கர்நாடக அணைகளில் நீர் இருந்தும் தண்ணீர் திறக்கவில்லை: எடப்பாடி குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS

தமிழக வெற்றி கழக அரசின் முதல் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் உரை மீதான விவாதம் தொடங்கியது.

இதனிடையே, மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதித்து வந்தனர். அப்போது முதலமைச்சர் பேச எழுந்த நிலையில், சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ள தங்களைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ADVERTISEMENT

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பேசிய பிறகு, பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

காவிரிப் பிரச்சனை மற்றும் டெல்டா விவசாயிகள் குறித்தும் இரண்டு தீர்மானங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். மேகதாது தொடர்பான தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; ஆனால், அதில் கொண்டுவரப்படும் திருத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரை நாம் பல போராட்டங்களை நடத்தி வாதாடியே காவிரித் தண்ணீரைக் பெற்றுத் தந்துள்ளோம்.

ADVERTISEMENT

தற்போது கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. தற்போது கர்நாடக அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால், அங்கிருந்து உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே, காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அரசின் கூட்டணிக் கட்சிகளும்கூட இதையே வலியுறுத்தியுள்ளன.

டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தச் சமயத்தில் குறுவை சாகுபடி செய்வார்கள். இந்த ஆண்டும் சாகுபடி செய்த நிலையில், போதிய தண்ணீர் கிடைக்காமல் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுப் பயிர்கள் கருகிச் சேதமடைந்துள்ளன.

ADVERTISEMENT

எனவே, பயிர்களை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்குத் தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி பேரவையில் வலியுறுத்தினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share