ராஜன் குறை
இந்தியக் குடியரசு பிறந்து எழுபத்தாறு ஆண்டுகள் ஆகியுள்ளன. மானுட வரலாற்றில் இவ்வளவு பெரிய மக்கள் தொகை ஒரு மக்களாட்சிக் குடியரசாக, கூட்டாட்சிக் குடியரசாக இவ்வளவு காலம் நீடித்திருப்பது கொண்டாடத் தகுந்த சாதனையாகும். மக்கள் தொகை பரப்பில் மட்டுமல்ல; பண்பாட்டுப் பன்மையிலும் பிரமிக்கத்தக்க பரிமாணங்கள் கொண்டது இந்தியக் குடியரசு என்பது முக்கியமானது.
இந்த எழுபத்தாறு ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது; பிரிவினைவாத முழக்கங்கள் எழுந்துள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து இந்தியக் குடியரசு நிலைத்திருக்கக் காரணங்கள் அதன் மக்களாட்சி செயல்முறையும், கூட்டாட்சிக் கட்டுமானமும்தான் என்றால் மிகையாகாது.
கடந்து இருநூற்றைம்பது ஆண்டுகால மானுட வரலாற்றில் ஒரு மக்கள் தொகுதி தன்னுணர்வு பெற்று தங்களை வரையறுத்துக்கொள்ளும்போது, அந்த தொகுதிக்கு வெளியிலிருந்து அதன்மீது செலுத்தப்படும் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைய நினைக்கும்போது தேசியவாத சொல்லாடல் கைகொடுத்துள்ளது. அந்த தேசியவாத சொல்லாடலானது குடியரசாக உருவானபின் உள்நாட்டில் அதிகாரப் பரவலை சாத்தியமாக்கினால்தான் அது உண்மையான மக்களாட்சியாக நிலைத்திருக்கும்.
இந்தியா ஒரு தேசமாக சுதந்திரம் பெற்றபோது பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தது. அது மிகப்பெரும் வன்முறை அலைகளை தோற்றுவித்தது. அதன்பின் இந்தியாவில் அதன் ஒற்றுமை குறித்த அச்சம் உருவானது. அதனால் மாநில அடையாளங்களை வலியுறுத்துவதில் அனைவருக்கும் தயக்கம் இருந்தது.
அரசமைப்பு சட்டம் மாநிலங்கள்தான் அரசுகள், இந்திய ஒன்றியம் என்பது அரசாங்கமே என்று கூறினாலும், அதிகாரங்கள் கூடுதலாகவே ஒன்றியத்தில் குவிக்கப்பட்டன. ஆனால் போதுமான ஒத்திசைவு இருந்தால் இந்த கூட்டாட்சி சிறப்பாக இயங்கும் என்று கருதப்பட்ட து; ஆங்கிலத்தில் இதனைக் கோவாபரேடிவ் ஃபெடரலிசம் என்பார்கள்.
இந்த ஒத்திசைவு செயல்படவேண்டுமானால், ஒன்றிய அரசு தன்னை மாநிலங்களின் தொகுப்பாக உணர்ந்தால்தான் சாத்தியம். ஆனால் அது தன்னை பேரரசாகவும், மாநிலங்களை சிற்றரசாகவும் கருதினால் சாத்தியமாகாது. இந்திய அரசைக் கூட்டாட்சிக் குடியரசாக நினைப்பவர்கள் அதன் கூட்டுறவுத் தன்மையை புரிந்துகொள்வார்கள். ஆனால் அதனை ஒற்றை தேசிய அரசாக கருதுபவர்கள் மாநிலங்களை ஒன்றிய அரசு அடக்கி ஆளவேண்டும் என்ற மனப்பான்மைக்கு ஆட்படுகிறார்கள். இதுதான் நம் குடியரசு இன்றைக்கு சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
அதிகாரப் பரவேலே குடியரசைக் காக்கும்; அதிகாரக் குவிப்பு அதனைக் குட்டிசுவராக்கிவிடும். கெடுவாய்ப்பாக இதனைப் பலரும் தலைகீழாகப் புரிந்துகொள்கிறார்கள்.

குடியரசைக் காக்கும் திராவிடம்
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் பெரியாரின் தலைமையிலான திராவிடர் கழகம், தென்னிந்தியாவை தனிக் குடியரசாக, திராவிட நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியது. அதற்குக் காரணம் வட நாட்டில் உருவான “இந்தி, இந்து, இந்தியா” என்ற முழக்கம். அந்த முழக்கம் பார்ப்பன-பனியா கருத்தியல் மேலாதிக்கத்தில் வடநாடு செல்லும் சாத்தியத்தை உணர்த்தியது.
இந்தி மொழியை தேசிய மொழியாகவோ, அல்லது இந்திய ஒன்றியத்தின் ஒற்றை ஆட்சி மொழியாகவோ ஆக்க வேண்டும்; அதன் மூலம் இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இந்தி மொழியை பயிலும், பயன்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வட நாட்டு தேசியவாதிகளிடம் இருந்தது.
அதனையொட்டி 1937-ஆம் ஆண்டு மாகாண ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரஸ், தமிழ்நாட்டில் இந்தி கற்பதை கட்டாயமாக்கியபோதுதான் முதல் மொழிப்போர் வெடித்தது. சிறையில் நடராசன், தாளமுத்து ஆகியோர் உயிர்த்தியாகம் நிகழ்ந்தது.
தமிழ்நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே துவங்கியிருந்த திராவிட தமிழ் அடையாளம் என்ற தன்னுணர்வு பார்ப்பனீய மேலாதிக்கத்தை எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாக சமஸ்கிருத மேலாதிக்கத்தையும், சமஸ்கிருதமயப்படுத்தப்பட்ட இந்தியின் மேலாதிக்கத்தையும் எதிர்த்தது. இதன் மூலம் இந்தியாவின் பண்பாட்டுப் பன்மையையும், வரலாற்றுப் பன்மையையும், பார்ப்பனீய வர்ண தர்மத்தின் சமூக ஏற்றத்தாழ்வை மறுதலிக்கும் சமத்துவ பார்வையையும் வலியுறுத்தியது.
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, அயோத்திதாசர் உள்ளிட்ட பலரும் முன்னிறுத்திய திராவிட தமிழ் அடையாளம், புதிய சமத்துவ சமூகத்தின் தோற்றத்திற்கான கால்காளோய் கருதப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒவ்வொரு வரலாற்று நகர்விலும் அதற்கேற்றாற்போல முகிழ்ந்தன.

அண்ணா 1942-ஆம் ஆண்டு திராவிட நாடு என்ற பெயரில் ஒரு இதழைத் துவங்கினார். அடுத்த இருபது ஆண்டுகள் தென்னிந்தியாவில் ஒரு தனி கூட்டாட்சிக் குடியரசு முகிழ வேண்டும் எனக் கோரி வந்தார். ஆனால் மக்களாட்சியில் பங்கெடுக்க வேண்டுமானால் அந்தக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்ற நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியபோது, மக்களாட்சிப் பங்கேற்பே முக்கியம் என்று அந்தக் கோரிக்கையைக் கைவிட்டார். இந்திய ஒன்றியம் மாநில சுயாட்சியை, மாநிலங்களின் தன்னாட்சி உரிமைகளை அங்கீகரித்தால் தனியான திராவிட நாடு குடியரசு தேவையில்லை என்று கருதினார். அதிலிருந்து “மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கத்தை தி.மு.க வலியுறுத்தி வருகிறது.
அண்ணாவின் இலட்சியம், திராவிட இயக்கத்தின் இலட்சியம், மாநில சுயாட்சி கொண்ட கூட்டாட்சிக் குடியரசுதானே தவிர பிரிவினை அல்ல. அதனால்தான் இந்தியக் குடியரசின் அடையாளத்தை, இந்தியாவின் இறையாண்மையை, ஒற்றுமையை, பாதுகாப்பை, அதன் பொருளாதார வளர்ச்சியை ஒருபோதும் திராவிட இயக்கம் ஆதரிக்கத் தவறியதில்லை. அதற்கு மாறாக அது ஆரோக்கியமான அதிகாரப் பகிர்வை, சமத்துவ சமூக உருவாக்கத்தை, பண்பாட்டு மறுமலர்ச்சியையே முன்னிறுத்தி வந்துள்ளது. உண்மையான நாட்டுப் பற்றை விழுமியமாகக் கொண்டு இயங்கி வந்துள்ளது. இதற்கான ஆயிரமாயிரம் சான்றுகளைக் காட்டலாம்.
இந்தியக் குடியரசைக் காத்து, அதனை பலவகையிலும் மேன்மையுறச் செய்யும் அரோக்கியமான அணுகுமுறையை, ஒத்திசைவான கூட்டாட்சித் தத்துவத்தை திராவிடம் வலியுறுத்தி வருகிறது. ஆரிய மீட்புவாத சக்திகள் இதன் முற்போக்கான உள்ளடக்கத்தை ஏற்காமல், வர்ண தர்ம மீட்புவாத நோக்கில் ஒற்றை தேசிய அரசின் மேலாதிக்கத்தை வலியுறுத்தி வருகின்றன.
அதிகாரப் பரவலுக்கான குரல்களை பிரிவினைவாதம் என்றும், தேச விரோதம் என்றும் சித்தரிக்க முற்படுகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இந்த பிற்போக்குவாத, மீட்புவாத சிந்தனை தீவிரமடைந்து வருகிறது.
இந்த முரண்பாட்டின் வெளிப்பாடே எதிர்வரும் தமிழ்நாட்டு மாநில தேர்தல் எனலாம். ஐம்பதாண்டுகாலமாக மாநில அரசியலில் தி.மு.க-வின் எதிர்கட்சியாக இருந்து மாநில முரண்கள அரசியலை தகவமைத்து வந்த அ.இ.அ.தி.மு.க-வை பாஜக முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. அதன் வெளிப்பாடாகவே கடந்த வாரம் மதுராந்தகத்தில் நிகழ்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநாடு நடந்தது.

குடியரசைக் குட்டிச்சுவராக்கும் கூடா அணிக் கூட்டம்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று சொல்கிறார்கள். அதற்குத் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க தலைமை வகிப்பதாகக் கூறுகிறார்கள். அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்றும், அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் கூறுகிறார்கள். பெரியதொரு மேடைபோட்டு அதன் இரு புறங்களிலும் பிரதமர் மோடியின் உருவமும், எடப்பாடி பழனிசாமி உருவமும் பொறிக்கப்படுகின்றன. ஆனால் மைக்கின் பின்புறம் தாமரைச் சின்னமே வைக்கப் படுகிறது.
பழனிசாமி பேசும்போது பிரதமரை வியந்தோதிப் பேசுகிறார். ஆனால் பிரதமர் பேசும்போது பழனிசாமியைக் குறித்து, தமிழ்நாட்டில் கூட்டணியின் தலைவரைக் குறித்து எதுவுமே பேசுவதில்லை. அவரை முதல்வராக்குவோம் என்று முழங்குவதில்லை. மாறாக பாஜக என்.டி.ஏ கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையவேண்டும் என்றுதான் பேசுகிறார். அணிக்குள் கருத்தொப்புமை இருந்தால் இப்படி இரட்டைக் குரலில் பேசுவது சாத்தியமேயில்லை என்பது அனைவரும் உணரக்கூடியதுதான்.
இதனைக் கவனமாக சிந்திக்க வேண்டும். ஆளும் கட்சிக் கூட்டணி தனது தேர்தல் முழக்கமாக “தொடரட்டும் ஸ்டாலின்! வெல்லட்டும் தமிழ்நாடு!” என்று கூறுகிறது. அப்போது அதனை எதிர்க்க வேண்டுமென்றால் பழனிசாமியே மீண்டும் முதல்வர் என்று முழங்க வேண்டாமா? அப்படிச் செய்ய பிரதமரால் இயலாது.
ஏனெனில் பாஜக-வின் நோக்கம் மாநிலக் கட்சியான அ.இ.அ.தி.மு.க-வை வலுப்படுத்துவது இல்லை. அதன் நோக்கமே அதனை பலவீனப்படுத்தி அதனை உடைத்து உட்செரித்து பாஜகவை அதனிட த்தில் நிறுத்துவதுதான்.
மலைப்பாம்புகள் அளவில் பெரிய உயிரினங்களை உண்ண நினைக்கும்போது அவற்றை தன் உடலால் சுற்றி வளைத்து நசுக்கும். அவற்றின் எலும்புகளை உடைத்து நொறுக்கிவிட்டு பின் அவற்றை விழுங்கும். பாஜக தன்னைவிட வலுவான மாநிலக் கட்சிகளை அப்படித்தான் இறுக்கிப் பிடித்து உடைத்துப் பிரித்து பின்னர் அவற்றை உள்வயப்படுத்த முயல்கிறது.
சரி, இதெல்லாம் அரசியல் தந்திரங்கள். அதனால் குடியரசிற்கு என்ன பிரச்சினை என்று ஒருவர் கேட்கலாம். அதுதான் முக்கியமான கேள்வி. பாஜக அனைத்து மாநிலங்களிலும், ஒன்றியத்திலும் அதுவே ஆட்சி அமைத்துவிட்டால் அரசமைப்புச் சட்ட த்தை முழுமையாக மாற்றியமைத்துவிடும். இந்தியக் குடியரசை ஒற்றை தேசிய அரசாக மாற்றி, அதிகாரத்தை ஒற்றைப் புள்ளியில் குவித்துவிடும்.
பாஜக-வின் வேர்களான இந்து மகா சபா, ராஷ்டிரிய சுயம்சேவக் சங் ஆகியவை மராத்தியத்தில் உருவானவை. பதினெட்டாம் நூற்றாண்டில் வலுப்பெற்ற மராத்தியப் பேரரசு பேஷ்வாக்கள் ஆட்சியில் வர்ண தர்ம சமூகத்தை வலுப்படுத்தியது. இந்தியா முழுமையையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவர நினைத்தது. அந்தக் கனவு நிறைவேறவில்லை என்பதால் அதன் தொடர்ச்சியாகவே அந்த அமைப்புகள் இந்திய தேசிய அரசை சிந்தித்தன. அதனால் ஒன்றிய அரசை பேரரசாகவும், மாநில அரசுகளை சிற்றரசுகளாகவுமே அவை உருவகப் படுத்திக் கொள்கின்றன.
இந்தியாவின் பன்மைத்துவ பண்பாட்டு வரலாற்றிற்கு அத்தகைய ஒற்றை தேசிய அரசின் மேலாதிக்கம் நன்மை பயக்குமா என்பதை பாஜக சிந்திக்க மறுக்கிறது. இன்றைய நிலையில் பெரு முதலாளிகளை வலுப்படுத்துவது அவசியம் என்ற கருத்தியலும் இருப்பதால் அது பேரரசு வடிவத்தை மீட்கவே விரும்புகிறது. அதற்கு அனுசரணையாக வர்ண தர்ம மீட்புவாதத்தையும் கைக்கொள்கிறது.
உதாரணமாக ஒரு சிறு நிகழ்வைக் காணலாம். இருபத்து மூன்றாம் தேதி ஒரிசா மாநிலத்திலுள்ள கோராபுட் மாவட்ட ஆட்சியர் குடியரசு தினத்தன்று கறி, கோழி, மீன், முட்டை என அசைவ உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என தடை விதித்துள்ளார். மக்களின் உணவிற்கான சுதந்திரத்தை குடியரசு தினத்தன்றே தடை செய்யும் மன நிலையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மதுராந்தகம் மாநாட்டில் பேரரசு உளவியல் மற்றொரு வடிவத்திலும் முழுமையாக வெளிப்பட்ட து. அதுதான் டபுள் எஞ்சின் சர்க்கார் என்ற ஆபத்தான கருத்தாக்கம். இதனை நாம் விரிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மூன்று எஞ்சின்களும், ஒற்றை எஞ்சினும்
நமது குடியரசு அதிகாரப் பரவலை உறுதி செய்ய இறையாண்மையை செங்குத்தாக மூன்றாகவும், கிடைநிலையில் மூன்றாகவும் பிரித்துள்ளது. செங்குத்தாக மக்கள் பிரதிநிதிகள் அவை, அரசு இயந்திரம், நீதிமன்றம் என்ற மூன்று அச்சுகளில் இறையாண்மை பிரிக்கப்பட்டுள்ளது. மக்களாட்சி என்ற பரிமாணத்தை சட்டமியற்றும் அதிகாரமுள்ள மக்கள் பிரதிநிதிகள் அவை கைக்கொள்ளும். ஆங்கிலத்தில் இது legislature எனப்படுகிறது. சட்ட த்தின் ஆட்சி என்ற பரிமாணத்தை நீதிமன்றங்கள் உறுதி செய்யும். இது judiciary எனப்படுகிறது. இவை இரண்டும் இணைந்தது அரசாங்கம் என்னும் executive. இதில் சட்ட த்தின்படி இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் செயல்படுவார்கள்; அவர்களை மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் அமைச்சர்கள் வழி நடத்துவார்கள்.
கிடைநிலையில் ஒன்றிய அரசாங்கம், மாநில அரசு, உள்ளாட்சி அமைப்பு என்று மூன்றாக இறையாண்மை பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலைக்கும் குறிப்பிட்ட அதிகாரப் பிரிவுகள் உள்ளன. நில உரிமை, சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் என முக்கியமான பிரிவுகள் மாநில அரசுகளிடம் உள்ளன. வரி விதிப்பு, ராணுவம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாக அமைப்புகள் ஒன்றிய அரசிடம் உள்ளன. குடியிருப்பு வசதிகள், நிர்வாகம் போன்றவை உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ளன.
மாநில அரசிற்கு தலைமை வகிக்கும் முதலமைச்சரோ, ஒன்றிய அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கும் பிரதமரோ மக்கள் பிரதிநிதிகள் அவையில்தான் கட்சி சார்புள்ளவர்கள். அரசு இயந்திரத்தின் தலைவர்களாக அவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள். அதே போலத்தான் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களும். அனைவருக்கும் பொதுவானவர்கள்.
இந்த அமைப்பின் தத்துவத்தை புரிந்துகொண்டால் எப்போதுமே மூன்று எஞ்சின்கள் மக்களின் வாழ்வை இயக்கிச் செல்கின்றன. எல்லா காலங்களிலுமே மூன்று எஞ்சின் சர்க்கார்கள் சிறப்பாக இயங்கினால்தான் வாழ்வு வளம்பெறும். இதுதான் குடியரசின் தத்துவ அடிப்படை.
பாரதீய ஜனதா கட்சி என்ன செய்கிறது என்றால் பிரதமர், முதலமைச்சர் ஆகியோரை கட்சிக்காரர்களாக, கட்சி சார்புள்ளவர்களாக மாற்றுகிறது. பிரதமரின் கட்சிக்கு எதிர்கட்சிக்கார ர் முதலமைச்சராக இருந்தால் அது ஒற்றை எஞ்சின் சர்க்காராம். இருவரும் ஒரே கட்சியாக இருந்தால் டபுள் எஞ்சின் சர்க்காராம். மிக உயர்ந்த இந்த பதவிகளின் மாண்பையே அவர்கள் சிந்தனை சீர்குலைக்கிறது.
ஒரு பிரதமர் மாநில தேர்தலில் என்ன சொல்லவேண்டும்? “நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் என் தலைமையிலுள்ள ஒன்றிய அரசு எல்லா ஒத்துழைப்பையும் கொடுக்கும். அதற்குப் பயந்து நீங்கள் என் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம். ஆனால் என்னுடைய கட்சியினர் திறமையான ஆட்சியை வழங்குவார்கள். அதன் பொருட்டுத்தான் நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.” என்றுதானே கூற வேண்டும்?
அதற்குப் பதில் நமது பிரதமர் மோடி என்ன சொல்கிறார்? “எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால்தான் உங்கள் மாநிலத்திற்கு டபுள் எஞ்சின் சர்க்கார் கிடைக்கும். அப்போதுதான் மாநிலம் வளர்ச்சியடையும். எங்களுக்கு வாக்களிக்காவிட்டால் நாங்கள் உங்கள் மாநிலத்திற்கு தேவையான உதவிகளைச் செய்ய மாட்டோம்” என்று சொல்கிறார். எப்படி குடியரசுத் தத்துவத்தை குட்டிசுவராக்குகிறார் என்று பாருங்கள்.
எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார்? ஒன்றிய அரசாங்கத்துடன் இணைக்கமாக நடந்து கொள்ள வேண்டுமான். அப்படி என்றால் என்ன? பேரரசரை புகழ்ந்து பாடி பரிசல்கள் பெற வேண்டுமா? மாநில உரிமைகளை வலியுறுத்தினால் இணக்கம் போய்விடும் என்றால் என்ன செய்யவேண்டும்? அடிமை சேவகம் செய்ய வேண்டுமா? எதனால் இப்படி அப்பட்டமாகக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகப் பேசுகிறார்?
ஒத்திசைவுக் கூட்டாட்சி என்றால் ஒன்றிய அரசிற்கு கீழ்படிந்து மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று பொருளல்ல. மாநில உரிமைகளை மதித்து ஒன்றிய அரசாங்கம் நடந்து கொள்வதுதான் ஒத்திசைவுக் கூட்டாட்சி. இல்லாவிட்டால் கூட்டாட்சி என்ற அமைப்பே தேவையில்லையே?

டபுள் எஞ்சின் சர்க்கார்தான் மாநில வளர்ச்சிக்கு உதவுமா?
கூடா அணியின் பிரசாரம் இன்னொரு பிழைவாதத்தையும் பேசுகிறது. டபுள் எஞ்சின் சர்க்கார் என்பது மாநில வளர்ச்சிக்கு அவசியம் என்று கூறுகிறது. இது அப்பட்டமான பொய் என்பதை இரண்டுவிதமாகப் பார்க்கலாம்.
ஒன்று அப்படி பாஜக ஆளும் மாநிலங்கள் பலவும் வளர்ச்சிக் குறியீடுகளில் முதன்மையாக நிற்பதில்லை. மத்தியப் பிரதேசத்தில் இருபதாண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சிதான். வியாபம் ஊழல் என்ற மெகா ஊழல் சாதனையத் தவிர டபுள் எஞ்சின் என்ன சாதித்துள்ளது என்பதைப் பார்க்கவேண்டும். அல்லது மணிப்பூரில் டபுள் எஞ்சின் சர்க்கார் என்ன செய்துள்ளது என்பதையும் ஆராய வேண்டும்.
கடந்த நான்காண்டுகள் ஒன்றியத்தில் பாஜக அரசும், தமிழ்நாட்டில் அதனை கடுமையாகக் கருத்தியல் ரீதியாக எதிர்க்கும் தி.மு.க அரசும் ஆட்சி செய்துள்ளன. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நாட்டிலேயே முன்னணியில் இருப்பதாகத்தானே ஒன்றிய அரசு அமைப்புகளே கூறுகின்றன? ஒன்றிய அரசு ஓரவஞ்சனையாக நடந்துகொண்டாலும், நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டினாலும், அரசியல் தன்னுணர்வு கொண்ட தென் மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கி விடவில்லையே?
பாரதீய ஜனதா கட்சியும், அ.இ.அ.தி.மு.க-வும் மிகவும் தவறான ஒரு பார்வையை முன்வைக்கின்றன. மாநில உரிமைகளைப் பற்றிய முழுத் தன்னுணர்வுடன் ஆட்சி செய்யும் கட்சிகள்தான் மாநிலத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யுமே தவிர, ஒன்றிய அரசின் சவலைப்பிள்ளையாக இருக்க நினைப்பது அவற்றிற்கு உதவாது. மேலும், மாநிலங்களை எங்களை ஆதரித்தால்தான் நிதி ஒதுக்குவோம் என பாஜக மிரட்டுவதை, மாநில கட்சி அ.இ.அ.தி.மு.க கண்டிக்க மறுப்பது அது எந்த அளவு தன்னுணர்வற்ற சேவக மன நிலைக்கு சென்றுவிட்ட து என்பதையே காட்டுகிறது.
டபுள் எஞ்சின் சர்க்கார் போன்ற ஆபத்தான சொல்லாடல்களை விமர்சிக்காமல், வாக்கு எண்ணிக்கை, வெற்றி வாய்ப்பு என்று பேசுவதுதான் அரசியல் விவாதம் என்ற எண்ணம் பொதுமன்றத்தில் நிலவுவது அதைவிட வருந்தத்தக்கது. நம் குடியரசின் எதிர்காலம் அதன் கூட்டாட்சித்தன்மையை வலுப்படுத்துவதிலேயே அடங்கியுள்ளது என்பதை உண்மை நாட்டுப் பற்றாளர்கள் உணர்வார்கள்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
