முதலமைச்சர் அறை மாற்றம் ஏன்? பேரவையில் எ.வ.வேலு காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப் பணித் துறை), மனிதவள மேலாண்மைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு பேசுகையில்,” ‘தமிழ் வெல்லும்’ என்ற தாரக மந்திரத்திற்குச் சொந்தக்காரர்; ‘தமிழர்’ என்ற ஒரு சொல்லின் மூலம் அனைத்து ஜாதியினரையும் ஒன்றிணைத்தவர்; ‘தமிழ் ஞானத்தந்தை’ என்று சான்றோர் பெருமக்களும் ஆன்றோர் பெருமக்களும் பாராட்டிய தலைவர்; அவருக்கு நிகர் அவர்தான், அவர்தான் எங்கள் தலைவர். அவருக்கு முதல் வணக்கத்தைச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

ADVERTISEMENT

‘அரசு என்பது மக்களுக்காக மக்களால் ஆளப்படுவது’ என்று சொன்னவர் ஆபிரகாம் லிங்கன்; ‘பிற சமூகக் கொள்கைகளை வெறுக்காமல் மதிக்க வேண்டும்’ என்று சொன்னவர் விவேகானந்தர்; ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள், உலகம் உங்கள் கையில்தான் உள்ளது’ என்றார் காரல் மார்க்ஸ். ‘மக்களின் மகிழ்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும் புரட்சி என்பது அவர்களது உரிமையைப் புனிதமாக்குவது’ என்று சொன்னவர் பிடல் காஸ்ட்ரோ.

அந்த வரிசையில்தான், இந்திய வரலாற்றையே புரட்டிப்போடும் போர்க்குணம் படைத்த தலைவர்; ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று சொன்ன வள்ளலாரின் எண்ணம் கொண்ட தலைவர்; ‘எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்’ என்ற மனித மேம்பாட்டுத் தத்துவத்தை நாட்டுக்குத் தந்த நற்றமிழ் நாயகர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது முதல் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ADVERTISEMENT

இளைஞர்களின் எழுஞாயிறு, நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, என் தலைவர் கலைஞர், இன்றைய தலைவர் மு.க.ஸ்டாலின் எனத் திராவிட இயக்கத்தின் ஐந்தாம் தலைமுறையின் தலைவராக இருக்கிற மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற ‘இந்து தமிழ்’ நாளிதழின் ஆசிரியராக இருந்த சமஸ் என்பவரால் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற புத்தகம் தயாரித்து வெளியிடப்பட்டது. லட்சக்கணக்கான புத்தகங்கள் தமிழகத்தில் விற்பனையாகின. அதற்குக் காரணம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டையும் கலாச்சாரக் கட்டமைப்புகளையும் உருவாக்குவதில் கலைஞர் முன்னணியில் இருந்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தலைவர் கலைஞர். பாரம்பரியத்தைப் போற்றுவதும் பழமையான கட்டிடங்களைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் பொதுப்பணித்துறையின் முக்கியப் பங்கு என்பதைச் செயல் மூலம் விளக்கி, அதைச் சிறப்பாகச் செய்து முடித்தவர் கலைஞர். அதனால்தான் இந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு சான்றோர்கள் இதில் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

ADVERTISEMENT

இன்று தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் முதல் குமரி முனையில் இருக்கும் 133 அடி திருவள்ளுவர் சிலை வரை இடைப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் கலைஞரின் அடையாளம் இல்லாத ஊரே கிடையாது என்ற அடிப்படையில் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் வழியில் வந்த எங்கள் தலைவர், தமிழகத்தில் அற்புதமான ஆட்சி நடத்திய திராவிட மாடல் நாயகர். தமிழ்நாட்டின் கட்டமைப்பு மூலமாக மூலதனச் செலவை உருவாக்க முடியும்; நெடுஞ்சாலைத் துறை என்பது மூலதனச் செலவை உருவாக்கி அரசாங்கத்திற்குச் சொத்து சேர்த்து வைப்பது. முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் மூலதனச் செலவை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல அடையாளங்களைக் கலைஞர் வழியில் இந்தத் தமிழகத்தில் உருவாக்கித் தந்தார். அதில் சிலவற்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்:

  • கீழடியில் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குக் கீழக்கரையில் ‘கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம்’.
  • சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா பெயரில் 10 தளங்கள் கொண்ட மாணவர் விடுதி.
  • கொளத்தூரில் 6 மாடிகள் கொண்ட பெரியார் மருத்துவமனை.
  • மதுரையில் கலைஞர் நூலகம்.
  • தமிழனுக்குப் பெருமை சேர்த்த கலைஞருக்குச் சென்னையில் மெரினா கடற்கரையில் நினைவிடம்.
  • கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள்.
  • தமிழர்களின் வரலாறு என்பது 4,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்த வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் சிவகங்கையில் கீழடியிலும், நெல்லை பொருநையில் காட்சிப்படுத்தப்பட்ட அருங்காட்சியகம்.

நமக்கும் நமது சந்ததிகளுக்கும் உழைத்த உத்தமர்களுக்கு, தியாகப் பெருமக்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பல்வேறு சிலைகள் அமைக்கப்பட்டன.

திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டசிலைகள்

கிண்டியில் அயோத்திதாச பண்டிதருக்குச் சிலையுடன் கூடிய மணிமண்டபம்; பசும்பொன்னில் தேவர் திருமகனின் நினைவிடத்தில் புதிய இரண்டு மண்டபங்கள்; பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனுக்குச் சிலையுடன் கூடிய மண்டபம்; கிண்டியில் வீரமங்கை வேலு நாச்சியாருக்குச் சிலை, மருது பாண்டியர்களுக்குச் சிலை, கட்டபொம்மனுக்குச் சிலை, வ.உ.சி சிலை; ஈரோட்டில் சுதந்திர போராட்ட வீரராக இருந்த பொல்லானுக்கு அரங்கத்துடன் கூடிய சிலை; விழுப்புரத்தில் போராளிகள் என்று சொல்லப்பட்ட 21 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டவர்களுக்கு நினைவு மண்டபத்தோடு சிலை; கோவில்பட்டியில் கி.ராஜநாராயணனுக்குச் சிலை; சமூக நீதிக்காவலர் என்று சொல்லப்படும் வி.பி.சிங் அவர்களுக்குச் சிலை; அப்துல் கலாமுக்குச் சிலை; டாக்டர் சுப்பராயனுக்குச் சிலை; கொடிகாத்த திருப்பூர் குமரனுக்குச் சிலை; ஏ.ஜி. என்று அன்போடு அழைக்கப்பட்டு இதே மாமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றிய தென்னாற்காடு மாவட்டத்தின் திராவிட இயக்கத் தலைவராக இருந்த கோவிந்தசாமிக்குச் சிலை; சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று முதன்முதலாகக் கண்டுபிடித்துக் கூறிய சர் ஜான் மார்ஷல் அவர்களுக்குச் சிலை; எழும்பூரில் மாமேதை காரல் மார்க்ஸுக்குச் சிலை என நமது சமுதாயம் பிற்காலத்தில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பெருமக்களுக்குச் சிலை அமைத்த வரலாறு திராவிட மாடல் ஆட்சியில் உள்ளது.

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இத்துறையில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு தலைமைப் பொறியாளர் மேற்பார்வையில் ஒரு புதிய மண்டலம் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டது. புராதனக் கட்டிடங்களைப் பாதுகாப்பதற்காகப் புதிய அலகு தொடங்கப்பட்டது. மாவட்டத்திற்கு ஒரு செயற்பொறியாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தரக்கட்டுப்பாடு அலகு புதிதாகத் தொடங்கப்பட்டது. உயர்கல்விக்குக் கட்டிடம் கட்டுவதற்காகத் திட்ட அலகு தொடங்கப்பட்டது.

டெல்லியில் நமது சிறப்பு விருந்தினர்கள், அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அரசுப் பணியின் காரணமாக டெல்லிக்குச் செல்லும்போது அங்கு தங்குவதற்காகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவருக்குச் சிலை அமைக்கப்பட்டது. 2021-2026க்கு இடைப்பட்ட காலங்களில் 406 உதவிப் பொறியாளர்கள் (சிவில்), 104 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்), கொதிகலன் இயக்கத்தில் 4 முதுநிலைப் பணியாளர்கள், 6 இளநிலை ஆர்க்கிடெக்ட் ஆகியோர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரிட்டேஜ் கட்டிடங்கள் பராமரிப்பு

பழமையைப் பாதுகாக்கும் வகையில் 100 ஆண்டுகளைத் தாண்டிய ‘ஹெரிட்டேஜ் பில்டிங்’ என்ற அடிப்படையில், வீரமங்கை வேலுநாச்சியாருக்கும், மருதுபாண்டிய சகோதரர்களுக்கும் போர் பயிற்சி அளித்த சங்கரபதி கோட்டை உட்பட 64 கட்டிடங்கள் உள்ளன. 100 ஆண்டுகளைக் கடந்த ஹெரிட்டேஜ் கட்டிடங்கள் ரூ.470.58 கோடி திட்ட மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டுப் பல்வேறு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சில பணிகள் தற்போதும் தொடர்ந்து வருகின்றன.

இந்தியாவின் தலைநகரில் நாம் தங்குவதற்கு ‘வைகை இல்லம்’ ரூ. 257 கோடி மதிப்பீட்டில் 3 லட்சம் சதுர அடி பரப்பில் முக்கியக் கட்டிடங்களாக 39 சூட் ரூம்கள், 60 டீலக்ஸ் ரூம்கள், 72 படுக்கைகள் கொண்ட 9 தங்கும் விடுதிகளுடன் இன்று நமது திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்டது.

திமுக ஆட்சியில் நூலகங்கள்

இப்படிப்பட்ட நிலையில் நாங்கள் கடைசியாக ஐந்தாவது ஆண்டில் நம்பிக்கையோடுதான் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தோம். அதில் 2025-26 ஆம் ஆண்டில் நல்லவர்களையும் மாணவர்களையும் பட்டதாரிகளையும் வளமாக்குவது கல்விதான்; கல்விக்கு நிகரானது ஒன்றுமில்லை; உலக வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கும் பொருளாதார வளர்ச்சியைப் பெறுவதற்கும் கல்வியின் விரிவாக்கம் அவசியம் என்ற தேவையை அறிந்த காரணத்தினால், அன்று முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ‘நூலகம் அவசியம் தேவை’ என்று கருதினார். நூலகத்தோடு இன்று டிஜிட்டல் நூலகமும் தேவை என்பதை உணர்ந்தவர் எங்கள் தலைவர்.

திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நூலகம், கடலூரில் நமது சமூகக் காவலர் அஞ்சலை அம்மாள் பெயரில் நூலகம், சேலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பெயரில் நூலகம், நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் நூலகம், கோவையைப் பொறுத்தவரையில் பெரியார் நூலகம் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கும் தருவாயில் இருந்தது. ‘நான் திறந்து விட வேண்டும், என்று முதல்வரிடம் கேட்டேன். அப்போதைய தலைமைச் செயலாளராக இருந்தவர் நாம் தானே வரப் போகிறேன், அப்போது திறக்கலாம்’ என்று நம்பிக்கையூட்டினார். மக்கள் எங்கள் மீது வைத்திருந்த பாசம் அப்படித்தான் என்று நாங்கள் கருதினோம். ஆனால், அந்தக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு 5 சதவீத கட்டிடப் பணிகள் மட்டுமே நிலுவையில் இருந்தன. கோயம்புத்தூரில் பொதுப்பணித்துறை அமைச்சர் சென்று அந்த நூலகத்தையெல்லாம் கண்டு களித்து ஆய்வு செய்து பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார்; பத்திரிகைகளில் நான் பார்த்தேன். நான் கேட்க விரும்புவது, 3 மாத காலம் ஆகிறது; கொள்கைத் தலைவர் என்று நீங்கள் பெரியாரை ஏற்றுக்கொண்ட நிலையில், அந்த நூலகத்தை இன்று திறக்காமல் இருப்பதை இந்த அரசின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். அந்த நூலகம் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் கிடப்பதையும் நினைவூட்டுகிறேன்.

கேரளாவில் பெரியார்

கேரளாவில் ‘ஆருக்குட்டி’ என்ற இடம் உள்ளது. வைக்கம் போராட்டத்திற்குச் சென்ற நமது தந்தை பெரியார் அடைக்கப்பட்ட சிறைச்சாலை அமைந்த இடம் அது. அன்றைய கேரளா முதல்வரிடம் கேட்டு, ஆருக்குட்டில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஒரு கடிதம் எழுதினார். நானே சென்று கேரள முதல்வர் பினராயி விஜயனைப் பார்த்துப் பேசினேன். 70 சென்ட் இடத்தை தானமாக நமது அரசாங்கத்திற்குக் கொடுத்தார்கள். அதில் ஒரு சிலை அமைப்பதற்காக ரூ.3.90 கோடி பணம் ஒதுக்கப்பட்டு அடிகோல் நாட்டு விழா நடத்தினோம். ஆனால், அந்தப் பணிகளைக் கடந்த 3 மாத காலமாகக்கிக் கிடப்பில் போட்டுவிட்டீர்கள். இது குறித்து அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். தந்தை பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று அடிக்கடி நீங்கள் தம்பட்டமடித்துக் கொள்வதன் காரணமாக உங்களுக்கு இதை நினைவூட்ட விரும்புகிறேன்.

காமராஜர் மீது திடீர் பாசமல்ல

நாங்கள் எங்கள் ஆட்சியில் பெருந்தலைவர் காமராஜர் மீது எங்களுக்கு உண்மையாகவே நிரம்பப் பற்று உள்ளது என்று சொல்கிறோம். அந்தக்காரணத்தால்தான் இன்று திருச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நூலகத்தைக் கட்டிக்கொண்டிருந்தோம். காமராஜர் மீது எங்களுக்கு ஒன்றும் திடீரென்று பாசம் வந்துவிடவில்லை. 1961-இல் தமிழகத்தைக் காங்கிரஸ் ஆண்டு கொண்டிருந்தது. அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்தான் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தார். அவர் ‘உங்களுக்குச் சிலை வைக்க வேண்டும், சென்னை மாநகரில் சிலை வைக்க மேயருக்கு அதிகாரம் உண்டு’ என்று அண்ணாவிடம் சொன்னபோது, அண்ணா சொன்னாராம்: ‘எனக்குச் சிலை முக்கியமில்லை, சுதந்திரப் போராட்டத்திற்காகப் போராடிய நமது பெருந்தலைவர் காமராஜருக்குத் தான் சிலை வையுங்கள்’ என்று சொன்னாராம்.

1961-இல் சென்னை மாநகராட்சியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேயர், இன்றுள்ள அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலையை நிறுவி, அன்றைய பிரதமர் நேருவை அழைத்து வந்து அந்தச் சிலையைத் திறந்த வரலாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அதோடு மட்டுமல்ல, 13.4.1957-இல் தான் பெருந்தலைவர் காமராஜர் முதன்முதலில் முதல்வரானார். அதற்கு முன்னர் ராஜாஜிதான் இருந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜாஜி ராஜினாமா செய்தார்; பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சர் ஆனார். ஆனால், அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லை. அவர் 6 மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் தான் நமது பொதுப்பணித்துறை அமைச்சர் சகோதரர் பிறந்த மாவட்டம் அன்றைய வடாற்காடு மாவட்டம் . இன்று வேலூர் மாவட்டம். அங்கு தான் என் சொந்த ஊரும் இருந்தது. அதன் பிறகு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா:
“மூத்த உறுப்பினர், ‘நான் பிறந்தது திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் BHL’ என்பதை பதிவு செய்கிறோன். மற்றொன்று அவர் ‘தம்பட்டம் அடிக்கிறார், தம்பட்டம் அடிக்கிறார்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அது தேவையற்ற வார்த்தை. இன்னும் அறிவாலயத்தில் பெரியார் சிலை நிறுவப்படவில்லை; எங்களது கட்சி அலுவலகத்தில்தான் பெரியார் சிலையும் அம்பேத்கர் சிலையும் இருக்கிறது” என்றார்.

சட்டப்பேரவையில் தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, “‘தம்பட்டம்’ என்பது நாடாளுமன்றப் பண்பிற்கு மாறான (Unparliamentary) வார்த்தை அல்ல. நாம் சில நேரங்களில் ‘சுயபுராணம்’ என்று சொல்வோம்; தம்பட்டம் என்போம். ‘விளம்பரப்படுத்திக் கொள்வது’ என்பதுதான் அதற்குப் பொருள். வேறு ஒன்றும் இல்லை” என்றார்.

மேலும் அவர் பேசியதாவது: “எனக்குக் கிடைத்த தகவலை நான் சொன்னேன். வட ஆற்காடு மாவட்டம் என்பது ஒரு பெரிய மாவட்டம். அந்த மாவட்டத்தில் கே.வி.குப்பம் தொகுதியில் தொண்டான் துளசி என்கின்ற அவரது தந்தை ராஜேந்திர ரெட்டியாரிடமிருந்து கிடைத்த தகவலை நான் சொன்னேன். அது இல்லை என்று மறுத்தால் அதைப்பற்றி எனக்கு ஒன்றும் இல்லை, அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால், அதற்குப் பக்கத்தில்தான் குடியாத்தம் என்கின்ற ஒரு தொகுதி உள்ளது. அந்தக் குடியாத்தம் தொகுதியில்தான் பெருந்தலைவரைத் தேர்தலில் நிறுத்த முடிவு செய்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் குடியாத்தத்தில் பெருந்தலைவர், பச்சைத் தமிழர் காமராஜர் நிற்கிறார்; அவரை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடாது என்று அண்ணா சொன்னார். அதுமட்டுமல்லாமல் ஒரு கட்டுரையும் தீட்டுகிறார். ‘குணாளா குலக்கொழுந்தே வருக வருக’ என்று எழுதியதோடு மட்டுமல்லாமல், திராவிட முன்னேற்றக் கழகம் உழைத்து அன்றைய இடைத்தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை வெற்றி பெறச் செய்தது என்பது வரலாறு.

அதோடு மட்டுமல்ல, 1967-இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருகிறது. 1968-இல் அண்ணா தலைமையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துகிறார்கள். அன்று அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு சென்று, ‘நீங்கள்தான் அந்த மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்த வேண்டும்’ என்று கேட்கிறார். அந்த மாநாட்டில் பெருந்தலைவர் காமராஜர் வரவேற்புரை நிகழ்த்தி, அந்த மாநாட்டிற்குப் பெருமை சேர்த்த வரலாறும் உள்ளது.

1975-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது, அன்று தமிழக முதலமைச்சராகக் கலைஞர் இருந்தார். செய்தி கேள்விப்பட்டவுடன் மழையையும் பொருட்படுத்தாமல் அவரே அங்கு நேரடியாக என்று சென்று, அன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜாராம் நாயுடுவை அழைத்துச் சென்று இடத்தை தேர்வு செய்து, பெருந்தலைவர் காமராஜரின் மறைவுக்கு அரசு மரியாதை செலுத்தியதோடு மட்டுமல்லாமல், அவருக்குச் சிலை அமைத்து மணிமண்டபமும் கட்டிய தலைவர் எங்களது தலைவர் கலைஞர் என்று சொன்னால் மிகையாகாது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் நண்பர்களுக்குத் தெரியும்; ‘கடற்கரையில் அனுமதியே கிடையாது’ என்று சொல்லிவிட்ட நேரத்தில், கலைஞர் ஒன்றிய அரசை அணுகி, இடம் பெற்று 1999-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜருக்குக் குமரிமுனையில் மணிமண்டபம் கட்டியதும் கலைஞர்தான். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என்று தனிச் சட்டம் உருவாக்கி, பள்ளிக்கூடத்தில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பெருமை சேர்த்தவர் கலைஞர். ஆக, அவர் மீது எங்களுக்குப் பற்று உண்டு, பாசம் உண்டு, மரியாதை உண்டு என்பதில் மாற்றமில்லை.

காலை உணவு திட்ட பெயர் மாற்றம் அவசியமா

நான் இந்த அரசைக் கேட்க விரும்புவது: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்ற திட்டத்தை, ‘லண்டன், கனடா பகுதிகளில் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றப் போகிறோம்’ என்று சொன்ன திட்டம் – அந்தத் திட்டத்தின் பெயர் ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’. நான் கேட்க விரும்புவது, அந்த காலை உணவுத் திட்டத்தை மாற்றி காமராஜர் பெயரை வைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்றார்.

அப்போது சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் எழுந்து பேச முயன்றார். அதற்கு எ.வ.வேலு, “மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் உட்காருங்கள், நான் பேசி முடித்த பிறகு பேசலாம். நீங்கள் அமைச்சராகி இருக்கிறீர்கள்; முதலமைச்சரிடம் சொல்லி ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வையுங்கள், நாங்கள் வரவேற்றுப் பேசுவோம்.

அதில் ஒரு ரகசியத்தைச் சொல்லட்டுமா?

அந்தத் திட்டம் வரும்போது ஒரு கலந்துரையாடல் வந்தது. நான் கூடச் சொன்னேன்; ‘அந்தப் பிள்ளைகளுக்கான மதிய உணவுத் திட்டத்திற்கு காமராஜர் திட்டம் என்று பெயர் இருக்கிறது, பக்கத்தில் எம்.ஜி.ஆர் பெயர் உள்ளது’ என்று சொல்லிவிட்டு, அன்று அமைச்சரவையில் இருந்த நான் சொன்னேன் – ‘ஏன் அந்தத் திட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் என்று வைக்கக் கூடாது?’ என்றேன். அதற்கு முதலமைச்சர் சொன்னார் – ‘அப்படி யார் பெயரையும் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. முதலமைச்சர் என்பது பொதுவான பெயர், அது யாரையும் குறிப்பதல்ல. எனவே யார் வந்தாலும் அதை மாற்றம் செய்ய முடியாது; யார் வந்தாலும் முதலமைச்சர்தானே’ என்று சொல்லித் தான் பெயர் வைத்தார். ஆனால், இப்போது என்ன என்று தெரியவில்லை” என்றார்.

அப்போது குறிப்பிட்டுப் பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன்: “உறுப்பினர் இங்கு பேச வேண்டிய மானியக் கோரிக்கையை விடுத்து, பள்ளிக்கல்வித்துறைக்குச் சென்று காலை உணவு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் நேரம் போதாது” என்றார்.

தொடர்ந்து பேசிய எ.வ.வேலு: “மானியக் கோரிக்கைக்குச் சம்பந்தம் இல்லாததை நான் பேசமாட்டேன். காமராஜர் பெயரில் நாங்கள் நூலகமே கட்டிக் கொண்டிருக்கிறோம்; அந்த அளவிற்கு அவர் மீது மரியாதை உள்ளது. காமராஜர் பெயரை ஒரு புதிய திட்டத்திற்கு வைத்திருந்தால் நாங்களும் பாராட்டி இருப்போம். எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு – ‘அண்ட வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என்று ஒரு பழமொழி உண்டு. அப்படி நாங்கள் வைத்த திட்டத்திற்கு நீங்கள் பெயர் வைப்பது என்பது அப்படித்தான் பொருந்தும் எனக் கருதுகிறேன்” என்றார்.

நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள்

“அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப். கென்னடி சொன்னார் – ‘என் நாடு பொருளாதார வளர்ச்சி பெற்றிருப்பதற்கு நெடுஞ்சாலையின் பங்கே அதிகம்’ என்றார். சாலைகள்தான் மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த ஆதாரமாகத் திகழ்கின்றன. இன்று இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால், அதில் நெடுஞ்சாலைத்துறையின் பங்கு அதிகம்.

எங்கள் தலைவர் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தபோதுதான், திராவிட மாடல் ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறைக்கு முக்கியத்துவம் தந்து 67,211 கிலோமீட்டர் நீளச் சாலைகள் பராமரிக்கப்பட்டன. 36 இரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன; 35 இரயில்வே பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. விபத்தைக் குறைப்பதற்காக 2,638 ‘பிளாக் ஸ்பாட்’களில் (Black spots) 415 இடங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்பட்டன. சாலை விபத்துகளைக் குறைக்க ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 40’ திட்டத்தைக் கொண்டு வந்தோம். கிராமப்புறப் பகுதிகளில் குறிப்பாக 1,166 தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்கள் ஆக்கினோம்.

கோவையில் ரூ.1,791 கோடி மதிப்பீட்டில் 10.5 கி.மீ உயர்மட்டப் பாலம் அமைத்து, விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பெயரைச் சூட்டினோம். மதுரை – சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் 1.33 கிலோமீட்டர் மேம்பாலம் கட்டப்பட்ட நிலையில் வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், குமரியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் கடல் நடுவே கண்ணாடியிழைப் பாலம் கட்டப்பட்டு, அன்றைய முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

அதேநேரத்தில், நமது நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில், ஒன்றிய அரசுக்கு இணையாக மாநில நெடுஞ்சாலை ஆணையம் ஒன்று சட்டமன்றத்தில் ஆளுநரின் ஒப்புதலுடன் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. தரமான சாலைகள் அமைக்க 10 தரக்கட்டுப்பாட்டுக் கோட்டப் பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. விபத்தில்லாத மாநிலம் என்ற இலக்கை அடைவதற்காக ‘நம்ம சாலை’ என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டு, அன்றைய துணை முதலமைச்சர், இன்றைய எதிர்க்கட்சித் தலைவரால் 01.11.2023 அன்று தொடங்கப்பட்டது. அதன் மூலம் 13,300 புகார்கள் பெறப்பட்டு, ‘பள்ளமில்லாச் சாலைகள்’ எனச் சீர் செய்யப்பட்டு பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. நெடுஞ்சாலைத்துறையைப் பொறுத்தமட்டில் ‘இன்டர்னல் ஆடிட்’ (Internal Audit) என்ற முறையைக் கொண்டு வந்தோம்.

2021 வரை இத்துறையில் 1,074 பேர்தான் ஒப்பந்ததாரர்களாக இருந்தார்கள். போட்டியை அதிகமாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1,252 புதிய ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்யப்பட்டு, ஒப்பந்தப் பணிகளில் விதிகளுக்கு உட்பட்டுச் சாலைகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர் என்பது வரலாறு. பாலங்களை ஆய்வு செய்து உறுதித்தன்மையைக் கண்டறிய ‘பாலங்கள் சிறப்பு ஆய்வு அலகு’ என்று ஒன்று உருவாக்கப்பட்டது. 22 மாவட்டங்களில் எனது தலைமையில் கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை ஆகிய துறைகளை வைத்து விழிப்புணர்வை உருவாக்க ஏற்பாடுகளைச் செய்தோம். தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 671 கோடி மதிப்பீட்டில் 4 வழி உயர்மட்டப் பாலம் கட்டப்படுகிறது.

மெட்ரோ சுரங்கப் பாதைக்கு மேலே பாலம் அமைப்பது உலகத்தில் வேறு எங்கும் இல்லை. இந்த வடிவமைப்பு (Design) நிப்பாய் கோய் நிறுவனம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர்கள்,சென்னை ஐ.ஐ.டி-யுடன் இணைந்து பணிகளை மேற்கொண்ட ஒன்றாகும். இன்று ஜப்பானின் ‘டோக்கியோ மரைன்’ என்ற நிறுவனம் சர்வதேச விருதை நமக்கு வழங்கியுள்ளது.

அரசு ஒப்பந்தங்களில் மதிப்பீடு (Estimation) என்பது மிகவும் முக்கியமானது. மதிப்பீட்டின் அடிப்படையில்தான் ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. மதிப்பீடுகள் தயார் செய்ய அடிப்படையாக SoR (Schedule of Rates) பயன்படுத்தப்பட வேண்டும். இது குறித்து தமிழகத்தில் 3 SoR ஆணை போடப்பட்டுள்ளது. இந்த ஆணையைத் தயாரிக்கும் குழுவில் நிதித்துறையின் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரி, அதோடு மட்டுமல்லாமல் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், வீட்டுவசதித்துறை, வனத்துறை, தமிழ்நாடு காவல் வீட்டுவசதிக் கழகம், தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய துறைகளில் உள்ள தலைமைப் பொறியாளர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள்தான் SoR என்பதை தயாரிக்கும் குழுவாக இருந்து தயாரிக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் திட்டங்களை மதிப்பீடு செய்வார்கள். இதற்கு மத்திய அரசாங்கத்தின் எஃகு உற்பத்தி நிலையத்தின் ஸ்டீல் விலை, தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் சிமெண்ட் விலை, தொழிலாளர் நலத்துறை சார்பாக நிர்ணயிக்கப்படும் ஊதிய விகிதங்கள், அதோடு மட்டுமல்லாமல் மணல் உள்ளிட்டவற்றின் பில்களை வாங்கித் தொகுக்கின்றனர். இந்தக் கூட்டம்தான் முதன்முதலாக இந்த SoR என்ற ‘செட்யூல் ஆஃப் ரேட்ஸ்’ என்பதைத் தயார் செய்து, அதை பொதுப்பணித்துறையின் சார்பாக வெளியிடுகிறார்கள். அதுதான் எல்லாத் துறைக்கும் சென்று தயார் செய்யப்படுகிறது.

நான் இதைச் சொல்வதற்குக் காரணம், மாண்புமிகு முதல்வர் அன்று தனது பதிலுரையில் பேசும்போது, ‘டெண்டர்களை முறைப்படுத்தத் தெரிந்த அளவிற்கு, டெண்டர் ரேட்டை உயர்த்தி ஊழல் செய்யத் தெரியாது’ என்று ஒரு வார்த்தையைச் சொன்னார். இந்த ‘ஊழல்’ என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை; முதல்வர் சொன்ன வார்த்தையைத்தான் மேற்கோள் காட்டுகிறேன், அதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இது முதல்வருக்கு அதிகாரிகள் யாரோ தவறாக எழுதிக் கொடுத்துவிட்டார்களோ…” என்றார்.

(இதற்கு செங்கோட்டையன் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தவறாக எழுதி கொடுத்து விட்டார்களோ என்ற வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார்.

அந்த வார்த்தைகள் நீக்கப்படுகிறது என்ற சபாநாயகர், முதல்வரை யாரும் வழி நடத்த தேவை இல்லை. அவர் விரல் நுனியில் விவரங்களை வைத்துக்கொண்டுதான் பேசுகிறார் என்றார்.

தொடர்ந்து பேசிய எம்எல்ஏ எ.வ. வேலு, “1984-லேயே நான் இந்த சட்டமன்றத்திற்கு வந்தேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். நான் எந்தத் தவறான வார்த்தைகளையோ அல்லது அவைக்குப் புறம்பான (Unparliamentary) வார்த்தைகளையோ பயன்படுத்த மாட்டேன்; அது எனக்குத் தெரியாது. என்னை அப்படித்தான் வளர்த்தார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, அண்ணன் கலைஞர் காலத்திலும் சரி, எங்கள் தலைவர் திராவிட மாடல் நாயகரும் எங்களை அப்படித்தான் வளர்த்திருக்கிறார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ‘செட்யூல் ஆஃப் ரேட்’ என்பது எப்படித் தயார் செய்யப்படுகிறது.என்பதை சொன்னேன். நாளை அமைச்சராக இருப்பவர்கள் பிற்காலத்தில் ஒரு கேள்வி கேட்கும்போது நீங்கள் இப்படித்தான் பதில் சொல்ல வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. இந்த புத்தகத்தை நான் தயார் செய்ய இயலாது; இது 1947 சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து அரசின் வழிகாட்டியாக உள்ளது. நான் எதையும் தவறாகச் சொல்லவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எவ்வளவு பணம் ஒதுக்குறீங்க?

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இப்போது இருக்கும் இந்தக் கொள்கை விளக்கத் திட்டத்தில் 497 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதையாகவும், 77 கிலோமீட்டர் இரு வழிப்பாதையாகவும் மேம்படுத்தும் நிலைப் பணியாக உள்ளது என்று பக்கம் 37-இல் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் எத்தனை கிலோமீட்டர் நான்கு வழிப்பாதையாக, எத்தனை கிலோமீட்டர் இரு வழிப்பாதையாக இருக்கும் என்று எதையும் சொல்லவில்லை. ஒரு திட்டத்தைச் சொன்னால் ‘இந்த ஆண்டு இவ்வளவு பணம் ஒதுக்குகிறோம், இவ்வளவு செய்யப் போகிறோம்’ என்று சொல்ல வேண்டும்; ஆனால் சொல்லவில்லை.

அதோடு மட்டுமல்லாமல், ‘முதலமைச்சர் அனைத்துப் பருவ காலங்களிலும் தங்கு தடையின்றி சாலைகளை இணைக்கும் திட்டம்’, ‘உயர்மட்டப் பாலங்கள் அமைத்தல்’ ஆகிய தலைப்புகளில் நிலுவையில் உள்ள பணிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் எத்தனை பணிகள் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்ற விவரம் இல்லை.

புறவழிச்சாலை, நகர்ப்புற உட்கட்டமைப்பு, மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்களில் நிலுவையில் உள்ள பணிகள் மட்டுமே பக்கங்கள் 40, 41-இல் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என எந்தத் திட்டமும் குறிப்பிடப்படவில்லை. பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள் குறித்தோ, வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்தோ இந்த அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளும் என கொள்கை விளக்கக் குறிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மனித மேலாண்மை என்பது மிகவும் முக்கியம். இங்கு சட்டமன்றத்தில் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் பெருமக்கள் அனைவரும் அமர்ந்திருக்கும் மேஜை, நாற்காலிகள் அனைத்தையும் பார்த்துப் பார்த்து திராவிட மாடல் ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நான் செய்தேன். இதையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் அரசு அதிகாரிகள் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். அதிகாரிகள் என்பவர்கள் நேற்று வரை எங்களுக்கு சலாம் போட்டவர்கள் தான், இன்று உங்களுக்கு சலாம் போடுகிறார்கள். அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள் தான்; ஜனநாயகத்தில் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, மாறி மாறி ஆட்சி அமைத்துக் கொள்கிறோம். அரசு அதிகாரிகள் பொதுவானவர்கள், அந்த அரசு அதிகாரிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணிய முதல் முதலமைச்சர் கலைஞர்தான். இதைச் சொன்னால் வருங்காலத்தில் இந்த ஆட்சியில் இருப்பவர்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அரசு ஊழியர்களுக்கான திட்டங்கள்

அரசு அலுவலர்களின் திட்டத்தோடு இணைந்த ஒன்று ஆசிரியர்கள். அவர்கள் இந்த நாட்டின் கண்கள்; அவர்கள் இல்லையென்றால் பண்பட்ட சமூகம் உருவாகாது. அதனால்தான் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது அரசு அலுவலர்களுக்கு எண்ணற்ற திட்டங்களைச் செய்தார். 1972-இல் ‘பழிவாங்கும் ரகசியக் குறிப்பேடு’ என்று ஒன்று இருந்தது; அதை ரத்து செய்தவர் கலைஞர். 15.01.1972 அன்று அரசு அலுவலர்கள் பணிக் காலத்தில் இறந்தால் அவர்களுக்கு வாரிசுரிமை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டன. அவர்கள் இறந்தால் முதன்முதலாக ரூ.10,000 இறந்த குடும்பத்திற்குக் கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் கலைஞர். பொங்கல் போனஸ் தந்தவர் கலைஞர். ஒன்றிய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதிய விகிதங்களை வகுத்தளித்தவர் கலைஞர். அரசு அதிகாரிகளுக்கு 30 ஆண்டுகாலம் பணிபுரிந்தால் அவர்களுக்கு முழு ஓய்வூதியம் தர வேண்டும் என்று சொன்னவர் கலைஞர். 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்தால் அதற்கு பணப்பலன் கொடுக்க வேண்டும் என்று சொன்னவர் கலைஞர். 2008-இல் அரசுப் பணியாளர்களுக்குப் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் கலைஞர். அரசு ஊழியர்களுக்கு ஓய்வின்போது பணிக்கொடையை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக மாற்றியது கலைஞர்.

01.04.2003-இல் பழைய ஓய்வூதியத் திட்டம் என்று இருந்ததை ரத்து செய்துவிட்டார்கள். ஒன்றிய அரசைத் தொடர்ந்து அன்றைய ஆட்சியாளர்கள் ரத்து செய்தார்கள். அதன் பிறகு பல போராட்டங்கள் 2026 வரை நடைபெற்றன. மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இது குறித்துக் குழு அமைக்கப்பட்டு, 3மாதத்தில் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ என்ற நிலை வந்தது.

தற்போது திமுக அரசு கொண்டுவந்த ‘தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ ஒழிக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ‘முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் கருணையுடன் பரிசீலிக்கப்படும்’ என்கிறீர்கள். இதனால் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடருமா அல்லது பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் இது குறித்துத் தெளிவை அரசு அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.

(அரசு அலுவலர்கள் சலாம் போட்டார்கள் என்ற வார்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.)

முதலமைச்சர் அறை விவகாரம்

முன்னாள் முதல்வர்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், பக்தவத்சலம், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அம்மையார் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் – இத்தனை முதலமைச்சர்களும் முதலமைச்சர் அறையிலிருந்துதான் இந்தத் தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்; ஏழ்மையைப் போக்கியிருக்கிறார்கள். தமிழக வளர்ச்சி என்று இன்று இந்தியாவில் இருக்கும் மாநிலங்களிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்று சொல்வதற்குக் காரணம், இத்தனை முதலமைச்சர்களும் அந்த அறையிலிருந்துதான் திட்டங்களைப் போட்டுள்ளனர்.

ஆனால் இப்போது அந்த இடத்தை மாற்றிவிட்டு, ஏறத்தாழ ரூ.1.30 கோடி செலவில் கலைஞர் கட்டிய நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சர் செல்கிறார். அது அவரது விருப்பம். யார் எந்த அறையில் இருப்பது என்பது அவரது விருப்பம்; யார் எந்த டிரைவரை வைத்துக்கொள்வது என்பது அவருடைய சொந்த விருப்பம், அதில் நான் தலையிட முடியாது. ஆனால் இவ்வளவு திட்டங்களையெல்லாம் நாட்டிற்கு அளித்த அறை அப்படி இருக்கும்போது, கலைஞர் கட்டிய அந்த அறைக்குச் செல்வதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சிதான். இந்த கோட்டை பிரிட்டிஷ்காரன் கட்டியது, அது தமிழன் கட்டியது!

ஆனால் இன்றைய தினம் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையில் ரூ.5.54 கோடி மதிப்பிலான இந்த டெண்டர் ஆன்லைனில் வெளியிடப்படவில்லை, அதில் ஏதோ கோளாறு உள்ளது என்று சொல்கிறார்கள். நான் கேட்க விரும்புவது, அந்த அறையிலேயே இருந்து பணியைப் பார்க்க வேண்டியதுதானே? அங்கிருக்கும் தலைமை செயலக பணியாளர்களின் பேசுகிறார்கள். இங்கு உணவு அருந்த, ஓய்வுக்கு எல்லாம் இடம் இல்லை நாங்கள் எங்கே போவது என்கிறார்கள். இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

“சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது” என்கிறார் வள்ளுவர்

அது ஒரு செயலில் ஈடுபட்டு முடிவெடுப்பதற்கு முன்னால் சாதக பாதகங்களை ஆராய்நது முடிவெடுத்திருக்க வேண்டும். முடிவெடுத்து விட்டு காலம் தாழ்த்தினால் அது தீதாக முடியும் என்று இந்த ஆட்சிக்கு வள்ளுவர் அப்டேட் செய்கிறார். நான் சொல்லவில்லை.

அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா.. ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு தாயகம் காப்பதுதான் இந்த கழக உறுப்பினர்கள் கடமை” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share