதற்கு 21 கோடி ரூபாய்க்கு எல்லாமே ரெடி பண்ணி இன்னும் ஒரு வாரத்தில் டெண்டர் விடப்பட இருக்கிறது. அந்தத் தொகுதிக்கு 21 கோடி ரூபாய் கொடுத்து, அங்கே இருப்பது 320 பேர்தான். ஆனால், 21 கோடி ரூபாய் கொடுத்து அங்கே போய்ப் ரோடு போட்டால் அந்த 320 ஓட்டும் அந்த கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்குதான் போகிறது என்பது எல்லாருக்குமே தெரியும். ஆனால், கட்சி வேறுபாடு இன்றி அது எந்தத் தொகுதியாக இருந்தாலும் சரி, மக்களுக்கு ஒன்று தேவை என்று சொன்னால், அதை உடனடியாக அமைச்சர் பெருமக்கள் செய்து தர வேண்டும்; அங்கே இந்த கட்சி, அந்த கட்சி என்ற வேலையெல்லாம் இருக்கக்கூடாது, அதை நீங்கள் உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு அற்புதமான மனிதர்தான் எங்கள் தலைவர் தளபதி என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பாண்டிச்சேரியில் மூன்று, நான்கு தடவை பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்தினேன். அப்போ நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன்; மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் எல்லாம் கலந்துகொண்டனர். அப்போது சொன்னேன், 15, 16 ஆண்டுகளுக்கு முன்பு, “ஐந்து வருடத்திற்கு ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி வந்துபோகும், ஆனால் தளபதி ரசிகர் என்ற பதவிதான் எனக்குக் கடைசி காலம் வரைக்கும் இருக்கும்” என்று சொன்னேன். அந்தப் பதவிதான் இன்று என்னை இங்கே அமைச்சராக ஆக்கியிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நான் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்..
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நாங்கள் அவருடன் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய எல்லோருடைய மனதிலும் இருக்கிறது. ஒரு 9 லட்சம் பேருக்குக் கட்சி ரசிகர் மன்றமாக இருக்கும்போது பதவி போட்டோம். கட்சி ஆரம்பித்த உடனே எல்லாரும் கேட்டது, இன்னும் ஆள் போட முடியவில்லை, மாவட்டச் செயலாளர் போட முடியவில்லை, கட்டமைப்பு இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். அந்த 9 லட்சத்து 12,320 பேருக்கு மக்கள் இயக்கத்தில் இருந்தார்கள்; அவர்களுக்கு 3 லட்சத்து 16,217 பேருக்குப் பதவி போட வேண்டும். அப்போ குறைஞ்சது ஒரு 6 லட்சம் பேருக்குப் பதவி எங்களால் கொடுக்க முடியாது. அதையெல்லாம் சரிபண்ணி, அந்தக் கட்டமைப்பை உருவாக்கி, இன்று தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவெகவை உடைக்கவே முடியாது
அதில் எப்படியாவது சில பேர் குளிர் காயலாம், அதாவது கட்சியை இரண்டாகவும் மூன்றாகவும் நான்காகவும் உடைக்கலாம் என்று நினைத்தார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை! இப்போதுகூட எங்க ஆளுங்க கிட்ட இருந்து ஒரே ஒரு ஆளைக் கூட “இந்த பக்கம் இப்படி வா” என்று சொன்னால் வரவே மாட்டார்கள். எங்கள் நிர்வாகியும் சரி, தோழர்களும் சரி, சட்டமன்ற உறுப்பினர்களும் சரி, அமைச்சர்களும் சரி, இங்கே ஒரு இரண்டு கோடியை வைத்துவிட்டு இங்கே தலைவர் படத்தை வச்சீங்கன்னா, தலைவருடைய போட்டோவைத்தான் எடுத்துப்பாங்களே ஒழிய அந்த இரண்டு கோடியைத் தொட மாட்டார்கள். ஏன்னா, அவ்வளவு மரியாதை கொடுப்பார்; ஒரு தொண்டனை எப்படி மதிக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதுமே பின்வாங்க மாட்டார்.

சீட் கேட்ட விஜய் படத்தை இயக்கிய பிரபல இயக்குநர்
ஒரு பிரபல இயக்குநர், இப்போதும் அவர் ஒரு பிரபல இயக்குநர் தான்; தலைவர் படத்தை இயக்கியிருக்கிறார். அவர் ஒரு தொகுதியைக் கேட்கும்போது கேட்டுக்கினார். அதுக்கு அடுத்த நாள் திருப்பி வந்து, “எனக்கு அந்தத் தொகுதி வேண்டும்” என்று ஒன்றரை வருடத்திற்கு முன்பு கேட்டார். “கோபித்துக் கொள்ளாத நண்பா, அந்தத் தொகுதி என்னுடைய மாவட்டச் செயலாளர் பல ஆண்டுகளாக அங்கு உழைத்துக் கொண்டிருக்கிறார், அவரைவிட்டுவிட்டு உனக்கு நான் நிச்சயமாகத் தரமாட்டேன், கோபித்துக் கொள்ளாதே” என்றார்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு சீட் கிடைத்தது எப்படி?
ஏன், சபாநாயகர் அண்ணன் இங்கே இருக்கிறார்! உண்மையாகவே ஒரு சபாநாயகர், எங்கள் கட்சிக்குக் கிடைத்த வரம் என்று கூட சொல்லலாம். அவர் வந்து ஒரு தொகுதியைக் கேட்டார்; “அண்ணே முடியாதுண்ணே” என்றார். “இல்லைண்ணே, எனக்கு அதுதானே வேணும்” என்றார். “இல்லைண்ணே கோபிச்சுக்காதீங்க, மாவட்டச் செயலாளர் அங்கே 30 வருஷமா இருக்கிறார், தயவுசெய்து அந்தத் தொகுதியை விட்டுடுங்கண்ணே” என்றார்.
நேரா தலைவர் கிட்ட போய், “இல்லை, நான் தேர்தலில் நிற்கவில்லை, எனக்கு அந்தத் தொகுதி இல்லை என்று கேள்விப்பட்டேன்” என்றார். அப்போ தலைவர் சொன்னார், “இல்லை, நீங்கள் இருக்க வேண்டும்; நீங்கள் வேறு எந்தத் தொகுதியைக் கேட்கிறீர்களோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். “இல்லை இல்லை, என் மகனுக்குக் கொடுத்துவிடுங்கள், நான் நிற்கவில்லை” என்றார்.
தலைவர், “அப்படி இல்லை; 30 வருஷமா என்னை நம்பி சைக்கிளில் போய் போஸ்டர் ஒட்டி, கொடிகட்டி இன்னைக்கு வரைக்கும் எனக்காக அவன் இத்தனை வருடமாக இருக்கிறான், அவனை எக்காரணத்தைக் கொண்டும் ஒரு சாதாரண தொண்டனை நான் விடமாட்டேன். அதேபோல நீங்களும் எனக்கு வேண்டும், அதற்காக நீங்கள் நின்னே ஆகவேண்டும்” என்று சொன்னார். அவர் வேறு ஒரு தொகுதியில் நின்றார், அண்ணன் ஜெயித்திருக்கிறார். இன்றைக்கு ஒரு சபாநாயகராகப் பார்ப்பதற்கே ஒரு அம்சமாக, அழகாக, அவருடைய பேச்சு… நான் எல்லாம் பேசும்போது பேப்பரைக் கொடுத்துப் படிக்கச் சொன்னால் ரெண்டு மூன்று வார்த்தை ஸ்லிப் ஆகும். ஆனால் நான் அவர் வாயைத்தான், எங்கள் அண்ணன் வாயைத்தான் பார்த்துக் கொண்டிருப்பேன். அவ்வளவு அழகாக, தீர்க்கமாக ஒவ்வொரு வார்த்தையையும் பேசக்கூடிய ஒரு சபாநாயகர் எங்களுக்குக் கிடைத்திருக்கிறார். இந்த நேரத்திலே எங்கள் தலைவர் தளபதி அவர்களுக்கு, சபாநாயகராக அவரை ஆக்கியதற்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மரிய வில்சனின் ஹேர் கட்டிங்
அதுக்கு அடுத்தபடியாக பைனன்ஸ் மினிஸ்டர்; அவர் பார்த்தீர்கள் என்றால் வரும்போது முடி எல்லாம் இப்படி வச்சுட்டு வந்தார். வந்த உடனே ஆபீஸ்க்கு வந்ததும், “அண்ணே, இப்படி எல்லாம் வச்சுக்கக் கூடாதுண்ணே; நீ தேர்தலில் நிற்கணும்னா இந்த முடியெல்லாம் கட் பண்ணிடணும்” என்றார். அப்படியே மேலிருந்து கீழாகப் பார்த்தார்; சரி, முதல் அனுபவம் என்று சரி என்று சொல்லிவிட்டுப் போனார். அடுத்த ஒரு வாரம் கழித்துப் பார்க்கும்போது பார்த்தீர்கள் என்றால், முடி எல்லாம் கட் பண்ணிட்டு கரெக்டாக வந்தார். “கண்டிப்பா நீ எம்.எல்.ஏ ஆயிடுவண்ணே” என்றார். ஏன் இதெல்லாம் சொல்கிறோம் என்றால், இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் போக வேண்டும் என்று எங்கள் கட்சியில் நாங்கள் இருந்தோம்; எங்கள் தலைவர் அப்படித்தான் எங்களை வழிநடத்தினார்.
அப்போது அவர் பைனான்ஸ் மினிஸ்டராக இருக்கும்போது, அவர் எப்படி பட்ஜெட் உரையைத் தாக்கல் செய்வார் என்ற பயமும் பதட்டமும் இருந்தது. ஆனால், உண்மையாகவே மிகச் சிறப்பாக, தெள்ளத் தெளிவாக அந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அவருக்கும் எங்கள் தலைவர் சார்பாகவும், தளபதி சார்பாகவும் இந்த நேரத்திலே நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேளாண் அமைச்சர்
அதற்கு அடுத்தபடியாக விவசாயத்துறை அமைச்சர்; அவர் பார்த்தீர்கள் என்றால் இளைஞர். பட்ஜெட் எப்படி இருக்குமோ என்ற பயம், பதட்டம் இருந்தது; அவரும் மிகச் சிறப்பாக அந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். ஏன்னா, நீங்கள் எல்லாரும் சொல்லலாம்; இங்கே சிலர்தான் பழைய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். உங்களுக்கு எல்லாம் என்னடா இது, இவர்களெல்லாம் சின்னப் பசங்கள், எப்படி இருப்பார்களோ என்று தோன்றும். ஆனால், இப்போது மக்கள் பேசுகிற ஒரு விஷயம், உண்மையாகவே அமைச்சர்களும் சரி, சட்டமன்ற உறுப்பினர்களும் சரி, தமிழக வெற்றிக் கழகத்தவர்கள் ரொம்ப சூப்பராகப் பேசுகிறார்கள், நன்றாகப் செய்கிறார்கள் என்பதுதான் எல்லோருடைய கருத்தும்.

செங்கோட்டையன் சொன்னது என்ன?
எங்கள் செங்கோட்டையன் அண்ணன் வந்தார்; போய் முதலில் பார்த்தேன். பார்க்கும்போது அப்படியே, சரி என்னடா இது, ஏதோ ஒரு சீனியர் மோஸ்ட் வருகிறார் என்று நினைத்தேன். வந்தார்; தலைவருக்கு ரொம்பப் பிடிக்கும். “நல்லா இந்த மாதிரி…” என்றவுடன், சரி, அவருடைய தொகுதி கடந்த 10 தடவை, 9 தடவை ஜெயித்துவிட்டார், அதனால அவருக்கு கண்டிப்பா அந்த இடத்தில் நின்னு ஜெயிக்க போறாரு. ஆனா அவர் கேட்ட ஒரே ஒரு விஷயம் தலைவர் கிட்ட, “எனக்கு நீங்கள் எந்தத் தொகுதியைக் கொடுக்கிறீர்கள்? நான் நின்ற தொகுதியைக் கொடுப்பீர்களா?” என்றார்.
“என்ன நீங்கள் இது மாதிரி கொடுக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள், அது உங்கள் தொகுதிதான்.” “இல்லை இல்லை, நீங்கள் ஒரு தலைவர், நீங்கள் எந்தத் தொகுதியைக் கொடுக்கிறீர்களோ அந்தத் தொகுதியில்தான் நான் நிற்பேன்; அது கோபிச்செட்டிபாளையமாக இருந்தாலும் சரி, வேறு எந்தத் தொகுதியாக இருந்தாலும் சரி” என்றார்.
ஏன்னா, 10 தடவை, 9 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்தவர், அமைச்சராகவும் இருந்தவர்; அந்தப் பணிவு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அந்த மாதிரி செங்கோட்டையன் அண்ணன் கிடைத்தது எனக்கு மிக மிக சந்தோஷம்; எங்கள் தலைவருக்கு இந்த நேரத்திலே அதற்கும் நான் நன்றி சொல்கிறேன்.
எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டும் எங்கள் வரலாறு
இந்த சபையில் எல்லாமே தெரிய வேண்டும்; உங்களுக்கும் நாங்கள் யார் என்பது தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் மீட்டிங்கில் பேசியிருப்பீர்கள், அதைக் கேட்டிருப்பீர்கள். அதெல்லாம் சரிதான், இருந்தாலும் இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் தலைவரைப் பற்றிச் சொல்லும்போது, உங்கள் வரலாற்றைப் பற்றிச் சொல்லும்போது, எங்களுடைய வரலாறு இரண்டு வருடம்தான், இரண்டரை வருடம்தான். அந்த இரண்டரை வருட வரலாற்றை நானும் கொஞ்சம் சொல்லிக் கொள்ளலாம் என்பதற்காகத்தான் சொல்கிறேன்.

ஒரு புத்தகம் வெளியிட்டதால் கிடைத்த ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜுனா சகோதரர்; எனக்கு கண்டிப்பாக வேண்டும் என்று சொல்லி, தலைவர் தளபதிடம் கேட்டு, அவர் எனக்கு கண்டிப்பாகக் கட்சிக்குத் தேவை என்று கேட்டு வாங்கினேன். ஏன்னா, உங்க கூட (திமுக, விசிக) நிறைய நாள், நிறைய வருஷம் கூட இருந்தார். அவர் ஒரு புத்தகம் வெளியிட்டதுனால… அவரை விட்டார்கள், நாங்கள் அழைத்துக்கொண்டோம்.
அமைச்சர் அருண்ராஜ் குடும்பத்தில் சிக்கல்
எங்கள் ஐ.ஆர்.எஸ் அருண்ராஜ் சார்; ஏன் சார், எதுக்கு சார் அரசியல்? ஐ.ஆர்.எஸ் பதவியிலேயே இருந்தேன், அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஃப் இன்கம் டாக்ஸ். அப்படி இருக்கும்போது, “இல்லை இல்லைங்க, நான் அரசியலுக்கு வந்தே ஆகணும்” என்றார். சரிங்க என்று சொல்லிவிட்டு, தலைவர் கிட்ட அடிக்கடி வந்து பார்ப்பார். “நான் யாருக்கும் தெரியாமல் வந்து பார்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன்; நான் ராஜினாமா செய்துவிட்டு நேரடியாக வந்து பார்க்க வேண்டும், கட்சியில் பணியாற்ற வேண்டும், தேர்தலில் நிற்க வேண்டும்” என்றார்.
அவங்க மாமனார், மாமியார் எல்லாரும், “உன்னை ஐ.ஆர்.எஸ்-க்குத்தானே பொண்ணு கொடுத்தேன்? நீ அரசியலுக்குப் போவாய் என்று தெரிந்திருந்தால் பொண்ணே கொடுத்திருக்க மாட்டேன்” என்ற நிலைமை அவருக்கு வந்தது.
ஆனால், தலைவர் ஒரே ஒரு விஷயம் சொன்னார்; “அந்த ஐ.ஆர்.எஸ் பதவியைவிட நம்முடைய கட்சியில் ஒரு நல்ல இடத்திற்கு, நல்ல பதவிக்கு வருவீர்கள்; பயப்படாமல் தேர்தலில் நில்லுங்கள், ரிசைன் பண்ணிட்டு வாருங்கள்” என்று சொல்லக்கூடிய ஒரு தலைவர்தான் எங்கள் தலைவர் தளபதி. அந்த நம்பிக்கை, எனக்கும் அந்த நம்பிக்கை இருந்தாலும், அவருடைய வில் பவர் எதையும் சாதிக்க முடியும். எதையாவது ஒன்று சொன்னார் என்றால் அது செய்வதற்காக மட்டும்தான் சொல்லுவார்; இல்லை என்றால் நீங்கள் எப்படிச் சொன்னாலும் அது செய்ய முடியாது என்றால் கண்டிப்பாக அதைச் சொல்லவே மாட்டார்.
இப்போகூட அவருடைய சிந்தனை, எதெல்லாம் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தோமோ அதைப் படிப்படியாக அனைத்தும் செய்து தர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் எங்கள் தலைவர் இருக்கிறார்.
பேசி பேசியே அமைச்சரான ராஜ்மோகன்
அதே மாதிரி எங்கள் ராஜ்மோகன் அண்ணன்; பேசிப் பேசியே எங்கள் அண்ணன் இன்று அமைச்சராகிவிட்டார். எல்லாரும் பார்க்கிறார்கள், கூட்டணி கட்சியில் இருக்கிறவர், என்னடா இது என்னைப்பற்றி எதுவுமே சொல்லவில்லையா என்று. அதெல்லாம் விஸ்வநாதன் அண்ணனும் சரி, நானாக இருந்தாலும் சரி, டூரிசம் மினிஸ்டராக இருந்தாலும் சரி, விசிகவிலிருந்து வந்த அண்ணனாக இருந்தாலும் சரி, எல்லாமே எங்களுக்கு உண்மையாகவே, எங்கள் தலைவருக்கு உண்மையானவர்கள் எல்லோரும் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களை யாருமே இழுக்க முடியாது..
வெங்கட் சார் ரொம்ப காலமாக ட்ரெஷரராக நம்முடைய தலைவரோடு இருந்தார்; இன்னைக்கு அவருக்கும் சீட் கொடுத்து ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இங்கே இருக்கிற பின்னாடி அமைச்சர்கள் எல்லாருமே பார்த்தீர்கள் என்றால், ரசிகர் மன்றத்திலிருந்துதான் நாங்கள் எல்லாரும் வந்தோம்; ரசிகர் மன்றம், நற்பணி மன்றம் என 28, 29 வருஷமாக இருந்தோம். அதனால்தான் நான் சொன்னேன், ஒருவர்களைக் கூட யாருமே இப்படியும் இழுக்க முடியாது, அப்படியும் இழுக்க முடியாது. எந்த இடம் என்று பார்த்தால் தலைவர் தளபதி என்பதுதான்; அவர் கூடவேதான் வாழ்நாள் முழுவதும் சாகும் வரை நாங்கள் எல்லோரும் இருப்போம்.
அதை யாரையும் நாங்கள் குற்றமாகச் சொல்லவில்லை. அதையெல்லாம் விட்டுவிட்டு, மக்களுக்கு என்ன தேவை, மக்கள் பிரச்சினை என்ன என்பதையெல்லாம் நீங்கள் ஆக்கப்பூர்வமாக எங்களிடம் சொல்லுங்கள்; நாங்கள் எல்லாமே உங்களுக்குச் செய்து தருவோம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். ஏன் அப்படின்னு பார்த்தீங்கன்னா, திடீரென்று ஒரு நாள் இவர்களிடம் பேசினார்கள், அவர்களிடம் பேசினார்கள் என்று யார் என்ன பேசினாலும் சரிதான், ஒருத்தர்கூட இந்த பக்கமும் அந்த பக்கமும் வரவே மாட்டார்கள்; அதைத் திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறேன்.

தங்கத் தட்டில் வளர்க்கப்பட்ட விஜய்
மேலும், தலைவருடைய உழைப்பில்தான் நாங்கள் எல்லாமே இருக்கிறோம். அவர் 30, 32 ஆண்டுகளுக்கு முன்பு கஷ்டப்பட்டார்; அவங்க அப்பா கஷ்டப்பட்டார். ஆனால், இவரைத் தங்கத்தட்டில் வச்சுதான் அப்பாவும் அம்மாவும் பார்த்துக் கொண்டனர். ஆனாலும், இன்று காலையிலிருந்து இரவு வரை சிந்தனை, இங்கு ஓடுவது, அங்கு ஓடுவது என்று ஓடிக்கிட்டே இருக்கக்கூடிய ஒரு தலைவராக எங்கள் தலைவர் தளபதி மக்களுக்காக இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய உழைப்பில்தான் நாங்கள் இன்று எல்லாரும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருந்து கொண்டிருக்கிறோம்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்..
அதனால, இந்த மாதிரியான ஒரு வாய்ப்பைச் சபாநாயகர் எனக்குக் கொடுத்தார்; சரி, ஏதாவது சொல்லி பெல் அடிப்பாரா என்று பார்த்தேன். சரி, சுவாரசியமாக இருக்கிறது, உண்மை கதையைத்தான் சொல்கிறேன், “சொல்லுடா” என்பது போலச் சொல்லியிருக்கிறார். மீண்டும் மீண்டும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தலைவருடன் எப்படியாவது இருப்பதற்கு என்ன வழியோ, அதுதான் கடவுளிடம் கேட்டுக்கொள்வது; அவர் எங்களுக்குக் கடவுள் கொடுத்த வரம், எங்கள் தலைவர் முதலமைச்சர். வாழ்க்கையில் மறக்கவே கூடாது. இந்த மாதிரியான ஒரு நல்ல மனிதர், அமைதியானவர், எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும் ரொம்ப அழகாகக் கேட்டுக்கொண்டு அதைச் செய்யக்கூடிய நல்ல மனிதர் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.
நாங்கள் தவறு செய்யவே மாட்டோம்
அதனால, நாங்கள் யாரும் மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறோம்; நான் யாரையும் குற்றச்சாட்டாகவும் யாருடைய மனதைப் புண்படுத்தும் வகையிலும் சொல்லவில்லை. நாங்கள் யாரும் தவறு செய்ய மாட்டோம் என்பதை மீண்டும் மீண்டும் இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் முதலமைச்சர் எங்களை அப்படித்தான் வழிநடத்தியிருக்கிறார்.
காணாமல் போகும் பீஸ் கேரியர்கள்
சரி, நீங்கதான் இப்ப சபையில… இல்ல இல்லை, மின்சாரத்துறை அமைச்சர் நல்ல அமைச்சர்தாங்க, இளைஞர்; அவரும் நல்லாதாங்கப்பா. நீங்கதான் பீஸ் கேரியரை எடுத்துட்டு போயிடுறாங்களே உங்க ஆளுங்க, நாங்க என்ன பண்றது? நாங்க என்ன பண்றது? நைட்ல அவரு ஒரு வண்டி வச்சுக்கிட்டு, ஒரு வேனை வச்சுக்கிட்டு, ஜீப்பை வச்சுக்கிட்டு அவரு ஜீப்லயே போறாரு; போனா நைட் ஏன் கரண்ட் இல்லைன்னு… உட்காருங்க சார், நீங்கள் உட்காருங்கள்! இல்லை இல்லை, உட்காருங்கள் உட்காருங்கள். நீங்கள் உங்களுடைய அண்ணன் சொன்னேன், நான் அவ்வளவு சுவாரசியமான ஒரு நிகழ்வுக்கு வராம அமைதியா இருங்க; உங்களைச் சொல்லல அண்ணே, சட்டமன்ற உறுப்பினரைச் சொல்லல அண்ணே, நீங்கள் பேசுங்கள். ஒரு பீஸ் கேரியரை டக்குனு எடுத்துர்றாங்க, அங்கே போனால் பார்த்தால் பீஸ் கேரியரைக் காணும்ண்ணே. அதனாலதான் நான் அப்படிச் சொன்னேன், நீங்கள் அதைத் தவறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அமைச்சர் ஆனந்த் பேசினார்.
