கர்நாடகா ‘வாய்ஸில்’ பேசும் ’புஸ்ஸி’ ஆனந்த்.. சட்டசபையில் அதிமுக விளாசல்!

Published On:

| By Mathi

TVK Minister Anand Speaking in Karnataka's Voice... AIADMK Slams in Assembly

காவிரி பிரச்சனையில் கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார் சொல்கிற கருத்துகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்தன் சொல்வதாக சட்டசபையில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டினார்.

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட திட்டங்களும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் பெயர்களிலே செயல்படுத்தப்படுகின்ற திட்டங்களும் யார் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் மக்கள் உள்ளங்களிலே இருந்து அகற்ற முடியாது என்பதை இந்த மாமன்றத்திலே நான் பதிவு செய்கிறேன்.

ADVERTISEMENT

இந்த நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை துறை அறிக்கையில் உள்ள பல திட்டங்களுக்கு அதற்கு ஒதுக்கிய நிதியால் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பது ஒரு கேள்விக்குறியே?

பல திட்டங்களுக்கு மிக குறைந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? பல துறைகளில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒதுக்கீட்டை சேர்த்து விவசாய பட்ஜெட்டில் ஒரு பெரிய தொகையை போல காண்பிக்கப்பட்டுள்ளது ஆனால் புதிய முயற்சிகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இன்றைக்கு சட்டப்பேரவையில் நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எங்களுடைய இயக்கத்தினுடைய பொதுச்செயலாளர் சட்டமன்ற கட்சி தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்கள் பேசுகின்ற பொழுது நேரலை துண்டிக்கப்பட்டது. தூய சக்தி; தூய ஆட்சி எதிலும் வெளிப்படை தன்மை என்று பேசுகின்றீர்கள்.. எதற்காக எங்களுடைய கட்சி சட்டமன்ற தலைவர் பேசுகின்ற பொழுது நேரலை துண்டிக்கப்பட்டது?

இன்று காலை கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நீர்வளத்துறை அமைச்சர் பேசுகின்ற பொழுது, ”கர்நாடகாவில் மழை குறைவு; அணைகள் நிரம்பவில்லை” என்று கர்நாடக முதலமைச்சர் கூறியதையே நீர்வளத்ததுறை அமைச்சர் இங்கே குறிப்பிட்டிருக்கிறார்.

ADVERTISEMENT

இது சபை குறிப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளிட்டவை கர்நாடகா அணைகளின் நீர் இருப்பு, மழை அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்ட பின்பே எவ்வளவு தண்ணீர் மாதாமாதம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்பட வேண்டும் உத்தரவிடுகிறது. ஆனால் கர்நாடக அரசு அதை ஏற்று கொள்ளவில்லை. கர்நாடக அரசு ஏற்றுக் கொள்ளாததை நம்முடைய அரசு ஏன் கண்டித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை?

கல்லை விட வலிமையானது இரும்பு,
இரும்பை விட வலிமையானது நெருப்பு,
நெருப்பை விட வலிமையானது நீர்,
நீரை விட வலிமையானது காற்று,
காற்றை விட வலிமையானது மலை!

அந்த மலையைப் போன்ற வலிமையான மனோபாவத்தையும் நெஞ்சுறுதியையும் பெற்றிருப்பவர்கள் அதிமுகவின் ஆணிவேர்களான இயக்கத்தின் தொண்டர்கள்! மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தவவாழ்வு வாழ்ந்து மறைந்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இதே மாமன்றத்தில் முதலமைச்சராக இருந்த பொழுது சொன்னார்களே, “எனக்குப் பின்னாலும் இந்த இயக்கமும் ஆட்சியும் இன்னும் நூறாண்டுகள் இருக்கும்” என்ற நம்பிக்கையோடு சொன்னார்கள்.

  • வாஸ்கோடகாமா நம்பிக்கை புதிய நிலத்தைக் கண்டுபிடித்தது
  • கொலம்பஸின் நம்பிக்கை புதிய நிலத்தைத் தந்தது
  • ஆயுதங்கள் இல்லாத வின்ஸ்டன் சர்ச்சிலின் நம்பிக்கை இங்கிலாந்திற்கு வெற்றியைத் தேடித்தந்தது
  • பிரகலாதனின் நம்பிக்கை கடவுளைக் காட்டியது
  • கீதையின் நாயகன் கண்ணனின் நம்பிக்கை பாரதப் போரில் வெற்றியைப் பெற்றுத் தந்தது
  • 28 ஆண்டு காலம் தனிமைச் சிறையிலே காலாகிரகத்திலே வைத்து பூட்டப்பட்ட நெல்சன் மண்டேலாவின் நம்பிக்கை தென்னாப்பிரிக்க மக்களுக்கு விடுதலையைத் தேடித்தந்தது
  • சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கை ஆதிக்கக் கொடியை அத்துமீறிப் பறக்கவிட வேண்டும் என்று துடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குத் தோல்வியைத் தந்து, ஆண்டாண்டு காலமாக அடிமையாகக் கிடந்த கியூபாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தது

அதுபோல தமிழக மக்களின் எதிர்கால நம்பிக்கை, எங்களின் நம்பிக்கை- பூஜ்யத்திலே இருந்தவர்களே ராஜ்யத்தை ஆளுகின்ற பொழுது நாங்களும் மீண்டும் அம்மாவின் ராஜ்யத்தை அமைப்போம் என்ற உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share