மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்த பதில் ஏற்புடையது அல்ல; அது தவறான பதில் என அதிமுக எம்எல்ஏ சிவி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், “செஞ்சி வட்டம், ஜம்போதி கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை, நிலப்பிரச்சனை மற்றும் வாடகை பிரச்சனை காரணமாக இடமாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் காரணமாக, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் கிராம எல்லையில் 19.08.2026 அன்று இடமாற்றம் செய்யப்பட்டது. இந்தக் கடையின் அருகே பள்ளிகளோ, கல்லூரிகளோ, வழிபாட்டுத் தலங்களோ ஏதும் இல்லை. இந்தக் கடையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவிற்கு குடியிருப்புகளும் இல்லை என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம், “மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சொல்லியுள்ள அந்தப் பதில் ஏற்புடையது அல்ல; அது தவறான பதில். அது எனது தொகுதி. மயிலம் தொகுதி என்பது முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்த தொகுதி; ஒரு பேரூராட்சி கூட இல்லாத தொகுதி; குக்கிராமங்களும் விவசாயிகளும் நிறைந்த தொகுதி. நீங்கள் சொல்லும் செஞ்சி நகரத்திற்கு அருகில் உள்ள ஜம்போதி கிராமத்தில் மூடப்பட்ட கடையை, 25 கிலோமீட்டர் தாண்டி, திண்டிவனம் நகரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள நடுவனந்தல் எல்லையில் நேற்று திறந்துள்ளனர்.
எந்த முன்னறிவிப்பும் இன்றி யாருக்கும் தெரியாமல், அங்கு கடை எண் கூட இல்லை, பெயர்ப்பலகை கூட இல்லாமல் திடீரென காரில் சரக்குகளை கொண்டு வந்து கடையைத் திறந்து இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க கிராமங்களும் விவசாயிகளும் நிறைந்த பகுதி. சுற்றுவட்டாரத்தில் உள்ள 80 கிராமங்களில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்தக் காலத்திலும் இதுவரை மதுக்கடைகள் இருந்ததில்லை. நகரத்தில் இருந்த கடையைத் தூக்கி வந்து கிராமத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? பக்கத்தில் பள்ளிகள் இல்லை, கோயில்கள் இல்லை என்று சொல்வது தவறு; பக்கத்தில் கோயில்கள் உள்ளன. அந்த நடுவனந்தல் கிராமம் வழியாகத்தான் தீவனூர், காட்டுச்சிவிரி, நடுவனந்தல் புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்கின்றனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் தகவல் முற்றிலும் தவறானது, பொய்யான தகவல். இதை உடனடியாக நீங்கள் ஆய்வு செய்து, அந்த மதுக்கடையை மூட வேண்டும். இந்த மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைக் கைது செய்து, மாலை 8 மணி வரை காவல் நிலையத்தில் வைத்துப் பிறகு விடுதலை செய்திருக்கிறார்கள். இந்தப் பதற்றமான சூழலை ஆய்வு செய்து, கிராமப்புற விவசாய மக்களைப் பாதுகாக்கும் வகையில் மதுக்கடையை மூட வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய பாமக உறுப்பினர் கணேஷ்குமார், “அந்த ஜம்போதி கிராமம் எனது தொகுதிக்கு உட்பட்ட கிராமம்தான். அது ஊராட்சி, நகரம் அல்ல. அந்த மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துதான், அந்த இடத்தில் கடை வேண்டாம் என்கின்றனர். அந்த கடையை மூடிவிடலாம்; நீங்கள் இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மக்கள் பிரச்சனை செய்கிறார்கள், வேறு இடமும் இல்லை என்றால், அந்த கடையை மூடிவிடுங்கள்,” என்றார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர், “சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் பேசிய ‘பொய்’ என்ற வார்த்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டு, ‘உண்மைக்கு மாறானது’ என்று மாற்றப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய மதுவிலக்குத் துறை அமைச்சர், “மாவட்ட ஆட்சியரின் தகவலின் அடிப்படையில் தான் இது குறித்து அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்வது போல் தவறு இருந்தால், இந்த அரசு நிச்சயம் பரிசீலிக்கும். கடைகளை இடமாற்றம் செய்வதில் சிக்கல் உள்ளது. ஏற்கனவே 717 கடைகளை மூடியுள்ளோம்; இது மிகப்பெரிய முடிவு. மூடப்பட்ட 717 கடைகளின் பட்டியலை இன்று மாலை கொடுக்கவும் அரசு தயாராக உள்ளது. கடைகளின் விவரங்கள் நீங்கள் கேட்டுக்கொண்டதால் விலாசத்தோடு கொடுக்கத் தயாராக உள்ளோம்,” என்றார்.
அமைச்சரின் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “அதிகாரிகள் அளிக்கும் தகவலை அப்படியே படிக்காமல் அதனை அமைச்சர்களும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்” உள்ளிட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது.
