சிவகாசி பட்டாசு ஆலை பிரச்சனைகள் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அளித்த விளக்கத்துக்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபெற்ற விவாதம்:
அமைச்சர் கீர்த்தனா: சிவகாசி தொகுதி குறித்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு, மிகவும் சிரமத்திற்குள்ளாகும் வகையில் எதிர்க்கட்சிகள் சில செயல்களில் ஈடுபட்டன. அதாவது பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. அதற்குப் பிறகும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி, பொதுமக்களிடையே ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர். அதற்காக நான் இதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
அதாவது, நமது அரசு பொறுப்பேற்ற பிறகு நான்கைந்து விபத்து சம்பவங்கள் நடந்தன. இதன் காரணமாக 6 உயிரிழப்புகள் ஏற்பட்டன. அந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை; யாரும் களத்தில் வந்து நிற்கவும் இல்லை. நமது தலைவர்தான் அவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கித் துணையாக நின்றார்.
ஆனால், அதற்குப் பிறகு அதை சரிசெய்வதற்காக விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய 177 இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வு நடத்தி இதனை சரிசெய்து கொள்ளுங்கள் என்று சொன்னவுடன், ஆய்வை நிறுத்திவிட்டனர்.
அதன்பிறகும் கூட அவர்கள் ஆர்ப்பாட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என்று அறிவித்துவிட்டு, மக்கள் அனைவரும் வேலைக்குச் செல்லத் தொடங்கிய பிறகும் மீண்டும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி பொதுமக்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதனால் சிவகாசி மக்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், எல்லாமே நல்லபடியாகத் திறக்கப்பட்டு நீங்களும் அனைவரும் சந்தோஷமாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள். அதை நான் பதிவு செய்வதற்காகவே இதைத் தெரிவிக்கிறேன்.

முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (திமுக): மாண்புமிகு துறை அமைச்சர் அவர்கள் ஏதோ சிவகாசியில் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் சந்தோஷக் கடலில் மிதப்பதைப் போல ஒரு மாய பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள்.
உண்மையில், இங்குள்ள நிலைமை என்னவென்றால், பட்டாசுத் தொழில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை அரசியல் காரணங்களுக்காகக் கூறவில்லை; நாங்களும் போராட்டம் நடத்தினோம். எதிர்க்கட்சிகள் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடுவது ஜனநாயகத்தில் எங்களுக்குரிய உரிமையாகும். நாங்கள் மட்டுமல்ல, எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பொது அமைப்புகளைச் சார்ந்தவர்களும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதில் பொதுவான அமைப்புகள் மற்றும் ஏஐடியூசி அமைப்பினரே அதை ஏற்பாடு செய்திருந்தனர். சர்வ கட்சிகளைச் சார்ந்தவர்களும் அதில் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், முறைப்படி விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் தொழிற்சாலைகளில் ஆய்வு என்ற பெயரில் பல்வேறு இடர்பாடுகள் உருவாக்கப்படுகின்றன.
குறிப்பாக, சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பட்டாசு விற்பனை மையங்களில் ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் சென்று வந்த காரணத்தினால், ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலும் அதன் உற்பத்தியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக மழைக்காலம் வரவுள்ளது; மழைக்காலம் தொடங்கினால் இந்தத் தொழிலை நடத்த இயலாது. மேலும், தீபாவளியும் நெருங்கி வருகிறது. இப்போதைய சூழலில் உற்பத்தியை செய்தால் மட்டுமே தீபாவளிக்குத் தேவையான பட்டாசுகளை வழங்க முடியும்.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அது நடைபெறவில்லை என்பதைத்தான் நாங்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். லட்சக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற காரணத்தினால்தான், எதிர்க்கட்சிகள் ஜனநாயக வழியில் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் இதைப் பதிவு செய்கிறோமே தவிர, இதில் எந்தவொரு அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அமைச்சர் கீர்த்தனா: ஜனநாயகத்தில் அனைவருக்கும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் போராட்டம் மேற்கொள்ளவும் உரிமை உண்டு. ஆனால், அனைத்துச் சிக்கல்களையும் பேசித் தீர்த்த பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதுதான் எனது கேள்வியாக உள்ளது.
நமது தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுடன் பேசி அனைத்துப் பிரச்சனைகளையும் சரிசெய்த பின்னரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது ஏன் என்பதுதான் எனக்குரிய கேள்வியாக இருக்கிறது. அதனால்தான் இங்கு அரசியல் புகுத்தப்படுகிறது என்றும், இதை அரசியலாக்குகிறார்கள் என்ற காரணத்தையும் நான் முன்வைக்கிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
