ராஜன் குறை
எண்பதாவது சுதந்திர தினம் ஒரு விதத்தில் குறிப்பிடத் தகுந்தது என்று பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பேசும்போது கூறினார். அது என்னவென்றால் முதல் முறையாக வந்தே மாதரம் அதன் முழுமையான வடிவத்தில் ஆறு பத்திகளும் இசைக்கப்பட்டதுதான். இந்த பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன எனப்படுகிறது.

வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்திற்கு இணையான மதிப்பை வழங்கி ஜூலை மாத இறுதியில் தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுத்தல் (திருத்தம்) சட்டம், 2026 என்ற ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட து. இந்த பாடலை ஒன்றிய அரசு விழாக்களில் முதலில் பாட வேண்டும் என்று சுற்றறிக்கையும் அனுப்பப் பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்திற்கும், சுதந்திர தின விழாவில் இந்த பாடல் இசைக்கப்பட்டதிற்கும் பின்னால் ஒரு நெடிய வரலாறு உள்ளது.
இந்த பாடல் வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் அவரது நாவலான ஆனந்த மடத்தில் எழுதப்பட்டது. வங்க மொழியும் சமஸ்கிருதமும் கலந்த பாடல். அந்த நாவல் 1882-ஆம் ஆண்டு வெளியானது. கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் அதில் வணங்கப்படும் மாதா வங்காள மாதா. ஏனெனில் அவர் எழுதிய காலத்தில் இந்திய மாதா அல்லது பாரதா மாதா என்ற கருத்துருவாக்கம் தோன்றியிருக்கவில்லை.
வங்காள மாதாதான் குறிப்பிடப் படுகிறார் என்பதற்கான சான்று பாடல் வரிகளிலேயே உள்ளது. அது என்னவென்றால் ஏழு கோடி குரல்கள் பாடுகின்றன, பதினான்கு கோடி கரங்கள் வாளேந்துகின்றன ஆகிய வரிகள்தான். இந்த எண்ணிக்கை ஏழு கோடி வங்காளிகளைத்தான் குறிக்கின்றது. அந்த நாவல் வெளிவந்த ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை இருபத்தைந்து கோடி (1881 சென்சஸ் படி.) வங்காளிகள் ஏழு கோடி பேரென்பது பரவலான நம்பிக்கை.
பின்னாளில் சுதேசி இயக்கத்தில் வந்தே மாதரம் என்ற முழக்கமும், இந்த பாடலும் பிரபலமடைந்தது. இந்தியா முழுவதும் இந்த முழக்கம் பரவியது. உதாரணமாக பாரதியாரும் வந்தே மாதரம் எனத்தொடங்கும் ஒரு பாடலை தமிழில் எழுதினார். அகில இந்திய காங்கிரஸ் மாநாடுகளில் பங்கிம் சந்திரர் பாடலைப் பாடுவது வழக்கமானது.
அதில்தான் ஒரு பிரச்சினை தோன்றியது. இந்த பாடலில் இந்து பெண் தெய்வங்களுக்கும் அவர்களை தேசத்தின் உருவகமான மாதாவுடன் இணைத்து வணக்கம் தெரிவிக்கப்படுகிறது. காங்கிரஸிலிருந்த முஸ்லீம் உறுப்பினர்கள் தங்கள் மதம் உருவ வழிபாட்டை ஏற்பதில்லை; அதனால் நாங்கள் இந்த பாடலைப் பாடுவதில் இணைய முடியாது என்று கூறினர்.
இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண 1937-ஆம் ஆண்டு நேரு, சுபாஷ் சந்திர போஸ், அபுல் கலாம் ஆசாத், நரேந்திர தேவ் ஆகியோரைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்கள் ரவீந்திரநாத் தாகூரையும் ஆலோசனை கேட்டார்கள். அவர் பாடலின் முதல் இரண்டு பத்திகளில் இயற்கைதான் வழிபடப்படுகிறது. அவற்றை மட்டும் பாடலாம் என்று பரிந்துரைத்தார். அதிலிருந்து முதலிரண்டு பத்திகள் மட்டும் பாடப்பட்டன. ஆனால் இந்த தீர்வு இந்து மத அமைப்புகளுக்கு பிடிக்கவில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது தேசிய கீதமாக இந்த பாடலை அறிவிக்க வேண்டுமென்று ஒரு சாரார் கூறினர். நேரு உள்ளிட்ட தலைவர்கள் தாகூரின் ஜன கன மன பாடலை தேர்வு செய்தனர். இறுதியில் வந்தே மாதரம் பாடலின் முதலிரண்டு பத்திகளை கூடுதலாக தேசியப் பாடலாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாஜக-வின் முன்னோடி அமைப்புகள், இந்துத்துவ சிந்தனை கொண்டவை, வந்தே மாதரம் முழுப்பாடலும் ஏன் இந்து ராஷ்டிரத்தின் தேசிய கீதமாக இருக்க க் கூடாது என்று கேள்வி எழுப்பி வந்தனர். நான் கல்லூரியில் படிக்கும் போதும் என் ஆர்.எஸ்.எஸ் நண்பர்கள் உணர்ச்சிகரமாக இந்த பிரச்சினையைப் பேசுவார்கள்.
பிரச்சினை இந்தியாவின் மதச்சார்பின்மை குறித்தது. பல்வேறு மதத்தினை சேர்ந்தவர்களும், மத நம்பிக்கை, இறை நம்பிக்கையற்றவர்களும் சில இந்து பெண் தெய்வங்களை வணங்கும் வரிகளைப் பாட நிர்பந்திப்பது மதச் சார்பின்மைக்கு உகந்தது அல்ல என்பதுதான் பிரச்சினை. பாஜக அது சந்திக்கும் பல்வேறு நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க இப்போது இந்த பாடலை மீண்டும் மதவாத அரசியலை வலுப்படுத்தும் நோக்கில் கட்டாயமாக்குகிறது. பல்வேறு மாநிலங்களிலும் இது தொடர்பான சர்ச்சைகள் உருவாகின்றன.

காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு என்ன?
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்திற்குக் கொடியேற்றும் போது வந்தே மாதரம் பாடலின் ஆறு பத்திகளும் திடீரென பாடப்பட்டன. இதனை எதிர்பார்க்காத சோனியா காந்தி மூன்றாவது பத்தி தொடங்கியதுமே அதனை நிறுத்த விரும்புவது போல செய்கை செய்வதை காணொலியில் பார்க்க முடிகிறது. பக்கத்தில் நின்ற கார்கேவிடம் கூறுகிறார். அவரும் ஏதோ சொல்கிறார். ஒரு சலசலப்பு தெரிகிறது. ஆனால் பாடல் முழுவதுமாக பாடி முடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சில காங்கிரஸ்காரர்கள் செக்யூலரிசம் காத்த அன்னை சோனியா என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு நாற்காலி தரச்சொல்லித்தான் கேட்டார். வந்தே மாதரம் குறித்து எதுவும் சொல்லவில்லை என்கிறார். பாஜகவிற்கு ஒரே கொண்டாட்டம். காங்கிரஸ் தேசியப் பாடலை அவமதித்துவிட்டது என்று கூக்குரல் எழுப்புகிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால் நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தம் வந்தபோது தி.மு.க கடுமையாக எதிர்த்தது. கனிமொழியும், ராஜாவும் காட்டமாக விமர்சனங்களையும், மறுப்பையும் முன்வைத்தார்கள்.

காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினையில் தீவிரமான குரல் எழுப்பவில்லை. இந்தியாவின் அதிகாரபூர்வ பெயரில் “மதச்சார்பற்ற” என்ற வரியைச் சேர்த்தவர் இந்திரா. வந்தே மாதரம் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாட வேண்டும் என்ற மரபை உருவாக்கியவர் நேரு.
இந்த வரலாற்றுப் பின்னணியில் காங்கிரஸ் அலுவலகத்தில் யார் ஆறு பத்தியையும் பாடச் சொன்னார்கள் என்பது தெளிவாக இல்லை. கட்சியின் கொள்கை தெளிவாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது இந்த பிரச்சினை பெரிதானால் காங்கிரஸ் என்ன கொள்கை முடிவை அறிவிக்கும் என்று தெரியவில்லை. அடுத்த ஆண்டு உத்திரப் பிரதேச தேர்தல் வரும் நேரத்தில் அதனால் துணிந்து மதச்சார்பின்மையை வலியுறுத்தும் முடிவை எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. காங்கிரஸின் பிரச்சினைகளுக்கு இது ஒரு குறியீடாகிறது.
காங்கிரஸின் அரசியல் கருத்தியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா?
ஒரு சிலர் தி.மு.க-வும், ஆதரவாளர்களும் தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் வரும்வரை காங்கிரஸ்தான் பாஜக எதிர்ப்பில் முக்கியமான சக்தி என்று கூறிவந்தார்கள்; தேர்தல் முடிந்து காங்கிரஸ் தவெக கூட்டணிக்கு சென்றவுடன் காங்கிரஸ் பாஜக எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்று கூறுவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அது உண்மைதான்.
இந்த மாற்றம் மிகவும் இயல்பானதும், நியாயமானதுமாகும். எந்த காரணங்களுக்காக காங்கிரஸ் தி.மு.க முதுகில் குத்திவிட்டு தவெகவுடன் போனது என்பதுதான் முக்கியமான கேள்வி. இது ஏதோ சாதாரணமான நிகழ்வல்ல. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் நோக்கங்கள், இலட்சியங்கள் குறித்து கடும் ஐயத்தை எழுப்பியுள்ள கேள்வி.
ஏனெனில் காங்கிரஸ் பாஜக-வை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பதே முக்கியம் என்று கருதியிருந்தால், பத்தாண்டுகளாக அந்த எதிர்ப்பை தீவிரமாக முன்னெடுத்துவரும் தி.மு.க-வை அவ்வளவு சுலபமாக உதறிவிட்டு, பாஜகவை கண்டித்துப் பேசவே அஞ்சும் தவெக கூட்டணிக்கு சென்றிருக்க முடியாது. வெறும் திரைக்கதாநாயக பிம்பத்தை அரசியல் முதலீடாக வைத்து இன்ஸ்டாகிராம் பிரசாரம் மூலம் வென்ற ஒரு கட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ் பிறந்த 1925-ஆம் ஆண்டிலேயே பிறந்த அதன் கருத்தியல் எதிர்முனையான சுயமரியாதை இயக்கத்தின் வாரிசான தி.மு.க-விற்கும் உள்ள வேறுபாடு குறித்து காங்கிரஸிற்கு தெரியாமலிருக்க முடியாது.
அரசியலுக்கு மூன்று பரிமாணங்கள் உண்டு. ஒன்று நடைமுறை அரசியல். அது அரசாட்சி, அதன் நிறை குறைகள், நிர்வாகத் திறன், எடுக்கப்படும் முடிவுகள் சார்ந்தது. மற்றொன்று முரணரசியல். அது தேர்தல் களத்தில் கூட்டணி, எதிரி-நண்பன் அணி சேர்க்கைகள் சார்ந்தது. அதன் நோக்கம் ஆட்சிக்கு வருவது, அதிகாரத்தில் பங்குபெறுவது ஆகியவைதான். இது இரண்டையும் கடந்து மற்றொரு பரிமாணம் இருக்கிறது. அதுதான் கருத்தியல் சார்ந்த அரசியல். அதுதான் நீண்ட கால நோக்கில் ஒரு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க வல்லது.
பாஜக-வின் கருத்தியல் எதிர்முனை தி.மு.கதான் என்பது வரலாற்று உண்மை. முரணரசியல் குழப்பத்தில் அது காங்கிரஸ் கட்சியின் துரோகத்தால் பாஜக-வுடன் கூட்டணி அமைக்க ஒருமுறை நிர்பந்திக்கப் பட்டாலும், கருத்தியலில் என்றும் சமரசம் செய்துகொள்ளவில்லை என்பது வெளிப்படையானது. இந்தியாவிலேயே தி.மு.க போல சமரசமற்ற கருத்தியல் எதிர்ப்பை வெளிப்படுத்திய கட்சி வேறெதுவும் கிடையாது என்பதை EWS பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீடு போன்ற தருணங்களை நினைவில் கொண்டால் புரிந்து கொள்ளலாம். அப்படி என்ன கருத்தியல் எதிர்முனை என்பதை ஒரு பட்டியல் மூலம் மனதில் கொள்ள வேண்டும்.

இந்த கருத்தியல் அடிப்படைகளை தி.மு.க ஒருபோதும் கைவிடாது. முரணரசியல் தேர்தல் களத்தில் சில பல சமரசங்கள் நிகழ்ந்தாலும், இந்த கருத்தியல் அச்சினை கைவிட்டால் தி.மு.க தன் உயிராற்றலையே இழந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் இன்றைக்கு அவசரப்பட்டு தவெக-விடம் சென்றுவிட்ட காங்கிரஸ், தி.மு.க பாஜக-வுடன் நெருங்குகிறது என்று பேசி தான் செய்து கொண்ட கருத்தியல் சமரசத்தை நியாயப்படுத்திக் கொள்ள முயல்கிறது.
காங்கிரஸ் எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன?
காங்கிரஸின் பிரச்சினை இரண்டு வகையானது. ஒன்று பாஜக-வுடன் கருத்தியல் ரீதியாக தி.மு.க போல தீவிரமாக முரண்பட்டால் வட மாநிலங்களில் வெற்றி பெற முடியுமா என்ற சிக்கல். உதாரணமாக மத்திய பிரதேச தேர்தலில் வெல்வதற்காக காங்கிரஸ் தலைவர் கமல்நாத் “நாங்கள்தான் பாபர் மசூதியை திறந்து விட்டோம்; அதனால்தான் ராமர் கோயில் சாத்தியமானது” என்று பெருமை பேசும் அளவிற்குப் போகிறார்.
இதன் தொடர்ச்சியாக பொருளாதாரம், சமூக நீதி கொள்கைகளில் காங்கிரஸில் எப்போதுமே வலதுசாரித் தன்மை கொண்டவர்களும் முக்கிய பங்கேற்பது. பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்கள் நகர்புற மேல்தட்டு வாக்காளர்களை காங்கிரஸ் கவர வேண்டும் என்றூ கூறுபவர்கள். சசி தரூர் பாஜக-வின் அப்பட்டமான சந்தர்ப்பவாத வெளிநாட்டு கொள்கையை வியந்து பாராட்டுவார். வெகுகாலமாகவே இத்தகைய கலப்படக் கொள்கைக் கலவை பெரிய கூடார அணுகுமுறை (Big Tent approach) என்று வர்ணிக்கப்படுகிறது. ஒரு சிலர் அரை சங்கி, மென்சங்கி என்று சொல்வார்கள்.
இரண்டாவது முக்கிய பிரச்சினை, மாநில முரணரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா, ஒன்றிய முரணரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி. வேறு வார்த்தைகளில் சொன்னால் பாஜக-வையும், மாநில கட்சிகளையும் ஒரு நேரத்தில் எதிர்க்க முடியாது. அப்படிச் செய்வதால் காங்கிரஸ் தொடர்ந்து படுதோல்விகளையே சந்திக்கிறது.
மாநில தேர்தல்கள் போது மாநில கட்சிகளை எதிர்ப்பது, கூட்டணி வைத்தாலும் கசந்துகொள்ளும்படி நடந்துகொள்வது, நாடளுமன்ற தேர்தல் வந்தால் அதே மாநில கட்சிகளை வாரி அணைத்துக்கொள்வது என்று இரட்டை வேடம் போடுவது பரிதாபகரமான விளைவுகளையே தருகிறது. மேலும் காங்கிரஸால் அதன் மாநில தலைவர்களை சுதந்திரமாக செயல்பட விட முடிவதில்லை. மேலிட தலையீடுகளால் ஒவ்வொரு மாநிலத்திலும் பல கோஷ்டிகள் உருவாகி கட்சியை வளர விடாமல் செய்துவிடுகின்றன.
துவக்கம் முதலே வேற்றுமையில் ஒற்றுமை, பன்மைத்துவம் என்றெல்லாம் காங்கிரஸ் பேசினாலும், உண்மையான கூட்டாட்சிக் குடியரசை உருவாக்கும் எந்த இலட்சியமும், வேலைத்திட்டமும் காங்கிரஸிற்குக் கிடையாது. தி.மு.க அரசால் உருவாக்கப்பட்ட குரியன் கமிட்டி அறிக்கையைக் குறித்து காங்கிரஸ் விவாதிப்பதே கிடையாது. ஒன்றியத்தில் அதிகாரத்தை குவித்ததே காங்கிரஸ்தான். அதனை சீர்செய்யும் எந்த தீவிரமான கொள்கையும் அதனிடத்தில் இல்லை.

இது போன்ற பல காரணங்களால் பாஜக-வை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பது என்பதில் காங்கிரஸ் பலவீனப்பட்டு விடுகிறது. திடீரென உருவான காக்ரோச் ஜனதா பார்ட்டியால் நடத்த முடிந்த எழுச்சிமிகு போராட்ட த்தை காங்கிரஸ் மாணவர் அமைப்புகளால் நட த்த முடியவில்லை. இட துசாரி மாணவர் அமைப்புகள் மிகச் சிறப்பான தலைமைத்துவத்தை உருவாக்கின. ஆனால் காங்கிரஸ் பின்னணியிலிருந்து தலைமைத்துவத்துடன் யாரும் தோன்றவில்லை.
காங்கிரஸ்- மாநில கட்சிகள் உறவு
ஒன்றிய அரசமைக்க தானில்லாமல் முடியாது என்று கருதும் காங்கிரஸ், மாநில கட்சிகள் தன் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என நினைக்கிறது. தி.மு.க ஆட்சியில் பங்குதர முடியாது என்றதில் ராகுல் காந்திக்குக் கோபம். விஜய் ஆட்சியில் பங்கு தருகிறேன் என்று சொல்கிறார், ஏன் தி.மு.க தர மறுக்கிறது என்று நினைக்கிறார்.
தி.மு.க காங்கிரஸை எதிர்த்து போராடி வளர்ந்த இயக்கம் என்பதை சுலபமாக மறந்து விடுகின்றனர். திராவிட தமிழ் தன்னுணர்வு, மாநில சுயாட்சி ஆகியற்றை அடிநாதமாக க் கொண்ட தி.மு.க எப்படி காங்கிரஸிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க முன்வரும்? முரணரசியல் கட்டாயத்தில் ஒருமுறை அப்படி செய்ய ஒப்புக்கொண்டு தோல்வியைத் தழுவிய அனுபவம் வேறு இருக்கும்போது ஏன் அதனைச் செய்யப் போகிறது?
காங்கிரஸின் முக்கிய நோக்கம் ஒன்றியத்தில் பாஜக-வை எதிர்ப்பதுதான் என்றால் எதற்காக மாநிலத்தில் ஓரிரு அமைச்சர்கள் கிடைப்பதை அது முக்கியமாக க் கருத வேண்டும்? அதை வைத்துக்கொணடு கட்சியை மாநிலத்தில் வளர்த்துவிட முடியுமா? ஆனால் தி.மு.க-வுடன் அதன் முரண்பாட்டைவிட பன்மடங்கு பெரிய பிரச்சினை உத்திரப் பிரதேசத்தில் அதன் எதிர்காலம்தான்.
உ.பி. மாநில தேர்தலில் சமாஜ்வாடி ஜனதா கட்சியுடன் 2017-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி கண்டது. சமாஜ்வாடி 311 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் 114 இடங்களில் போட்டியிட்டது. சமாஜ்வாடி 47 இடங்களில் வென்றது: 22% வாக்குகளை வாங்கியது. 15% ஸ்டிரைக் ரேட். காங்கிரஸ் 7 இடங்களில் வென்றது. 6% வாக்குகளை வாங்கியது. 6% ஸ்டிரைக் ரேட். கூட்டணிக்கு காங்கிரஸ் சுமை என்றாகிறது அல்லவா? இவ்வளவு குறைந்த ஸ்டிரைக் ரேட் இருந்தால் எப்படி தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க முடியும்?
அதனால் அதற்கடுத்த 2022-ஆம் ஆண்டு தேர்தலில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணி அமையவில்லை. சமாஜ்வாடி சில மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது; அது 343 தொகுதிகளில் போட்டியிட்டு 111 தொகுதிகளை வென்றது. 32% வாக்குகள். 35% ஸ்டிரைக் ரேட். காங்கிரஸ் 399 தொகுதிகளில் தனியாகப் போட்டியிட்டு இரண்டே இரண்டு தொகுதிகளில் வென்றது. வெறும் 2.33% வாக்குகளைப் பெற்றது. ஸ்டிரைக் ரேட் ஒரு சதவீதம் கூட கிடையாது.

இந்த இரண்டு தேர்தல்களையும் ஒப்பிட்டால் என்ன தெரிகிறது? அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி ஜனதா கட்சி மிக வலுவாக இருக்கிறது. அதற்கு நிபந்தனையற்ற முழு ஆதரவை காங்கிரஸ் வழங்கினால், அதனால் பாஜக-வை வெல்ல முடியலாம் என்பதுதான் தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் அப்படிச் செய்யுமா என்று தெரியவில்லை. அது மீண்டும் தானே உத்திர பிரதேசத்தில் வலுப்பெற வேண்டும் என்றுதான் நினைக்கும். காங்கிரஸின் பெரியண்ணன் மனப்பான்மைக்கு எல்லையே இருப்பதில்லை.
இரு தினங்களுக்கு முன்பு ஆங்கில ஹிண்டு நாளிதழில் ஒரு நடுப்பக்க கட்டுரை வந்துள்ளது. அதில் வர்கீஸ் ஜார்ஜ் என்ற இதழியலாளர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதை படித்தால் பெரும் வியப்பு தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை. அவர் என்ன சொல்கிறார் என்றால் காங்கிரஸ் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இப்போது உறுதியாக இருக்கிறது. சமாஜ்வாடி, காங்கிரஸ் இரண்டுமே அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்க விரும்புகின்றன. அதனால் அகிலேஷ் யாதவ் தன் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து விடலாம் என்று எழுதியுள்ளார்.
அதாவது 32% வாக்குகளைப் பெற்ற மாநில கட்சியை, 2% வாக்குகளைப் பெற்ற தேசிய கட்சியுடன் இணைந்துவிடலாம் என்று கூறுகிறார். அந்த அளவு காங்கிரஸின் டில்லி குடிமைச் சமூக அரசியல் முக்கியமானதாகத் தெரிகிறது என்றுதான் இதற்குப் பொருள். இது போன்ற மனமயக்கங்களிலிருந்து விடுபடாமல் ஒரு போதும் கூட்டாட்சியும் மலராது; பாஜக-வையும் வீழ்த்த முடியாது என்றுதான் கூற வேண்டும். எங்கே செல்லும் காங்கிரஸ் பாதை? யாரோ யார் அறிவார்?
