3 அமைச்சர்களின் சர்ச்சை கருத்துகள்- சபை குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் அதிரடி! வனத்துறை அமைச்சரின் மைக் துண்டிப்பு!

Published On:

| By Mathi

Speaker TN Assembly 3 Ministers

சட்டசபையில் தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ரஞ்சித்குமார் ஆகியோரின் சர்ச்சைக்குரிய பேச்சுகளை சபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.

சட்டசபையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவுக்கு சவால்விடும் வகையில் சில கருத்துகளைப் பேசினார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “பொதுப் பணித்துறை அமைச்சர் (ஆதவ் அர்ஜூனா) சொன்ன கருத்தை நான் ஏற்க முடியாது.. அதை மட்டும் சபைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன்” என்றார்.

மேகமலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் பிரச்சனை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் நிர்மல்குமார், எம்ஜிஆர் பேசியதாக ஒன்றை சுட்டிக் காட்டினார். இதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “அமைச்சர் நிர்மல்குமார் கூறிய அந்த வாசகம் மட்டும் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது” என்றார்.

வனத்துறை அமைச்சரின் மைக் துண்டிப்பு

இதேபோல வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க அதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் ரஞ்சித்குமாரின் சர்ச்சையான பேச்சும் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஆனாலும் அமைச்சர் ரஞ்சித்குமார் தொடர்ந்து பேச முயற்சித்த போது, ”அமைச்சர் ரஞ்சித்குமார் உட்காருங்க.. அவருக்கு மைக் கொடுக்காதீங்க..”என்று மைக் இணைப்பை துண்டித்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.

ADVERTISEMENT

அப்போது திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “மாண்புமிகு பேரவை தலைவர் மிக அருமையாக இந்த சபையை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். அமைச்சர்கள் பதில் சொல்கிறபோது திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றியும், திமுக தலைவரைப் பற்றியும் அவர்களுக்கு என்ன மனதில் பட்டதோ அதைச் சொல்கிறார்கள். நீங்கள் அதை தவறு என்று சொல்லி நீக்குகிறீர்கள். ஆனால் நேரிடையாக லைவ் போய்க்கொண்டிருக்கிறது.

அந்த காலத்தில் நேரிடையாக கன்ட்ரோலில் இருக்கும். பத்திரிகையில் எல்லாம் வராது. நீங்கள் நீக்கினாலும் பத்திரிகையில் தான் வராது. இப்போது லைவ் போகிறது. மேலும் காலையிலிருந்து வனத்துறையைப் பற்றி அவ்வளவு பெரிய விவாதங்கள் நடைபெற்றது.

வனத்துறை அமைச்சர் அப்போது வாயைத் திறக்கவில்லை. சம்பந்தமே இல்லாமல் எங்களை விட சீனியர் செங்கோட்டையன் பேசுகிறார்.

அவருடைய துறையிலே அவர் வந்து தலைவருடைய பெயரைச் சொல்லி இப்படி எல்லாம் பேசுவது என்ன நியாயம்? அப்படிப் பேசுகிறபோது மீண்டும் இவர்களும் பேசினால் நீங்கள் சபையை எப்படி நடத்துவீர்கள் என்பதை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அதேபோல திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் என்றுதான் சட்டமன்றத்தில் குறிப்பிடணும், பெயரைச் சொல்லக்கூடாது என்று ஏற்கனவே ரூலிங் இருக்கிறதுங்க. ஆனால் அதைக் கடைப்பிடித்தால் இந்த பிரச்சனைகள் பாதி அடங்கிடும்” என்றார்.

சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசும் சில சர்ச்சையான விஷயங்களை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தொடர்ந்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share