தமிழக சட்டசபையில் நீட் தேர்வு, கனிமவள சட்ட திருத்தம் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ், பாஜக கட்சிகளை அதிமுக அதிருப்தி அணியின் எம்.எல்.ஏ. சிவி சண்முகம் கடுமையாக விமர்சித்தார்.
சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 18-ந் தேதி சிவி சண்முகம் பேசியதாவது: இங்கே காங்கிரசும் பாரதிய ஜனதாவும், ”நீட் தேர்வை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் நடத்துகிறோம்” என்று சொல்கிறார்கள். காங்கிரஸும், பாரதிய ஜனதாவும் வேறு வேறு ஆள்தானே தவிர உடம்பில் ஓடுவது ஒரே ஜீன்தான்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலே நாங்கள் நீட்டை நடத்துகிறோம் என்கிறார்கள்.
சரி.. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாடாளுமன்றத்திலே சட்டத் திருத்தம் கொண்டுவந்து நீக்குவதற்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா? இதற்கு முன் உதாரணம் இருக்கிறது.
ஷா பானு வழக்கு
1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, விவகாரத்து பெற்ற முஸ்லிம் பெண் ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்குவதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
ஆனால் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, நாடாளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி, அந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கினார்.
இப்பொழுது நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கனிமவள திருத்த சட்டம் கொண்டுவந்தது பாஜக அரசு.
உச்சநீதிமன்றமானது, மாநிலங்களுக்கு கனிம வளங்கள் மீது ராயல்டி உரிமை இருக்கிறது என தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்போது கனிம வள சட்ட திருத்தம் மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாததாக்கியிருக்கிறது பாஜக
மாணவர்கள் மீது உண்மையில் அக்கறை இருந்தால், நீட் தேர்வை நடத்த சொல்லும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் இப்படி ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது செல்லாததாக்கி இருக்கலாமே? மாணவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கலாமே? பாஜகவும் காங்கிரஸும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அரசியல் செய்யத்தான் நீட் உதவுகிறது. அப்பாவி மாணவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு சிவி சண்முகம் பேசினார்.
