தமிழ்நாடு சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 17) கோவை மாணவன் கொலை தொடர்பாக திமுக சார்பில் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதய நிதி ஸ்டாலின் பேசுகையில், “கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. முக்கியமாகக் கோவையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த 19 வயது பொறியியல் மாணவன் அமுதனை 20 பேர் கொண்ட ஒரு கும்பல் சென்ற திங்கள் அன்று அடித்துக் கொலை செய்தனர். இந்தச் பிரச்சினையை நான் ஏற்கனவே இந்த அவையில் எழுப்பிய போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இது ஒரு கோஷ்டி பூசலால் நடந்த தகராறு அதனால் நடந்த கொலை என்று இங்குப் பதிவு செய்துள்ளார். 10 பேருக்கும் 10 பேருக்கும் சண்டை நடந்து அதில் கொலை நடந்தால்தான் கோஷ்டி பூசல்; ஆனால் ஒரு மாணவனை 20 பேர் சேர்ந்து அடித்துள்ளனர். இது படுகொலை.
மாணவர் அமுதன் விஷயத்தில் கோவை செட்டிபாளையம் பகுதி போலீசார் அமுதனை வழக்கு ஒன்றின் விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். அப்போது போதை கும்பல் குறித்த தகவலைக் கேட்டு வாங்கியுள்ளனர். தகவல் வாங்கிய காவல்துறை குற்றவாளிகளைக் கண்டறிந்து போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்திருக்க வேண்டும். ஆனால் போதைப் பொருள் பயன்பாடு பற்றிய தகவல் தந்த அமுதன் குறித்த தகவல்களைக் குற்றவாளிகளிடமே பகிர்ந்துகொண்டுள்ளனர். அதுதான் அமுதனின் மரணத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. இதை நான் மட்டுமல்ல, அமுதனின் பெற்றோர்கள் இருவரும் சொல்லியுள்ளனர். அமுதனின் தாய் தந்தை இருவரும் என்னிடம் தொலைபேசியில் பேசினர். அவர்களிடம் ஆறுதல் தெரிவித்தேன். அவர்கள் பேசிய போது போதை கும்பல் குறித்து காவல்துறையிடம் தகவல் கொடுத்ததால்தான் அமுதன் கொலை செய்யப்பட்டதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இந்த வழக்கில் கள ஆய்வு செய்த சமூக ஆர்வலர்களும் இதே குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க எங்களது தலைவரின் உத்தரவின் அடிப்படையில் ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கழகத்தைச் சேர்ந்த பத்தாயிரம் பேர் கலந்துகொண்ட மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தைக் கள்ளக்குறிச்சி நகரத்தில் நடத்தியுள்ளோம். இந்த கொலையை ஏதோ தனிப்பட்ட சம்பவமாகவோ அல்லது கோஷ்டி பூசலாகவோ நாங்கள் கடந்து போய்விட இயலாது. அரசின் அலட்சியத்தால், காவல்துறையின் பொறுப்பற்ற போக்கால் இந்த கொலை நடந்துள்ளதாக நான் குற்றம் சாட்டுகிறேன். அமுதன் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனையை நாம் வாங்கித் தர வேண்டும். குற்றவாளிகளுக்கு தகவல் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படும் காவல்துறையினர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சாரத்தை எதிர்த்து நிற்கும் ஒவ்வொருவருக்கும் விடப்படுகின்ற எச்சரிக்கைதான் இந்தச் சம்பவம்.
தனுஷ் படுகொலை
கோவையில் மட்டுமல்ல, சென்னையிலும் இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த 14ஆம் தேதி நடந்துள்ளது. திருவொற்றியூரில் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவன் தனுஷ், அவர் போதைப் பொருளைத் தட்டிக் கேட்டுள்ளார். அதற்காக பட்டப்பகலில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் தனுஷ் அவர்களை அடித்துக் கொலை செய்துள்ளனர். இந்த அரசு போதைப்பொருள் தடுப்புப் படையை உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்கிறீர்கள், இதைச் சொல்லி பல கோடி ரூபாயில் விளம்பரங்களைச் செய்துள்ளீர்கள். ஆனால் களத்தில் நடப்பதைப் பார்த்தால் வேறு மாதிரியாக உள்ளது.
தொடரும் கொலைகள்
உதாரணமாகச் சில நாட்களில் நடந்த குற்றச் சம்பவங்களை மட்டும் இங்குப் பதிய வைக்க விரும்புகிறேன். நேற்று இரவு காஞ்சிபுரம் அருகில் படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது போதை கும்பலின் அட்டகாசத்திற்கு எதிராக கேள்வி எழுப்பிய சந்துரு, விக்கி என்ற இரண்டு இளைஞர்களை அந்தக் கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனலட்சுமி, பூவரசி என்ற தாய் மகளை வெட்டிக் கொலை செய்துள்ளனர். ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து வைதேகி என்ற இளம் பெண்ணைக் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். ஆகஸ்ட் 13ஆம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பெண் தலைமைக்காவலர் தாமரைச்செல்வி குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 14ஆம் தேதி கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் வயதான பெண்மணி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதே நாளில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சானாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் என்ற இளைஞரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆளும் கட்சி நிர்வாகிகள் மீதே பாலியல் குற்றச்சாட்டு
இப்படி கொலைகள் மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றபோது வழியில் கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மேல் பாலியல் புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது வரும் இரண்டாவது பாலியல் குற்றச்சாட்டு இது. ராணிப்பேட்டையில் உள்ள ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு சொல்லியுள்ளார்.
100 நாள் சாதனை என்று இந்த அரசு பெருமை பேசும் அதே நேரத்தில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த 100 நாட்களில் எந்த அளவிற்கு மோசமாகியுள்ளது என்பதற்கும் இந்தச் சம்பவங்களே சாட்சி. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க இந்த அரசு என்னென்ன முயற்சிகளை எடுக்கப் போகிறது? பள்ளி, கல்லூரிகளில் வன்முறைக்கு எதிராகவும் ஒழுக்கத்தை வளர்த்தெடுக்கவும் கவுன்சிலிங் வகுப்புகளை நடத்த வேண்டியது அவசியம் என இந்த அரசை கேட்டுக்கொள்கிறோம். போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராகத் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.”
