பெரம்பூர்: முதல்வர் விஜய்யின் அலுவலகம் முற்றுகை – பரபரப்பு பின்னணி என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய்யின் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இன்று முற்றுகையிடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த விஜய், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து வருகிறார்.

ADVERTISEMENT

சென்னை கொடுங்கையூர் செம்பியம் சேவாயல் பகுதியில் உள்ள வேதாந்த முருகப்பா தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பு வீதிகளில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமான தார்ச்சாலை அமைக்க வேண்டும், கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும், தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைப் பொதுமக்கள் முன்வைத்தனர்.

இது குறித்துப் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அதிருப்தியடைந்த அவர்கள், தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை முற்றுகையிட்டதாகத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அப்பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

தங்களது பகுதியில் நிலவும் பிரச்சினைகள் குறித்துப் பலமுறை மனுக்கள் அளித்தும், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ததாகக் கூறப்பட்டாலும், இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

மேலும், சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்துத் தங்களது குறைகளைத் தெரிவிக்கப் பலமுறை அலுவலகத்திற்கு வந்தபோதும், உரிய முறையில் மனுக்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இதுகுறித்து பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள விளக்கம்:

சேவாயல் கிராமம் மற்றும் பாலா அவென்யூ குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை தொடர்பாக, கிடைக்கப்பெற்றுள்ள ஆவணங்கள், நீதிமன்ற வழக்கின் நிலை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என்பதில் பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம் உறுதியாக செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு வெறும் தற்காலிக நடவடிக்கை அல்லாமல், முழுமையான மற்றும் நிரந்தரத் தீர்வு காண்பதே எங்களின் நோக்கம்.

தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், சட்டரீதியான நடைமுறைகளுக்கு உட்பட்டு அப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உரிய தீர்வுகளை பெற்றுத் தருவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

“மக்களின் பிரச்சினை எதுவாக இருந்தாலும், முழுமையாக விசாரித்து, சட்டப்படி தீர்வு காண்பதே எங்கள் பொறுப்பு.”

விரைவில் உரிய நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share