பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி… முதல்வர் விஜய் அறிவிப்பு!

Published On:

| By Kavi

விவசாயகள் அமைப்பு கோரிக்கைகளின் படி ரூ.75 ஆயிரம் வரை முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று முதல்வர் விஜய் அறிவித்தார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 17) 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ADVERTISEMENT

”உலகில் ஜாதி, மதம், இன, மொழி என அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடைபெறும் தொழில் என்றால், அது விவசாயத் தொழில் மட்டுமே.

உலகின் ஒரு மூலையில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், உலகின் மற்றொரு மூலையில் உள்ள மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

ADVERTISEMENT

எந்த நாடு உழவுத் தொழிலை மதித்து, விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும், ஆதரவையும் வழங்குகிறதோ, அந்த நாட்டில்தான் மக்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும், பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க, கடந்த 25/05/2026 அன்று குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் ரூ.50,000 வரையிலான கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து, நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மட்டும் கருத்தில் கொண்டு, குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழு தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டதை உயர்த்தி, ரூ.75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழுத் தொகையையும், ரூ.75,000-க்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000-மும் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டு, அதன் மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி அளவிலான கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து 19/06/2026 அன்று ஆணையிடப்பட்டது.

இதில் 31/07/2026 வரை ரூ.5,267 கோடி விடுவிக்கப்பட்டு, 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவும் வைக்கப்பட்டுள்ளது.

இந்சூழ்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, 07/08/2026 அன்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்களின் கோரிக்கைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், அரசால் கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகை 4 முதல் 5 ஆண்டு கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வந்துள்ளது.

2021ஆம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 2021 முதல் 2026 வரையிலான காலத்தில் அரசால் 12 தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த கால அவகாசம் நமது அரசுக்கு தற்போது இல்லை.

இந்திய ரிசர்வ் வங்கியின் 28/11/2025-ஆம் தேதியிட்ட கடிதத்தில், அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான செயல்பாட்டு நடைமுறைகளின்படி பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாகச் செலுத்த வேண்டும் என்ற வழிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குப் பின்வரும் கூடுதல் தள்ளுபடியை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.

ரூ.75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% முழுமையாகவும், ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலும், ரூ.1,00,000-க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படும்.

இதன் மூலம் ரூ.75,000 முதல் ரூ.1,00,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்குத் தலா ரூ.75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். இதனால் ஏற்கனவே பெற்ற தள்ளுபடித் தொகைக்கு மேலாக ரூ.40,000 வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

இந்த கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றாலும், தமிழக விவசாயிகளின் நலனில்தான் நமது நலன் உள்ளது என்று கருதி, சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.6,220 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது” என்று அறிவித்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share