கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது.
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.
தமிழக சட்டசபை இன்று ஆகஸ்ட் 18-ந் தேதி கூடியதும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது: கர்நாடக மாநிலம், ஹானூர் அருகே கர்நாடக வனத்துறையினரால் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து சட்டமன்றப் பேரவை விதி 55-ன் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, எ.வ.வேலு, ஓ. பன்னீர்செல்வம், பால் மனோஜ் பாண்டியன், எம்.எச். ஜவாஹிருல்லா, கே. நித்யானந்தன், மு. தமீமுன் அன்சாரி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், இரா. ராஜேந்திரன், ஆர். காமராஜ், கே.சி. கருப்பண்ணன், ந. தளவாய் சுந்தரம், சௌமியா அன்புமணி, கணேஷ்குமார், சிவகுமார், வைத்தியலிங்கம், தாராகை கத்பட், சி.டி. ராமச்சந்திரன், கே. மாரிமுத்து, செல்லசுவாமி, லதா, எம். போஜராஜன் ஆகியோர் முன்னறிவிப்பு கொடுத்துள்ளனர்.
இவற்றை நான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக் கொள்கிறேன். கட்சிக்கு ஒருவர் வீதம் மாண்புமிகு உறுப்பினர்கள் இ்ப்பொருள் குறித்து சுருக்கமாக கூறி அரசின் கவனத்தை ஈர்க்கலாம்” என்றார்.
இதனையடுத்து பேசிய திமுக எம்.எல்.ஏ. பால் மனோஜ் பாண்டியன், “கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை சுட்டுக் கொன்றது மனித உரிமை மீறல்” என்றார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தினார்.
பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசுகையில், “ 3 தமிழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; 3 தமிழர் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., தாரகை கத்பட் பேசுகையில், “3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது; தமிழர்கள் என்றால் இளக்காரமாக பார்க்கும் நிலை உள்ளது. கர்நாடகா அரசின் இழப்பீடு போதுமானது அல்ல. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு” என்றார்.
இந்த தீர்மானத்தின் மீது சிபிஐ ராமச்சந்திரன், சிபிஎம் லதா, பாஜகவின் போஜராஜன் உள்ளிட்டோரும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
