ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி குறித்து சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 20) காரசார விவாதம் நடைபெற்றது.
திமுக முன்னாள் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
நாங்கள் பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டு காலத்தில் நெல் மழையில் நனையாமல் பாதுகாத்தோம். ஆனால், நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்களில், தொலைக்காட்சிகளில் பார்த்தால் நெல் மூட்டைகள் நனைந்து கிடக்கின்றன; அதுவும் பாதுகாப்பற்ற திறந்தவெளியில் தான் வைக்கப்பட்டுள்ளன.
நாங்கள் மழை வரும்போதே உடனுக்குடன் அதனைப் பாதுகாப்பான இடங்களிலும் குடோன்களிலும் வைத்தோம். சர்க்கரை ஆலை குடோன்கள், பள்ளிக்கூடங்கள் என எங்கு இடவசதி கிடைத்தாலும் அந்த அளவுக்குப் பாதுகாப்பாக வைத்திருந்தோம்.
அதனால்தான், கருப்பு நிற அரிசி புழக்கத்தில் இருந்த காலம் மாறி, வெள்ளை அரிசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. நெல் மழையில் நனையாமலும் முளைக்க விடாமலும் நாங்கள் தடுத்ததால்தான், இப்போதும் ரேஷன் கடைகளில் வெள்ளை அரிசி கிடைப்பதற்கு முக்கியக் காரணமாகும்.
அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர், முழுமையான பாதுகாப்பு அளித்து வெள்ளை அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவதாகக் குறிப்பிட்டார். ஆனால், ரேஷன் கடைகளில் வாங்கும் அத்தனை பேரும் அதை ஆட்டுக்கும் கோழிக்கும் தீவனமாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் நாடறிந்த உண்மை.
அதனால் சன்னரக நெல்லை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே முதலமைச்சர், தொகையை உயர்த்தி வழங்கினார். எதிர்காலத்தில் இந்த மக்கள் சன்ன ரக அரிசியைத்தான் விரும்புவார்கள்.
அண்டை மாநிலங்களில் இருந்தும் பிற இடங்களிலிருந்தும் அரிசி வாங்கப்படுகிறது. நம் மாநிலத்தில் சன்ன ரக உற்பத்தி குறைவாக இருப்பதுதான் உண்மை. அதை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அரசு இந்த பணிகளை மேற்கொண்டது.
நான் சொல்வதில் உண்மை உள்ளது; அந்த அரிசியைச் சில பேர் பயன்படுத்துவது இல்லை என்பதுதான் நிதர்சனம்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு
அவை முன்னவர் என்ன அர்த்தத்தில் அப்படிச் சொன்னார்? ஆட்டுக்கும் மாட்டுக்கும்தான் ரேசன் அரிசி பயன்படுகிறதா?
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோதும் இத்தகைய சூழ்நிலைகளைக் பார்த்துள்ளேன். அப்போது கருப்பான அரிசியைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. அப்பொழுது அரிசி கிடைப்பது கடினமாக இருந்தது, மத்திய தொகுப்பிலிருந்தும் எளிதில் கிடைக்காது.
ஆனால், உணவுத்துறை அமைச்சராக சக்கரபாணி பொறுப்பேற்ற பிறகுதான் பாதுகாப்பான குடோன்கள் பல கட்டப்பட்டன. எ.வ.வேலுவும் நானும் முன்பு உணவுத்துறை அமைச்சர்களாக இருந்திருக்கிறோம்; ஆனால் சக்கரபாணிதான் அதிகமான குடோன்களைக் கட்டினார்.
அவருடைய காலத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஒதுக்கி, நெல் மழையில் நனையாமல் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கச் செய்தார்.
அவை முன்னவர், ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரேசன் அரிசி கொடுப்பதாக குறிப்பிட்டார். இன்றைக்கு ரேஷன் அரிசியை அனைத்து மக்களும் சாப்பிடுகிறார்கள். ரேஷன் அரிசி சாப்பிடுகிற போது சர்க்கரை அளவு குறைகிற காரணத்தால் எல்லா மக்களும் அதை பயன்படுத்துகின்றனர். நீங்கள் காலையில் எழுந்த உடன் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதாக பேட்டி கொடுப்பது போல, இன்றைய நிலையில் ரேஷன் அரிசியை அனைத்து மக்களும் விரும்பிப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை.
அமைச்சர் செங்கோட்டையன்
சர்க்கரை நோயைத் தடுப்பதற்காக இந்த ரேஷன் அரிசியைப் பயன்படுத்துகிறோம் என்று சொன்னால், நீங்கள் கஞ்சி வைத்து குடிப்பதற்கு நாங்கள் வாழ்த்துகிறோம்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அண்ணன் நேருவிடம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாகவும், அவர் அங்கேயே நெல்லை உற்பத்தி செய்து கொள்வதாகவும் கூறினார். ஆனால், அண்ணன் ஒரு பரம ஏழையைப் போல ரேஷன் அரிசி சாப்பிடுகிறார் என்ற தகவல் இன்றைக்குத்தான் எங்களுக்குத் தெரியவருகிறது.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு
நானும் ஐந்தாண்டு காலம் கூட்டுறவு, உணவுத்துறை அமைச்சராக இருந்து பணியாற்றிய காரணத்தால் ஒரு விளக்கத்தைச் சொல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது.
அவை முன்னவர் எப்பொழுதும் உறுதுணையாக இருந்து அவையை சுமுகமாக நடத்துவதற்குத்தான் அவர் முயற்சி செய்ய வேண்டும். அவரே ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டார் என்று சொன்னால் எப்படி அவையை நடத்த முடியும்.
ஏற்கனவே ஐந்தாண்டு காலம் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இந்த இடத்தில் தான் அவை முன்னவர் அமர்ந்திருந்தார். என்றைக்காவது இந்த பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி சரியில்லை என்று கேட்டிருப்பாரா?
திமுக ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக இருந்தது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து பத்திரிகையும், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையும் எழுதின.
திமுக ஆட்சியிலே பொது விநியோகத் திட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி, தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டினர்.
தமிழ்நாட்டில் நெல்லை பர்சேஸ் பண்றோம். அதை அரிசியாக்கி ஈடு செய்கிறோம். எஞ்சிய அரிசியை மத்திய அரசாங்கத்தோட தொகுப்பிலிருந்து தருகிறார்கள். அது சத்தீஸ்கரில் இருந்து வரும், பஞ்சாபில் இருந்து வரும், ஆந்திராவிலிருந்து வரும்.
அவை முன்னவர் சொன்னதைப் போல அரிசி ஒருமுறை பழுப்பு நிறத்தில் வந்தது. அது சத்தீஸ்கரில் இருந்து வந்தது. ரேஷன் கடையில் இதைப் பற்றி ஒரு செய்தி வந்தவுடனே, எங்கள் முதலமைச்சர் அதை வித்ட்ரா செய்ய சொல்லிவிட்டார். பின்னர் மத்திய அமைச்சரை சந்தித்து எங்களுக்கு சத்தீஸ்கர் அரிசி வேண்டாம். பஞ்சாப், ஆந்திராவில் இருந்து அனுப்புங்கள் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படி ஆணை பெற்று, அதற்குப் பின்னால் தொடர்ந்து அரிசி கொடுக்கப்பட்டது. இதுதான் உண்மையான வரலாறு.
இப்படி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனவே அவை முன்னவர் இப்படி கொச்சைப்படுத்தலாமா? ‘ஏழைகள் வாங்கிச் சாப்பிடுகிற அரிசியை ஆடு மாடுதான் சாப்பிடுகிறது என்று சொன்னால் அதற்கு என்ன பெயர்” என்று கேள்வி எழுப்பினார்.
