அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வார்த்தைகளால் சட்டமன்றத்தில் சலசலப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Aadhav

சட்டமன்றத்தில் திமுக சார்பில் கொண்டு வந்த அமுதன் கொலை வழக்கு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 17) விவாதம் நடைபெற்றது.

அப்போது போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “இந்த 100 நாள் ஆட்சி என்பது அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒரு அடித்தளத்திற்கான மக்கள் ஆட்சி. இந்த ஆட்சியை உருவாக்கியது இளைஞர்களும் பெண்களும்தான்; அவர்களுக்கு நாங்கள் எப்போதும் உண்மையாக இருப்போம்.

ADVERTISEMENT

எங்களது முதலமைச்சர், மறைந்த எங்கள் சகோதரர்களான அமுதன் மற்றும் தனுஷ் ஆகியோரை எங்களது சொந்தக் குடும்பமாகவும் சகோதரர்களாகவுமே நினைக்கிறார். அந்த உணர்ச்சியோடுதான் நாங்கள் அரசியலைப் பேசுகிறோம். இதைப் பற்றி அமைச்சர்களும் விளக்கமளித்துள்ளனர். குறிப்பாக, போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒரு முக்கியமான பிரச்சனை என்பதை அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஒப்புக்கொள்கின்றனர்; அதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ‘காவல்துறை அறிக்கையை மட்டும் நீங்கள் நம்பாதீர்கள்’ என்று பதிவு செய்தார்கள். நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம்; காவல்துறையா அல்லது இறந்த சகோதரனின் தாயா என்றால், எங்கள் முதலமைச்சர் தாயின் பக்கம்தான் நிற்பார்!

விசாரணையில் எந்தவிதமான அழுத்தங்களும் இந்த ஆட்சியில் எப்போதும் ஏற்படாது. நேற்று நானும் அமைச்சர் ராஜ்மோகனும் முதல்வரின் உத்தரவின்பேரில் தனுஷ் வீட்டிற்குச் சென்றோம். அவர்களது குடும்பத்தைச் சந்தித்துப் பேசினோம். அவர்கள் 4 கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இன்னும் சில பேர் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். இது குறித்து உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்குக்கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இறந்த தனுஷை அடக்கம் செய்த இடத்தில் ஒரு கல்லறை வேண்டும் என்று கேட்டனர். உடனடியாக முதலமைச்சர் கல்லறைக்கான இடத்தைப்பார்க்கச் சொல்லியுள்ளார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி அவர்களுக்கான இழப்பீட்டை இன்றே வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் வெளிப்பாடுதான், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மாண்புமிகு முதல்வர் கையெழுத்திட்ட 3 திட்டங்களில் ஒன்றான Anti-Narcotics Task Force திட்டமாகும். இத்திட்டத்தின் முக்கியத்துவம் கருதி, ரூபாய் 264.14 கோடி நிதி முதல்வர் உத்தரவுப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 65 ஆன்டி-நார்கோடிக்ஸ் டாஸ்க் போர்ஸ் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அரசு தமிழகத்தில் இருந்து போதைப்பொருள் பழக்கத்தை அடியோடு வேரறுக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளது. இதில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை.

ADVERTISEMENT

ஆனால், ‘திமுக’ என்று அமைச்சர் ஆதவ் பேச ஆரம்பித்தபோது எதிர்க்கட்சி வரிசையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘அங்கு 57 பேர் இருக்கிறார்கள்; நாங்கள் எழுந்தோம் என்றால் இந்த சபையில் அவர்கள் பேசவே முடியாது’ என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், ‘ பொதுப்பணித்துறை அமைச்சரின் கருத்தை ஏற்க முடியாது; அதை மட்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது நாங்கள் அமைதியாக இருந்தோம். அதேபோல் நாங்கள் பேசும்போது எங்களது கருத்துக்களைக் கேட்க வேண்டும். அதற்கு எதிர்க்கட்சித் தலைவரும் கொறடாவும் ஆணையிட வேண்டும். நாங்கள் எழுந்து பேசும்போது குரல் கொடுப்பது அவையின் மரபுக்கு எதிரான செயல் என்பதைப் பதிவு செய்து கொள்கிறேன்.

ஆதாரத்துடன் பேசுகிறேன்; இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அன்று துணை முதலமைச்சராக இருந்தவர். போதை பழக்கத்தை இந்த 100 நாளில் ஏற்படுத்தி விட முடியாது. 2020-க்கு முன்பு தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் இல்லை என்பதை நாங்கள் மீண்டும் உறுதியாகப் பதிவு செய்கிறோம். போதை கலாச்சாரம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடக்கும்.

2020-இல் 4,038 போக்சோ (POCSO) வழக்குகள் பதிவானது. 2021-இல் 6,064, 2022-இல் 6,580, 2023-இல் 6,968 மற்றும் 2024-இல் 10,046 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. பாலியல் தொந்தரவால் இரண்டரை வயது பெண் குழந்தை பலியான சம்பவத்தில் திமுகவின் உறுப்பினர்தான் குற்றவாளி. இது குறித்து இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அப்போது என்ன பேசினார்? என்ன நடவடிக்கை எடுத்தார்? போதைப்பொருளுக்கு எதிராக எத்தனை கூட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் நடந்தன?

இந்த ஆதாரங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் காவல்துறையால் கொடுக்கப்பட்ட அறிக்கை; இது தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கை இல்லை. போக்சோ வழக்குகள் கிட்டத்தட்ட 40 முதல் 60 சதவீதம் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துள்ளன. 2 ½ வயது குழந்தையைச் சீரழித்தது திமுக உறுப்பினர் என்று எஃப்.ஐ.ஆர் (FIR) போட்டது உங்களது அரசுதான். மக்கள் அழுத்தத்தின் பெயரிலேயே அந்த நடவடிக்கையை எடுத்தார்கள். அதனால் இந்த போதைப்பழக்கம் என்பது 100 நாட்களில் உருவானது அல்ல; இதற்கான அடித்தளத்தை உருவாக்கியதே திமுகதான். அதனால்தான் மக்கள் உங்களை தூக்கி எறிந்துள்ளார்கள். உங்களது தோல்விக்குக் காரணமே இந்த போதைப்பழக்கம்தான். எங்கள் தலைவரின் ஆட்சியில் அரசியல் தலையீடு இல்லாமல் யாராக இருந்தாலும் கடுமையான கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறுகிறோம்’ என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி:

அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘தமிழ்நாட்டில் என்னென்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் போதைப்பொருள் பிரச்சனை காரணமாக எத்தனை கொலைகள் நடந்துள்ளன என்பதை நான் மட்டுமல்ல, இங்கிருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த அரசின் கவனத்திற்குக்கொண்டு வந்தார்கள். அதற்கு இதுவரை எந்த அமைச்சரும் சரியான பதிலைச் சொல்லவே இல்லை. மாறாக, ‘உங்கள் ஆட்சியில் இப்படி நடந்தது’ என்று குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர் புகைப்படத்தைக் காட்டினார்; எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னார். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், எங்கள் ஆட்சியில் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்பதுதான். நாங்கள் கேட்பது, ‘ஏன் உங்கள் ஆட்சியில் நடவடிக்கை இல்லை?’ என்பதுதான்!

அமைச்சர் ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறார்; ஆனால் இன்னொரு வீடியோ உள்ளது. அதை அனைவரும் பார்த்திருக்கிறார்கள்; ஒட்டுமொத்த இந்தியாவும் உலகமும் பார்த்தது! இங்கிருக்கும் அமைச்சர் ஒருவர் போதைப்பொருளை நுணுக்கி என்ன செய்தார் என்பதை அனைவரும் பார்த்தார்கள்.

ஐந்தாண்டுகளாக போதைப்பொருட்களை ஒடுக்க எங்கள் முதல்வர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கருத்து வைக்கப்படுகிறது. அது தொடர்பாகச் சில கருத்துக்களை நான் கூற விரும்புகிறேன். ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் எங்களது தலைவர் ‘போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற இலக்கோடு, மதுவிலக்கு அமலாக்கத் துறையையும் நார்கோடிக்ஸ் இன்டலிஜென்ஸ் பீரோ சிஐடி (EB-CID) என்ற பிரிவையும் ஒன்றிணைத்து, EB-CID என்ற புதிய பிரிவை உருவாக்கியவர் எங்களது தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அன்றைய முதல்வர் அப்படிச் செயல்பட்டதால்தான், கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, போதைப்பொருட்களைத் தொடர்ந்து எங்கள் அரசு பறிமுதல் செய்தது.

இது குறித்த புள்ளிவிவரங்கள் தேவைப்பட்டால் அமைச்சரிடம் உள்ளது. கூடுதல் தகவல் தேவைப்பட்டாலும் அதற்கு அவர்கள் வேறு எங்கும் போய் தேட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்சியில் இன்று சென்னை மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அமல்ராஜ் ஐ.பி.எஸ் அவர்களிடம் இந்த அரசு கேட்டால், அவர் இந்தத் தகவல்களைத் தெளிவாக எடுத்துக் கொடுப்பார். ஏனென்றால் அவர்தான் அன்று அந்த EB-CIDஎ பிரிவைத் தலைமை ஏற்று நடத்தியவர். அவரிடம் கேட்டால் சரியாகச் சொல்வார்; எத்தனை டன் கஞ்சாவை பறிமுதல் செய்தோம், எத்தனை பேரைக் கைது செய்தோம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எல்லா தரவுகளும் அவரிடம் இருக்கும்.

ஒருவேளை எங்களது திராவிட மாடல் ஆட்சியில் போதைப்பொருள் தடுப்புச் செயல்பாடுகள் சரியாக நடக்கவில்லை என்று இந்த அரசு குற்றம் சாட்டினால், நான் அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி: ‘அப்புறம் எதற்கு அவ்வளவு பெரிய அதிகாரியை இப்போது இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சென்னை மாநகரக் காவல் ஆணையர் பொறுப்பில் வைத்திருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை நான் கேட்கிறேன்’ என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share