சட்டப்பேரவைக்கு ‘அப்பா’ வரும்போது உங்களில் பலர் இங்கே இருக்க மாட்டீர்கள் என்று தமிழக வெற்றி கழக உறுப்பினர்களை பார்த்து முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் விஜய், ‘எங்கே உங்கள் அப்பாவை காணோம்’ என்று எதிர்க்கட்சியினரை பார்த்து கூறியிருந்தார்.
இதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது.
இதில் இன்று பேசிய முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இறுதியில், ”அப்பாவை காணோம் என்று சொல்கிறீர்கள். அவர் வரும்போது இங்கு உங்களில் பலர் இருக்க மாட்டீர்கள்” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ”முதல்வர் விஜய் இருக்கும் வரை அதற்கான வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தார்.
இதற்கு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ”திமுக விழுந்த வேகத்தில் மீண்டும் எழும். ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரோடு இந்த சட்டமன்றத்தில் திமுக இருந்திருக்கிறது” என்றார்.
இதற்கு செங்கோட்டையன், ‘ஒரு சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி ஆட்சி அமைத்து இன்று நீங்கள் எதிர்க்கட்சியாக உள்ளீர்கள். இனி தொடர்ந்து அப்படித்தான் இருப்பீர்கள்.
1977 எம்ஜிஆர் கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிர் பிரியும் வரை திமுக வெற்றி பெற்றதில்லை. ஜெயலலிதா இருந்தவரையும் திமுக வெற்றி பெறவில்லை. இதுதான் வரலாறு” என்று பதிலளித்தார்.
