மாணவர்களுக்கு எதிரான விஜய் அரசு சுற்றறிக்கை: அமைச்சர் விளக்கம்-சிபிஐ, சிபிஎம் ’மகிழ்ச்சி’!

Published On:

| By Mathi

Vijay Govt's Circular against Student Protest: CPI, CPM Happy Over Minister Explanation

சிபிஎம், சிபிஐ, காக்ரோச் ஜனதா கட்சி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடை செய்யும் சுற்றறிக்கை தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அளித்த விளக்கத்தை சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஏற்றுக் கொண்டன.

தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 20) சிபிஎம் மாரிமுத்து பேசியதாவது: சுதந்திர நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் அடிப்படையான உரிமைகள் இருக்கின்றன. உயர் கல்வித் துறை இயக்குநர் அவர்கள் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கின்றார். அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களில் குறிப்பாக இடதுசாரி மாணவர்களை இனம் கண்டு அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக நடவடிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட வட்டாட்சியரும் இதேபோல இடதுசாரிகள் குறித்த கணக்கெடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். உரிமைக்காக போராடுகிற சுதந்திர நாட்டில் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்றனர்.

ADVERTISEMENT

வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்: குஜிலியம்பாறை வட்டாட்சியர் சென்னையில் இருந்து சர்வே செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர். அவர் இது போல தேவையில்லாத கடிதங்கள் எழுதி அதன் மூலமாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் யார் யார் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் இருக்கிறார்கள் என கேட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு என்னிடம் சொல்லப்பட்டது. அப்பவே அவர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் மீது இப்போது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்: நேற்றைய மாணவர்களின் போராட்டம் சம்பந்தமான நடவடிக்கைகள் குறித்து, மாண்புமிகு மிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்லப்பட்டது. மாநில அளவில் சில நேர்வுகளில் நடைபெறும் போராட்டங்களில் ஒழுங்கு அமைதி பராமரிக்க வேண்டியது குறித்த கடிதம் 17.8.2026 அன்று உயர் கல்வித்துறை மூலம் கல்லூரி இயக்கத்திற்கு அனுப்பப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்கமைதி குறித்து 20.8.2026க்குள் அறிக்கை அனுப்ப வேண்டிய சூழ்நிலை எழுந்தது. அனைத்து அரசு கல்லூரிகளின் கல்விச் சூழல் மற்றும் ஒழுங்கமைதி பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வதை முன்னிட்டு அனைத்து கல்லூரி முதல்வருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இச்சுற்றறிக்கையில் தவறுதலாக சில வாசகங்கள் குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தது. அவ்வாறான வாசகங்கள் இடம்பெற்று இருப்பதை அறிந்த கல்லூரி இயக்குநரகமும் உடனடியாக மேற்கூறிப்பட்ட சுற்றறிக்கையினைத் திரும்பப் பெற்றது.

ADVERTISEMENT

இந்தச் செயல் எவ்வித உள்நோக்கமும் இன்றி, முற்றிலும் கல்வி நிறுவனங்களின் ஒழுங்கமைதியைப் பராமரித்தல் பற்றிய நோக்கத்தின் பாற்பட்டது தவிர, இந்த அரசிற்கு அனைத்து மாணவர்களின் உரிமையையோ, இளைஞர்களின் உரிமையையோ கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நியாயமான உரிமைகளை மதிக்கும் அரசாக இவ்வரசு இருக்கிறது என்பதை இந்த அவையிலே தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சிபிஐ தளி ராமச்சந்திரன்: இடதுசாரி மாணவர் அமைப்புகள், நீட் தேர்வு, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கட்டணக் கொள்ளைகளுக்கு எதிராகத்தான் ஜனநாயக ரீதியாகப் போராடுகின்றன. குறிப்பாக, இடதுசாரி மாணவர் அமைப்புகளை மட்டும் குறிவைத்து அரசு இந்தச் சுற்றுறிக்கையை அனுப்பியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாண்புமிகு அமைச்சர் விளக்கமாகப் பதிலளித்திருக்கிறார், நன்றி.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share