தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாக சட்டசபையில் தவெக ஆட்சிக்கு ஆதரவு தரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்கள் விமர்சித்தனர்.
சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெற்ற விவாதம்:
சிபிஎம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி: அமுதன் கொலை சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, உரிய விசாரணை நடத்தவும், போதைப்பொருள் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழித்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கோவை மாவட்ட ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் 3-வது ஆண்டு படித்து வருகின்ற மாணவர் அமுதன், கும்பல் தாக்குதலால் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த கல்லூரி நிர்வாகம் அந்த பெற்றோருக்கு ஆறுதல் சொல்வதற்கு கூட தயாராக இல்லை.
இதற்கு முன்பாக கூட தொடர்ச்சியாக, சிறிதும் பெரியதுமாக இரண்டு தாக்குதல்கள் மாணவருக்குள்ளேயே நடந்திருக்கிறது. மாணவர்களின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு மிக அடிப்படையாக கல்லூரியில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் பழக்கம் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. கொலை செய்யப்பட்ட மாணவரும் கல்வி கற்க வந்தவர் என்கிற மனிதாபிமானத்துடன் கூட நடந்துகொள்ளவில்லை கல்லூரி நிர்வாகம்.
இன்றைக்கு கோவையிலே கடந்த 10 நாட்களில் 3 படுகொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த உண்மையை மறைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
நம்முடைய இந்த அரசாங்கம் தமிழகத்திலே சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும் என்று சொன்னால் நிச்சயமாக காவல்துறையை கையில் எடுத்து காவல்துறையை கறைபடியாத கரங்களாக்குவோம்.அப்படி செய்தால் மட்டும்தான் சட்டம் ஒழுங்கை ஓரளவு சரிபடுத்த முடியும். இல்லை என்று சொன்னால் தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு மோசமாகத்தான் சென்று கொண்டிருக்கும்.

சிபிஐ எம்.எல்.ஏ. மாரிமுத்து: கோவை மாணவர் அமுதன், போதை பழக்கம் இருக்கிறது என்று காவல்துறையில் தகவல் சொன்னார் என்பதற்காக போதை பழக்கத்தை யார் யாரெல்லாம் கையாளுகிறார்கள் என்று அடையாளம் சொன்னார்கள் என்பதற்காகவே கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.
ஆட்சி மாற்றம் வந்திருக்கிறது.. பெரும்பான்மையாக மக்கள் உங்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த காவல்துறை பொறுப்பற்ற முறையில் இருக்கிறதோ என்று நான் மீண்டும் கவலையை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாணவனுக்கு நீதி வேண்டும். இவ்வாறு சிபிஐ எம்.எல்.ஏ. மாரிமுத்து பேசினார்.
